;
Athirady Tamil News

மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்கின்றோம்: மஸ்தான் எம்.பி!!

0

மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் இன்று (19.12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்கின்றோம். இருந்தாலும் சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் முரண்பாடுகள் வராத வகையில் எமது தலைவர்கள் அதனை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அத்துடன், மக்கள் சுகதேகிகளாக வாழ்வதற்காக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இருந்தாலும் அதனை எமது விவசாய பெரும் குடி மக்கள் உடனடியாக செய்ய முடியாது என அதில் உள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தியமையால் பசளைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சேதனப் பசளைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பசளை வருவதற்கு காலதாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இருப்பினும் விரைவாக கிடைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நாங்கள் மனம் வருந்துகின்றோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்களும் இழப்பீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றோம்.

மேலும், பல கட்சிகளின் கூட்டு தான் எமது அரசாங்கம். அந்த அடிப்படையில் கருத்து சுதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அரசாங்கம் தொடர்பில் என்ன தான் கருத்தை சுதந்திரமாக கூறினாலும் நல்ல திட்டங்களையும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் விடயங்களையும் மிகவும் ஒற்றுமையாக வெற்றி பெறச் செய்கிறார்கள். பட்ஜெட்டுக்கு முதல் எவ்வளவோ கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஆனால் பட்ஜெட் வாக்கெடுப்பில் என்ன நடந்தது? நாம் என்ன கருத்துக்கள் சொன்னாலும் நாங்கள் அரசுக்கு ஆதரவு என்றும், அரசை வலுப்படுத்த தான் எமது கருத்துக்கள் என சிரேஸ்ட அரசியல்வாதியும், மூத்த அரசியல்வாதியுமான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கின்றார். அது தான் உண்மை நிலைப்பாடு.

எமது அரசாங்கத்திற்கான ஆதரவு கூடிக் கொண்டு தான் இருக்கின்றது. வாக்கெடுப்பின் போது 151, 156, 158 ஆக ஆதரவு அதிகரித்து வந்திருக்கின்றது. எதிர்காலத்தில் அது 160- 165 ஆக வரும். ஆதரவு பெருக்குமே தவிர குறையாது. இதனால் எமது ஆட்சி குறிப்பிட்ட காலம் நிலையாக நடக்கும் எனக் கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.