;
Athirady Tamil News

19-வது நாளாக தாக்குதல் நீடிப்பு: உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை…!!

0

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 19-வது நாளாக உக்ரைன் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் உக்ரைனை ரஷிய படைகள் தாக்கி நிர்மூல மாக்கி உள்ளது. மேலும், தொடர்ந்து தினமும் குண்டுகளை வீசி உக்ரைன் நாட்டை சின்னாபின்னப்படுத்தி வருகிறது.

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இதுவரை இரண்டு நாடுகளிடையே 3 சுற்று பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது. ஆனால் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே 4-வது சுற்று பேச்சுவார்த்தையை காணொலி மூலம் இன்று நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தை நடத்த புதின் தயாராக இல்லை.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க நான் விரும்பவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது.

போர் தொடங்கிய 19-வது நாளான இன்று ரஷிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று முதல் ஏவுகணை தாக்குதல் மற்றும் போர் வியூகங்களை 3 வகையாக மாற்றி அமல்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது.

அதன்படி உக்ரைனின் ராணுவ நிலைகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதிதாக சிறிய நகரங்களிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கீவ் மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் குண்டுவீசி அதிரடி தாக்குதல் நடத்தவும் ரஷியா திட்டமிட்டுள்ளது. தற்போது கீவ் நகரின் புறநகர் பகுதியான தெற்கு திசையில் மட்டுமே சாலை போக்குவரத்து நடைபெறுகிறது. மற்ற 3 திசைகளையும் ரஷிய ஏவுகணை படைகள் ஆக்கிரமித்துள்ளன.

எனவே எந்த நேரத்திலும் கீவ் நகரம் ரஷியாவின் வசம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷிய படைகள் நாளை முதல் தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இது வரை நடந்த போரில் சேத விவரங்களை இரு நாடுகளும் மாற்றி மாற்றி சொல்லி வருகின்றன.

உக்ரைன் தலைநகரமான கீவ் நகரில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் மரியுபோல் நகரத்தில் 2,187 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷிய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஆதரவாக வெளிநாடுகளை சேர்ந்த 180 ராணுவ வீரர்கள் போரில் பங்கேற்றனர்.

அவர்கள் போரில் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது வரை உக்ரைன் மீதான ரஷிய போர் மிகவும் உக்கிரமாக மாறி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.