;
Athirady Tamil News

முஸ்லிம் சமூகத்துக்கான சரியான அரசியல் வழித்தடம் எது? (கட்டுரை)

0

இலங்கையின் அரசியல், வேறு விதமான பரிமாணத்தை எடுத்து, மாறுபட்ட வழித்தடத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் எவ்வாறு முன்னகரப்போகின்றது என்ற கேள்வி, சிந்திக்கும் ஆற்றலுள்ள முஸ்லிம் மக்களுக்கு எழுந்திருக்கின்றது.

தேர்தல் முடிவடைந்த பிறகு, எந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு கிடைக்கப் போகின்றது என்ற பேச்சு, முஸ்லிம் அரசியல் அரங்கில் நிரம்பி வழியும். ஏதோ அமைச்சு கிடைத்தால், முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, சாதனை நிகழ்த்திக் காட்டுவார்கள் என்பதாகவே அந்த ‘அலப்பறை’கள் இருக்கும்.

அதுபோல, புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னர், ‘அந்த முஸ்லிம் கட்சி தலைவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படப் போகின்றது’, ‘இந்த பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துடன் பதவிக்காக இணையப் போகின்றார்’ என்ற ஊகக் கதைகள், இப்போது பேசுபொருளாகி இருக்கின்றன.

முஸ்லிம் அரசியல் அணிகளும் சில முஸ்லிம் பொதுமக்களும் எந்தளவுக்கு குறுகிய ஒரு வட்டத்துக்குள் சிந்தித்து செயற்படுகின்றார்கள்? நமது அரசியல் தொலைநோக்கு, எந்தளவுக்கு மழுங்கடிக்கப்பட்டு இருக்கின்றது என்பதற்கு, இதுபோன்ற மட்டகரமான கருத்தாடல்கள் நல்ல உதாரணங்களாகும்.

இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில், எல்லா விடயங்களிலும் அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும். துறைசார்ந்த நியமனங்களில், இன விகிதாசாரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறே, அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதிலும் இரு நிலைப்பாடுகள் இல்லை.

ஆனால், இலங்கை முஸ்லிம் மக்களுக்கான அரசியல் என்பது, வெறும் அமைச்சுப் பதவிகளோடும், ஆட்சியாளர்கள் அல்லது பெரும்பான்மைக் கட்சிகளிடமிருந்து கைமாறாக கிடைக்கின்ற ஒருசில வெகுமதிகளோடும் முடிந்து விடுகின்றதா என்பதுதான், விடை தேடப்பட வேண்டிய வினாவாகும்.

ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ, எந்தவொரு பெருந்தேசிய அரசியல் தரப்புக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால், அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை தம்வசம் வைத்திருப்பதால், முஸ்லிம் சமூகத்தின் உரிமைசார் நெருக்கடிகள், நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்றால், ‘பதவி வேண்டும்’ என்ற நிலைப்பாட்டில் ஒரு நியாயம் இருப்பதாகச் சொல்லலாம்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளடங்கலாக, முஸ்லிம் தனித்துவ கட்சிகள் சார்பிலும், பெரும்பான்மைக் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்தும் கடந்த காலத்தில் பல எம்.பிக்கள் பலமிக்க அமைச்சர்களாக இருந்தார்கள். அரச மேலிடத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், கடந்த 25 வருடங்களில் மேற்குறிப்பிட்டவாறான அபூர்வங்கள் எதுவும் நடந்ததில்லை.

முஸ்லிம் கட்சித் தலைவர்கள், சமூகத்தின் காவலர்கள் போல கதையளந்து கொண்டு, ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்பவர்கள், தமக்கு கிடைத்த அதிகாரத்தை, பதவியை, வாய்ப்பைப் பயன்படுத்தி, சமூகத்தின் அபிலாஷகளை நிறைவேற்றியதாக ஞாபகத்தில் இல்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அதற்குள் ஆயிரம் உள்முரண்பாடுகளும் விமர்சனத்துக்குரிய செயற்பாடுகளும் இருந்தாலும் கூட, ஒப்பீட்டளவில் சிறப்பானதோர் அரசியலைச் செய்து வருகின்றது. எந்த அமைச்சுப் பதவியும் இல்லாமல், முட்டுக் கொடுக்கும் அரசியலைச் செய்யாமல் தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை கூட்டமைப்பு முன்கொண்டு சென்றிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆயினும், தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தமை, கைதிகள் விடுதலை, உரிமைசார்ந்த விடயங்கள் என சிலவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றது. இந்நிலை முஸ்லிம் அரசியலில் கிடையாது.

முஸ்லிம்களுக்கு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இரண்டு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் இருக்கின்றன. இனவிகிதாசார ஒதுக்கீட்டில் பாரபட்சம் உள்ளது. அரச நிர்வாக மற்றும் உயர் பதவிகளில் உரிய பங்கு கிடைப்பதில்லை. தென்னிலங்கை, மலையக முஸ்லிம்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகள் உள்ளன.

எனவே, இவற்றில் ஒன்று இரண்டைத்தானும் கடந்த காலத்தில் அதிகார கதிரைகளில் இருந்த முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்கள் தீர்த்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும், எம்.எச்.எம். அஷ்ரபின் பிற்காலத்தில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் எதுவும் சரியான வழித்தடத்தில் முன்கொண்டு செல்லப்படவில்லை என்பதுதான் யதார்த்தமாகும்.

எனவே, இன்று முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டியதும் கலந்துரையாட வேண்டியதும் ‘கோட்டபாய பெயில் ஆகிவிட்டார்’, ‘ரணிலும் பெயில் ஆகிவிடுவார்’ என்பதையல்ல! மாறாக, ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக ‘பெயிலாகி’க் கொண்டே இருக்கின்ற முஸ்லிம் அரசியலை புனருத்தாரணம் செய்து, சித்தியடையச் செய்வதைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

எல்லாச் சமூகங்களையும் இனக் குழுமங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளைப் போல, முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இரண்டு வகையான வேலைத் திட்டங்கள் இருக்க வேண்டும். ஒன்று, சமூகம் சார்ந்தது. மற்றையது, நாட்டுக்குப் பொதுவான வேலைத் திட்டமாகும்.

நாட்டுக்கு பொதுவான வேலைத்திட்;டம் என்பது, முஸ்லிம் என்ற இன அடையாளத்துக்கு வெளியில் சென்று, நாட்டிலுள்ள எல்லா மக்களுக்குமாக முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளாக அமையும். இது காலச்சூழல்களைப் பொறுத்து பெரும்பாலும் மாறிக் கொண்டே இருக்கும்.

தாம் சார்ந்த மக்களுக்கான வேலைத்திட்டம், நிலையானதாக இருக்கும். அதனுடன் புதிதாக உருவாகின்ற பிரச்சினைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். சமூகத்துக்கான பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆயினும், பெருந்தேசிய அரசியலில் ஏற்படுகின்ற மாறுதல்களைப் பொறுத்து, அதனை அடைந்து கொள்வதற்கான வழித்தடம், அணுகுமுறை மாறுபடக் கூடும். ஆனால், சென்றடைய வேண்டிய அடிப்படை இலக்கு நிலையானதாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், இப்போதும் கடந்த காலத்திலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த, வகிக்கின்ற முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், இவ்வாறான ஓர் இலட்சணத்துடன் பயணித்தார்கள் என்று ஆறுதல் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஒரு மாணவன் புத்திசாலியாக இருந்தால், அவனது பெறுபேறுகளில் அது தெரியும். ஒரு விவசாயி சிறப்பாக பயிர்ச் செய்கை மேற்கொண்டால் அவனது அறுவடை கனதியாக இருக்கும்.

அதுபோல ஓர் அரசியல் தலைவர், தனது சமூகம் சார்ந்த அரசியலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்காக வெற்றிகரமான அணுமுறையொன்றை பின்பற்றினால், அதன் பலாபலன்கள் சமூகத்துக்குக் கிடைக்க வேண்டும். ஆனால், இத்தனை கட்சிகள், தலைவர்கள், எம்.பிக்கள் உருவான பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.

முஸ்லிம்களுக்கு இணக்க அரசியலே பொருத்தமானது என்பது பொதுவான அபிப்பிராயமாகும். அதனடிப்படையில் ஏதோ ஒரு தருணத்தில் அரசாங்கம் மற்றும் பெருந்தேசியக் கட்சிகளுடன் இணங்கிப் போக வேண்டி வரும் என்பதும் இயல்பானது, இருப்பினும் அதிலிருந்து சமூகத்துக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும்.

தனித்துவ அடையாள அரசியலையோ அல்லது பெருந்தேசியக் கட்சிகளின் ஊடான அரசியலையோ முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த முஸ்லிம் எம்.பிக்கள் பலர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்கள். சிலர் ஓய்வுபெறும் காலத்தில் உள்ளனர். வேறுசிலர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், சமூகத்தின் நீண்டகால பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

பிரச்சினைகள், அபிலாஷைகள் தீர்க்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, பல்லின நாடொன்றுக்குப் பொருத்தமான குணாம்சங்களுடன் முஸ்லிம் சமூகம் சரியாக அரசியல் மயப்படுத்தப்படவும் இல்லை. மக்களின் வாக்குகளை சில்லறையாக வாங்கிச் சென்று, மொத்தமாக கைமாற்றுகின்ற அரசியலைத்தான் இப்போதெல்லாம் பேரம்பேசும் அரசியல் என்று சொல்லி, முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள், பிரச்சினைகள் என்பவை முஸ்லிம் எம்.பிக்களின் அபிலாஷைகளோ அவர்களைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தின் தேவைகளோ அல்ல. அது, 22 இலட்சம் மக்களுடன் தொடர்புபட்டதாகும்.

பிரேமதாஸவுக்கும் சந்திரிகாவுக்கும் மஹிந்தவுக்கும் கோட்டாபயவுக்கும், ரணிலுக்கும், சஜித்துக்கும் எவ்வித சமூக பலனும் இல்லாமல், வெறுமனே முட்டுக்கொடுப்பதற்குப் பெயர் தனித்துவ அடையாள அரசியலும் இல்லை. பெருந்தேசிய கட்சிகள் ஊடான சமூக அரசியலும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, இதனை மனதில் கொண்டு, சரியான வழித்தடத்துக்கு முஸ்லிம் அரசியலைக் கொண்டு வரவேண்டும். அதன்பின்னர் சமூக வெற்றிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி நகர வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாமல் தலைவர்களும் எம்.பிக்களும் தமக்குத் தேவையானதை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்த அரசியலைச் செய்தால், அதற்கு வேறு பெயர்தான் வைக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.