;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (04.08.2018)

0

கடந்த 07 மாதத்தில் 294, 611 வாகனங்கள் பதிவு

இந்த ஆண்டின் கடந்த 07 மாத காலப்பகுதியில் 294, 611 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறுகிறது.

அவற்றில் அதிகமானவை மோட்டார் சைக்கிள் என்பதுடன் அவற்றின் எண்ணிக்கை 208,750 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்தக் காலப்பகுதியில் 49,430 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 1000 சிசி இற்கு குறைவான கார்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி 1000 சிசி இற்கு குறைவான கார்கள் 41,506 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அந்தக் காலப்பகுதியில் 11,150 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறியுள்ளார்.

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

இரத்தினபுரி பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி அகழ்வுப் பணியில் ஈடுபட்ட07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கஹவத்தை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இரத்தினபுரி, மல்வல பிரதேசத்தில் இரண்டு இடங்களில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் இரத்தினபுரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையில் திறப்புவிழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில், 340 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடத்தின் 5 அடுக்கு மாடி கட்டடத்திறப்பு விழா, எதிர்வரும் 07ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 810 மில்லியன் ரூபாய் செலவில் 5 அடுக்குகளில் கட்டப்படவுள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்விப்பீடம், 740 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள உள்ளக அரங்கத்தை உள்ளடக்கிய கேட்போர் கூடம் ஆகியவற்றுக்கான அடிக்கல்நாட்டும் வைபவமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் வீ.கனகசிங்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, எதிர்வரும் 7ஆம் திகதி பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எசல பெரஹரா 12ஆம் திகதி ஆரம்பம்

தலதா மாளிகையின் எசல பெரஹரா, எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, தியவதனநிலமே நிலங்க தெல தெரிவித்தார்.

இதற்கமைய, 16ஆம் திகதி இரவு கும்பல் பெரஹராவுடன் ஆரம்பித்து 25ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள ரந்தோலி பெரஹரா நடைபெறும்.

எசல பெரஹரா, எதிர்வரும் 26ஆம் திகதி பகல் நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + sixteen =

*