;
Athirady Tamil News

நீதியமைச்சருக்கு த.தே.கூ கண்டனம் !!

0

நீதி அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நன்றாக கதை அளந்து இருக்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது,

நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம்.

அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா?

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.

அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவுக்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.