;
Athirady Tamil News

சீனாவுக்கு சிம்ம சொப்பனமாகுமா ’ஐஎன்எஸ் விக்ராந்த்’? (கட்டுரை)

0

இந்தியாவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க் கப்பலான “ஐஎன்எஸ் விக்ராந்த்” (INS Vikrant) களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசியல் பலப்பரீட்சைக்கும், ஆதிக்க போட்டிக்கும், களமாக மாறியிருக்கும் கடல் பிராந்தியங்களில் குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற அதி நவீன இந்திய போா்க்கப்பல் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் கேரளாவிலுள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய, அதி நவீன போர்க்கப்பலாகும்.

இந்தக் கப்பலில் சுமார் 1,600 பணியாளர்களை ஏற்றிச் செல்ல முடியும். ஹெலிகொப்டர்கள் உட்பட போா் விமானங்களை சுமந்துக் கொண்டு, ஒரு பெரும் படையை இந்தக் கப்பலால் கடலில் நகா்த்திச் செல்ல முடியும் என இந்திய கடற்படை கூறுகிறது.

262 மீட்டர் நீளமும், 59 மீட்டர் உயரமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட. இதன் மொத்த எடை 40,000 தொன்களாகும். 14 அடுக்குகளைக் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் இருக்கின்றன. கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் இருப்பதற்கான வசதிகள் உள்ளன.

இந்தக் கப்பல் 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைச் சுமந்து செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது.

கப்பலின் உள்ளே இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கூடிய முழுமையான மருத்துவ வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 2,000 ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகப் பொிய சமையலறையொன்றும் உள்ளதாக, விக்ராந்தின் வடிவமைப்பாளரான மேஜர் மனோஜ் குமார் ஊடகங்களுக்கு தொிவித்திருந்தாா்.

கப்பலின் உருவாக்கத்துக்காக பயன்படுத்தப்பட்ட உருக்கு மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானது என்றும் அவா் கூறியுள்ளாா்.

உலகின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானப் பணியின் காலம் 17 வருடங்களாகும்.

விக்ராந்த் என்ற பெயர் “சக்தி வாய்ந்த” அல்லது “தைரியம்” என்பதற்கான சமஸ்கிருத சொல்லாடலாகும். விக்ராந்த் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலாக இந்திய கடற்படையில் இணைந்துள்ளது.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும் விக்ராந்த் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டது. முதலாவது கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் 1961ஆம் ஆண்டு பிாித்தானிவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது. 1997ஆம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்றது.

இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகும். விக்ரமாதித்யா தொடா்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

2004ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட போா்க் கப்பலே ஐஎன்எஸ் இந்த விக்ரமாதித்யா. இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவை பாதுகாப்பதற்காக இந்தியா இந்தக் கப்பலை கொள்வனவு செய்திருந்தது.

இந்த விக்ரமாதித்யாவுடன், புதிதாக களமிறக்கப்பட்டிருக்கும் விக்ராந்தும் ஒன்றாக இணைந்து செயற்படவிருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது.

மிகப் பொிய திறன்களால் கட்டமைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்தை களமிறக்கியதன் மூலம், அண்மைக் காலமாக இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சீனாவின் கடல்சாா் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்தியா திடமாக நம்புகிறது.

கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி, கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் இந்த விமானம் தாங்கி கப்பலின் இயக்கத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

“ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது வெறும் போர்க்கப்பல் அல்ல. 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்” என்று பிரதமா் மோடி அந்தக் கப்பலுக்கு புகழாரம் சூட்டியிருந்தாா்.

ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற கப்பலின் உருவாக்கத்தின் மூலம், இந்தியா தனது இராணுவ பலத்திற்கு வலு சோ்த்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

என்றாலும், இந்தக் கப்பலின் உருவாக்கத்தின் மூலம் இந்தியா தனது அறிவியல், தொழில்நுட்ப திறமைகளை வெளியுலகிற்கு காட்டியுள்ளது என்பதை விட, புவிசாா் அரசியலில் இராணுவ ரீதியல் தனக்கான அரண் ஒன்றை தயாாித்துக் கொள்ளும் வல்லமை தனக்கிருக்கிறது என்ற செய்தியைத் தான் சொல்லியிருக்கிறது.

இந்தக் கப்பலின் உருவாக்கத்திலுள்ள அறிவியல், அதி நவீன தொழில் நுட்ப மதிப்பீடுகளை விட, இந்தக் கப்பலின் உருவாக்கத்தின் பின்னணியிலுள்ள பிராந்திய மற்றும் புவியரசியலே இன்று பேசு பொருளாகியிருக்கிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மும்முனை அரசியல் அதிகார பலப் பரீட்சையே இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.

சமீப காலமாக, இந்திய பெருங்கடலை ஆக்கிரமித்து வரும் சீனாவின் கடல்சாா் இராணுவ தலையீட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கவே விக்ராந்த் போா்க் கப்பல் களமிறக்கப்பட்டிருப்பதாக கூறும் இந்திய ஊடக செய்திகள் கவனத்திற்குாியன.

சா்வதேச ஊடகங்கள் கூட விக்ராந்த் கப்பலின் உருவாக்கத்தை இந்த புவியரசியலின் பின்னணியை வைத்தே பேசி வருகிறது.

இந்த விமானம் தாங்கி கப்பல், இந்தியாவை உலகின் கடற்படை பலம் கொண்ட நாடுகளின் உயரடுக்கில் சேர்த்துள்ளதாக சீஎன்என் ஊடகம் கூறியுள்ளது. AFP செய்தி ஊடகம், பிராந்தியத்தில் சீனா வளர்த்து வரும் இராணுவ உறுதிப்பாட்டை தகா்க்கும் இந்தியாவின் முயற்சிகளில் ஒரு மைல்கல் என்று பாராட்டியுள்ளது.

நீரிலும், நிலத்திலும் சீனா தனது ஆதிக்கத்தையும், மோதலையும் உருவாக்கி வருவதாக, இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியப் பெருங்கடலை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருவதாக விசனம் தெரிவித்து வருகிறது.

சீனாவின் சமகால நகா்வுகள், அது கட்டமைத்து வரும் கடல்சாா் ஆதிக்க வலையமைப்பை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அது தனது இருப்பை இந்தியப் பெருங்கடல், மேற்கு பசிபிக் கடல் மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்தி வந்துள்ளது.

சீனாவின் கடற்சாா் ஆதிக்கம் பல நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. ஆபிாிக்க நாடான ஜிபூட்டியில் ஒரு கடற்படைத் தளத்தை சீனா கையகப்படுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தானில் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகத்தை மேம்படுத்தி அதனை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. சீனக் கடற்படை தனக்கு தேவையானவாறு தள வசதிகளைப் பயன்படுத்துவதற்கு இவற்றின் மூலம் சீனாவுக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியான் (Fujian) என்ற அதி நவீன கப்பலை அறிமுகப்படுத்தியது. சீனாவிடம் ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கி போா்க் கப்பல்கள் இருக்கின்றன.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷன்டொங் (Shandong ) மற்றும் 1998 இல் உக்ரைனிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு சீனாவில் மீள்கட்டமைக்கப்பட்ட லியோனிங் (Liaoning) என்ற கப்பல்கள் இவற்றில் அடங்குகின்றன. மூன்றாவது விமானம் தாங்கி கப்பலாக தற்போது புஜியானை சீனா களமிறக்கியுள்ளது.

இது தவிர,சீனா மேலும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை விரைவாக உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. செயற்கைக்கோள் பட மதிப்பீடுகளின்படி ஏறக்குறைய 320 மீற்றர் நீளமும், கிட்டத்தட்ட 80 மீற்றர் அகலமும் கொண்ட விமானத் தளத்துடன் இந்தக் கப்பல்கள் அமைக்கப்படுதாக கூறப்படுகிறது.

தனது இராணுவ, வணிக நலன்களை இலக்கு வைத்து சீனா கடலிலும், தரையிலும் தனது கட்டமைப்பை நிலை நிறுத்தும் செயற்பாட்டை தொடராக செய்து வருகிறது.

கடற்பிராந்தியங்களில் மோப்பம் பிடித்து, சுற்றித்திாியும் சீன உளவுக் கப்பல்களால் ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அடிக்கடி சா்ச்சைகள் எழுந்து வருகின்றன.

கடந்த மே மாதம் சீனாவின் உளவுத்துறைக் கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஐம்பது கடல் மைல் தொலைவில் தாித்து நின்று உளவு பாா்ப்பதாக அவுஸ்திரேலியா குற்றம் சாட்டியதோடு, பிராந்தியத்தில் சீனாவின் நடத்தை பற்றி கவலையையும் வெளியிட்டிருந்தது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலான யுவான் வேங் 5 என்ற கப்பலை ஏழு நாட்களுக்கு தாித்து நிறுத்துவது தொடர்பாக சா்ச்சை எழுந்தது. இதில் இந்தியாவும், சீனாவும் முரண்பட்டு மோதிக் கொண்டன.

தனது நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, இந்தியா குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை கடுமையாக எதிர்த்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் தற்போது செயற்பட்டு வருகிறது.

சீன முதலீட்டால் நிா்மாணிக்கப்பட்ட இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, ஒரு நூற்றாண்டு கால குத்தகைக்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் இந்திய தரப்பில், இலங்கை மீதான அதிருப்தியை உருவாக்க காரணமாகியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தனது கடற்படையை பலப்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு, இந்தியா நான்கு போர்க்கப்பல்களை தென்கிழக்கு ஆசியா, தென் சீனக் கடல் மற்றும் இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளுக்கு அனுப்பி “குவாட்” (Quad – the Quadrilateral Security Dialogue) கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுடன் சோ்ந்து பயிற்சிகளில் இறக்கியது.

குவாட் என்பது, வளா்ந்து வரும் சீன ஆதிக்கத்தை எதிா்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு கூட்டணியாகும். குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

கடல் ரீதியிலான தனது ஆதிக்க கட்டமைப்பை நிறுவுவதற்கு சீனா முத்துக்களின் சரம் (String of Pearls) என்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

முத்துகளின் சரம் என்ற திட்டம் சீனப் பெருநிலப்பரப்பில் இருந்து ஆப்பிரிக்காவின் கொம்பு என வா்ணிக்கப்படும் சூடான் துறைமுகம் வரையில் நீண்டிருக்கும் சீன இராணுவ, வணிகத் தளங்களின் வலையமைப்பாகும்.

முத்துக்களின் சரம் (String of Pearls) என்ற இந்த கடலாதிக்க வலையமைப்பு மலாக்கா ஜலசந்தி, ஹார்முஸ் ஜலசந்தி, மண்டேப் ஜலசந்தி, பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் மற்றும் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை உள்ளடக்கிய முக்கியமான கடல் பிராந்தியங்கள் ஊடாக செயற்படுகிறது.

சீனா தனது பாதுகாப்பு மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு இன்றியமையாத இந்திய-பசிபிக் பகுதியைக் கட்டுப்படுத்த நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

சீனாவின் முத்துக்களின் சரம் என்ற செயற்பாட்டு திட்டத்தின் கீழ் உலகின் பல முக்கிய கடல் பிராந்தியங்கள் அதன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியுள்ளன. பல நாடுகள் அதன் கடன் பொறி ராஜதந்திரத்தில் சிக்கி தனது நாட்டின் கேந்திர முக்கியத்தும் மிக்க இடங்களை சீனாவிடம் பறி கொடுத்து வருகின்றன.

இத்தகைய ஒரு பின்னணியில்தான், ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போா்க் கப்பலை இந்தியா களமிறக்கியிருக்கிறது. இந்த செய்தி, சீனாவின் கடலாதிக்கத்திற்கு எதிராக இந்தியா எழுந்திருக்கிறது என்ற சமிக்கையை சீனாவுக்கு வழங்கியிருக்கிறது.

‘விக்ராந்த்’ போா்க் கப்பலின் உருவாக்கத்தின் மூலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தர வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதாக சா்வதேச மதிப்பீடுகள் தொிவிக்கின்றன.

இந்தியா களமிறக்கியிருக்கும் இந்த அதி நவீன ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல், சீனாவின் கடலாதிக்க வெறியை கட்டுப்படுத்துமா? சீனாவுக்கு சிம்ம சொப்பனமாகுமா? பொறுத்திருந்து பாா்ப்போம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.