;
Athirady Tamil News

இந்தியாவில் 33 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை: 7-வது இடத்தில் தமிழ்நாடு…!!

0

கொரோனா பிரச்சினையால் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒரு தனியார் செய்தி நிறுவனம் கேள்வி கேட்டிருந்தது. அதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சினையை கண்காணிக்க கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘போஷான் ட்ராக்கர்’ என்ற செயலியில் 34 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பதிவு செய்த விவரங்கள் அடிப்படையில் இந்த தகவலை அளித்துள்ளது.

கடந்த மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பாதிப்பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம்பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். இவர்கள் 1 முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகள் ஆவர். கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 9 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் மட்டுேம ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில் இது ஓராண்டில் 91 சதவீத உயர்வு ஆகும்.

மாநில வாரியாக பார்த்தால், மராட்டிய மாநிலம் 6 லட்சத்து 16 ஆயிரம் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது. பீகார், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை கொண்ட 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகளுடன் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை நிறுத்தப்பட்டதுதான், ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு காரணம் என்று தொண்டு நிறுவன நிர்வாகி பூஜா மர்வாகா தெரிவித்தார்.

இத்தகைய குழந்தைகளுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.