;
Athirady Tamil News

அடக்குமுறை பயனளிக்குமா? (கட்டுரை)

0

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, அரசாங்கம் அந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதை விட, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் குரலை அடக்குவதிலேயே, கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

ஜனநாயகத்தைப் பற்றி பெரிதாகப் பேசி, அதனாலேயே மேற்குலக அரசியல் தலைவர்களின் மதிப்பைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் காலத்திலேயே, இந்நிலைமை ஏற்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ளக்கூடிய விடயமாகும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, மக்கள் வெறிகொண்டு இலட்சக் கணக்கில் வீதியில் இறங்கி பேராட்டம் நடத்தியதன் விளைவாகவே, பாராளுமன்றத்தில் வெறும் தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை மட்டும் வைத்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மே மாதம் பிரதமராகப் பதவி ஏற்க முடிந்தது. அவ்வாறு பதவி ஏற்றவுடன் அவர், அந்தப் போராட்டக்காரர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக அறிவித்தார்.

அதற்காக அவர், தமது கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜேவர்தனவுக்கும் தமது கட்சியின் தலைவர்களின் ஒருவரான கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கும் ஆலோசனைகளையும் வழங்கினார். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அதே போராட்டத்தின் விளைவாக, ஜனாதிபதி பதவியை ஏற்ற ரணில், அந்தப் போராட்டக்காரர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார்.

​ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவி ஏற்ற உடனே, போராட்டக்காரர்களை வேட்டையாட ஆரம்பித்தார். பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம், எந்தவொரு கட்சியினதும் வழிநடத்தலின்றி, சுயமாக களத்தில் இறங்கிய பொதுமக்களாலும் பல்வேறு குழுக்களாலுமே மேற்கொள்ளப்பட்டது. அதன்போது சில போராட்டக்காரர்கள் களத்தில் முன்னணியில் இருந்து செயலாற்றினர். அவர்களிலும் மிக முக்கியமானவர்களுக்கு எதிராக, அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து வருகிறது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே உள்ளிட்ட சிலருக்கு எதிராகவே அச்சட்டம் பாவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு பொருந்துவதாக இல்லை என்பதாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனையை ஏற்று, இந்தச் சட்டத்தை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே அதே சட்டம், போராட்டக் களத்தில் முன்னணி வகித்தவர்களுக்கு எதிராக உபயோகிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே, அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்த முன்வந்தது. அதற்காக அந்த அரசாங்கம், ஒரு சட்ட வரைவையும் தயாரித்தது.
பின்னர், “வெளிநாட்டவர்களின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட சட்டம்” எனக் கூறி, கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், 2020ஆம் ஆண்டு அந்தச் சட்ட வரைவைத் தூக்கி எறிந்தது. பின்னர், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குதலின் காரணமாக, கோட்டாவின் அரசாங்கமும் மற்றொரு வரைவை தயாரித்தது.

அதாவது, தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சர்வதேச தரத்தில் இல்லை என்பதை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஏற்றுக் கொண்டது. இந்தநிலையில் தான், அரசாங்கம் இன்னமும் அதனை சிலருக்கு எதிராகப் பாவிக்கின்றது.

இவ்வாறு இருக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி, கொழும்பில் சில இடங்களை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். இதன் நோக்கம், கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுப்பதே ஆகும். அந்த வர்த்தமானியின் பிரகாரம், அதில் குறிப்பிடப்பட்ட இடங்களில் கூட்டங்களை அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாயின், பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும். பொலிஸார் வழமைப் போல் அனுமதி வழங்குவதாயின், இந்த வர்த்தமானி அவசியமே இல்லை. அவர்கள் அனுமதி வழங்க மாட்டார்கள் என்பதே, இதன் மூலம் தெரிகிறது.

இதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில அமைப்புகளாலும் நபர்களாலும் அடிப்படை மனித உரிமைகள் மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அரச படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் நடைபெற்ற காலத்தைப்போல் படைமுகாம்களோ அல்லது அரச தலைவர்களினதும் படைத் தளபதிகளினதும் வீடுகள் தாக்கப்படும் அபாயம் இல்லாத நிலையில், பாதுகாப்பு வலயங்கள் எதற்காக என்பதே எதிர்க்கட்சிகளின் கோள்வியாகும்.
சாத்வீகமான முறையில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் சட்டவிரோதமான செயல்களாக அரசியலமைப்பு கருதவில்லை.

அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரத்துக்கு இந்த வர்த்தமானி தடையாக அமைவதால், உயர்நீதிமன்றம் பெரும்பாலும் நிராகரிக்கும் சாத்தியம் இருந்த நிலையில், ஜனாதிபதி ஒக்டோபர் முதலாம் திகதி அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவிப்பதற்கு எதிராக, சர்வதேச ரீதியில் கண்டனங்கள் எழுந்ததைப் போலவே, இந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் கண்டனங்கள் எழுந்தன. இப்போது அரசாங்கம், மற்றோர் அடக்குமுறைச் சட்டத்தையும் கொண்டுவர முயல்கிறது. மறுவாழ்வளிக்கும் போர்வையில், சிலரை தடுத்து வைப்பதே அதன் நோக்கமாகத் தெரிகிறது.

‘மறுவாழ்வுச் செயலணிச் சட்டம்’ (Bureau of Rehabilitation) என்று புதிய சட்டம் அழைக்கப்படுகிறது. தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், நாசகார செயல்களில் ஈடுபட்ட நபர்கள், போதைப் பொருட்களுக்கு அடிமையானோர் ஆகியோருக்கு மறுவாழ்வளிப்பதே அதன் நோக்கம் என அதன் அறிமுக வாசகங்கள் மூலம் கூறப்படுகிறது.

போதைப் பொருட்கள் மீது தங்கியிருப்போர், முன்னாள் போராளிகள், வன்முறையைக் கையாளும் தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அவசியமாகும். ‘ஏனைய குழுக்களின்’ உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இதன் நோக்கம் என அதில் மற்றோர் இடத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ‘ஏனைய குழுக்கள்’ எவை என அதில் கூறப்படவில்லை.

அதேவேளை, ஒருவர் தொடர்பாக மறுவாழ்வு அவசியமா என்பதைத் தீர்மானிப்பது யார் என்பதும் அதில் குறிப்பிடப்படவில்லை. தீவிரவாத அல்லது நாசகார செயல்கள் என்றால் என்ன என்பதும் விவரிக்கப்படவில்லை. இதுவும் அரச எதிர்ப்பு போராட்டங்களை அடக்கும் நோக்குடனான சட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவை அனைத்தும், மக்கள் ஏன் ஆரப்பாட்டம் நடத்துகிறார்கள் என்பதை ஆராயாமல் ஆரப்பாட்டங்களை அடக்க எடுக்கும் முயற்சிகளாகும். வடக்கு, கிழக்கில் ஆயுதப் போரோ அல்லது தென்பகுதி போராட்டங்களோ, மனநோயாளர்களால் நடத்தப்பட்டவையல்ல. அவற்றுக்கு காரணங்கள் இருந்தன; இருக்கின்றன. அவற்றைத் தீர்க்காமல், அடக்குமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

ஓரு காலத்தில், கடும் அடக்குமுறை ஆட்சியை, ஐக்கிய தேசிய கட்சி நடத்தி வந்தது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் 2000ஆம் ஆண்டு முதல் அது ஓரளவுக்கு ஜனநாயகத்தை மதிக்கும் கட்சியாக மாறியது. ஜனாதிபதி சந்திரிகா, புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நோர்வேயின் மத்தியஸ்தத்தை நாடிய போது, ரணில் இனவாதத்தை தூண்டாமல், பேச்சுவார்த்தையை ஆதரித்தார்.

2001ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்று, தாமே அந்தச் சமாதான திட்டத்தை முன்னகர்த்திச் சென்றார். ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த அவதூறுச் சட்டத்தை இரத்துச் செய்தார். 2015ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராகி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, இணைஅனுசரணை வழங்கினார். இப்போது அவரது தலைமையிலேயே அடக்குமுறை வலுப்பெறுகிறது.

சர்வதேச ரீதியில் இதனால் அரசாங்கம் சில நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது. மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக, குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் காரணமாக, இலங்கைக்கு வழங்கி வரும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இரத்துச் செய்வது தொடர்பாக ஆராயுமாறு கடந்த வருடம் ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக் கொண்டது.

ஓகஸ்ட் மாதம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர். கருத்துச் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை ஆகியவற்றை குறிப்பிட்டு, அரசாங்கம் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை, மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் அப்போது கூறியிருந்தனர். இராஜதந்திர பாணியில் வார்த்தைகளைப் பாவித்து அவர்கள் தெரிவித்த இந்தக் கருத்தின் அர்த்தத்தை, அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

விரைவில், இலங்கைத் தொடர்பாக அறிக்கை வெளியிடப்படப்பட இருப்பதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றித்தின் தவிசாளர் உர்சுலா லெயென் தெரிவித்து இருந்தார். வருடமொன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பாவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு சுமார் 500 மில்லியன் டொலர் பெறுமதியான வரிச் சலுகை வழங்குகிறது.

இந்த அச்சுறுத்தலின் காரணமாகவே, அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானியை வாபஸ் பெற்றது போலும்! ஆனால், உலகத் தலைவர்கள் கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை விடயத்தில், தொடர்ந்தும் இலங்கைத் தலைவர்களை எச்சரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.