;
Athirady Tamil News

மனைவி துரோகம்?: எனக்கும், என் பிள்ளைக்கும் “பக்கச் சார்பின்றி நீதி வேண்டும்” இளம் தந்தை கோரிக்கை!! (வீடியோ)

0

எனக்கும் எனது பிள்ளைக்கும் பக்கச் சார்பின்றிய நிலையில் நீதி வேண்டும். என் பிள்ளையை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என் உண்மையான நிலைப்பாட்டை எனது கதையை நீதிமன்றமோ பொலிசாரோ ஏன் என்று கேட்கவில்லை. எனத் தெரிவித்துள்ளார் இளவாலையைச் சேர்ந்த இளம் தந்தை க. திவாகர் (வயது 21).

அண்மையில் இளவாலையில் 5மாதக் குழந்தையுடன் தந்தை தலைமறைவு என்றும் மனைவி குழந்தையை தேடி வருகின்றார் என்றும் பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப் பட்டு வந்தமை தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஊடக சந்திப்பின் போதே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 5 மாதக் குழந்தை யை என்னுடைய வீட்டில் சுத்திப் போர்த்து படுக்க வைத்து பனடோல் சிறப் மருந்தை அதிகமாக பருக்கி மயக்க நிலையில் விட்டு விட்டு இரவு வீட்டை விட்டு இன்னொருவருடன் சென்றுள்ளார்.

நான் கோவில் வேலை செய்து வருகின்றேன். அண்மைக்காலமாக வெளி இடங்களில் வேலைக்குச் செல்லும் காலங்களில் அநாமதேய தொலைபேசித் தொடர்பில் இருந்துள்ளார். எனது நண்பனான கணோஜன் (கஜன்) என்பவருடன் தொடர்பு நிலையில் நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்தே எனது மனைவி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

மனைவி தன்னுடைய செயற்பாட்டை மறைத்தும் அவரின் குடும்பத்தினரின் வழிப்படுத்தலில் அவர்கள் சார்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்கு உடந்தையாகவே பொலிஸாரும் நீதிமன்றமும் செயற்பட்டுள்ளனர். எவரும் என்னுடைய கதையை கேட்கவில்லை. உண்மை நிலையை புரிந்து கொள்ளவில்லை.

02.02.2022 வீட்டை விட்டு சென்றவர் 04.02.2022 ஆகியும் வீடு வரவில்லை. எல்லா இடமும் தேடி 06.02.2022 இல் புதுக்குடியிருப்பில் சாமத்தில் இரண்டு பேரையும் ஒன்றாக இருந்த நிலையில் பிடித்து இளவாலை பொலீஸீடம் ஒப்படைத்தோம்.

நீதிமன்றில் என்னை ஒப்படைத்து நீதிமன்றம் ஊடாக பிள்ளையை தாயிடம் ஒப்படைக்கவே முடிவு செய்தேன். அந்த நேரம் நீதிமன்றமும் தாயிடம் ஒப்படைக்கும்படி கூறியது.

நானும் அதன்படி செயற்பட தீர்மானித்து வெளியே வரும்போது மனைவியும் அவரது உறவினர்கள் இருவரும் இளவாலை போலீஸ் ஒருவருமாக சேர்ந்து என்னை ஏளனம் செய்து சிரித்தார்கள். என்னை வெறுப்பூட்டினார்கள். அதனால் மன உழைச்சலுடன் எனது பிள்ளையை நான் பாதுகாக்கவேண்டும் என நினைத்தேன்.

அந்த நிலையில் தான் 16 நாட்களும் நான் தான் பிள்ளையை பாதுகாத்தேன். மனைவியை தேடிப் பிடித்ததும் நான் தான். மீண்டும் நீதிமன்றில் பிள்ளையை ஒப்படைத்ததும் நான் தான். இதுவரை பொலீஸாரால் எந்த தேடுதல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிள்ளையையும் தன்னிடம் ஒப்படைக்கும்படி மனைவி தேடவும் இல்லை.மனைவி குடும்பத்தினரின் நடவடிக்கைகள் செயற்பாடுகளை நான் நேரில் அறிந்தவன்.

தெரிந்தவன் என்பதனால் பிள்ளைக்கு ஆபத்துக்கள் வரும் என்பதை உணர்ந்தேன். இந்த நிலையில் மனைவி பிள்ளையையும் விட்டிட்டு போனதுடன் பொலீஸ் உதவியுடன் வெவ்வேறு தடவைகள் வீடு வந்து தன்னுடைய உடுபிடவைகள் பொருட்கள் யாவற்றையும் எடுத்துச் சென்றுள்ளார்.

நேர காலம் இன்றி எனது உறவுகளின் வீடுகளுக்கு சென்று பொலீஸர் மனஉழைச்சலைக் கொடுத்த நிலையில் கெளரவப் பிரச்சனை ஏற்பட்டு எனது உடன்பிறவா சகோதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பொலீஸார் அவரை கைது செய்து ஒரு கிழமையாக சிறையில் உள்ளார்.

இவ்வாறெல்லாம் எம்மை சிக்கலுக்குட்படுத்திய மனைவி வீட்டார் என்மேல் குற்றம் சாட்டுவதாகவே உள்ளனர். இனி நீ விவாகரத்து போட்டு அவளை விட்டிடு என்று நீதிமன்றில் வைத்து அவரது சித்தி எனக்கு சொன்னார்.

இப்படி எல்லாம் கூறியதை பார்க்கும் போது அவர்கள் எம்மை ஏமாற்றி திட்டமிட்டு செயற்படுவதாகவே உள்ளது. என்னைப் பொறுத்த வரை சம்பவ நேரம் நான் வீட்டில் இல்லை. எப்படி மனைவியை துன்புறுத்தி அடிக்க முடியும்?

என்னை எனது அம்மா வளர்த்த வளர்ப்பு சரி இல்லை என நீதிபதி அம்மாவை திட்டி உள்ளார். பெண் வீட்டார் பெண்ணை வளர்த்த வளர்ப்புக்கள் செயற்பாடுகள் எல்லாம் எம்மிடம் ஆதாரம் உண்டு.

உண்மையில் நடந்த சம்பவத்தின் உண்மை வெளிவரவேண்டும். என்னுடைய பிரச்சனையை நீதிமன்றம் தீர்க்கமாக விசாரிக்க வேண்டும். என் பிள்ளையின் பாதுகாப்பு கருதி பிள்ளையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். எனக்கு நீதி வேண்டி ஒத்துழைக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

யாழவள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.