;
Athirady Tamil News

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படை!! (படங்கள்)

0

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படையும், இராணுவமும்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மரணித்த முச்சக்கர வண்டி சாரதியான இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து (01.01) இரவு 10.30 மணியளவில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா, ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ரஜீபன் (வயது 32) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்துக்குள்ளாகிய வாகனத்தை ஏற்ற விடாது வாகனத்தை முற்றுகையிட்டும், ஏ9 வீதியை மறித்தும் மரணித்த இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் இரவு 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பொலிசாரால் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் போக சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். ஏ9 வீதியை மறித்து போராடியவர்களை அகற்றிய விசேட அதிரடிப்படையினர் குழப்பம் விளைவித்ததாக பலரை கைது செய்து எச்சரிக்கையின் பின் அங்கிருந்து வெளியேற்றினர்.

அத்துடன், நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். மக்களது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்ததையடுத்து அப் பகுதியில் பதற்ற்நிலை ஏற்பட்டதுடன், முறுகல் நிலை தீவிரமடைந்தது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்கள், மரணித்த இளைஞனுக்கு நீதி கிடைக்கும். சரியான முறையில் விசாரணை இடம்பெறும் என குறித்த இளைஞனின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரினார்.

இரவு 11.50 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து விபத்துக்குள்ளாகிய வாகனம் பொலிசாரால் எடுத்து செல்லப்பட்டது. விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.