;
Athirady Tamil News

’கடும் நிபந்தனைகளின் கீழேயே 1 பில். கடனுதவி’ !!

0

இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஒப்பந்தம் பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் கையெழுத்திட்டப்பட்டதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, அந்த நிபந்தனையின் படியே நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியவாறு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்ட ஆறு மாத வீதி வரைபடத்தின் பிரகாரம் இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுப்பது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் அறிக்கைகள் வருத்தமளிப்பதாகவும் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை அதிகரிப்பது, பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பது மற்றும் நாட்டின் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பது போன்ற கொள்கைகளை இந்த வீதி வரைபடத்தில் உள்ளடக்கியிருந்ததாகவும் ஆனால் அந்த நோக்கங்களை அடைவதில் அது தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தலையீடு மற்றும் நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சிகளை ஆளுநர் எதிர்த்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டதாகவும் நபந்தனைகளின்படி, இலங்கையின் வான்வெளியில் இந்தியா தடையற்ற அணுகலைக் கொண்டிருக்கும் என்றார்.

ஒப்பந்தத்தில் ஆடம்பரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த நிபந்தனையின்படி நாட்டின் வான்வெளியை இந்தியா விரும்பியபடி பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உலகில் வேறு எந்த நாடும் இவ்வாறான உடன்படிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும், இந்த உடன்படிக்கை நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் வான்பரப்பை தடையின்றி பயன்படுத்த இந்தியாவை அனுமதிக்கும் பிரேரணைக்கு கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.