;
Athirady Tamil News

ஜனநாயகத்துக்கு வலுவான காங்கிரஸ் தேவை: நிதின் கட்காரி…!!

0

புனேயில் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், “ஜனநாயகம் 2 சக்கரத்தில் இயங்குகிறது. ஒன்று ஆளுங்கட்சி. மற்றொன்று எதிர்க்கட்சி. ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. எனவே தான் காங்கிரஸ் தேசிய அளவில் வலுப்பெற வேண்டும் என மனதார நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருப்பதால், அதன் இடத்தை பிராந்திய கட்சிகள் பிடிக்கின்றன. காங்கிரசின் இடத்தை மற்ற பிராந்திய கட்சிகள் பிடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்றார்.

இதேபோல அவர், பா.ஜனதாவில் தனது ஆரம்ப காலங்களின் போது, காங்கிரசில் வந்து சேருமாறு அந்த கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர் அழைப்பு விடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்தநிலையில் ஜனநாயகத்துக்கு வலுவான காங்கிரஸ் தேவை என்ற நிதின் கட்காரி கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:-

நிதின் கட்காரி காட்டிய அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் பா.ஜனதா மத்திய முகமைகள் மூலம் ஜனநாயகம், எதிர்க்கட்சிகளை அழிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து அவர் மோடியிடம் பேச வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கூட ஆதரவின்றி இருப்பது போல தெரிகிறது. பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளை துன்புறுத்த நீங்கள் மத்திய முகமைகளை பயன்படுத்துகிறீர்கள். முன் எப்போதும் இல்லாத அரசியல் கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் செய்யப்படுகிறது.

ஜனநாயகம், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளை அழிக்கும், ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்ற முயற்சி செய்யும் பா.ஜனதாவின் மனநிலை குறித்து மோடியிடம் கட்காரி பேச வேண்டும். நிதின் கட்காரி வெளிப்படுத்திய உணர்வு நல்லது தான். மோடி அரசு நாட்டில் ஜனநாயகத்தை நசுக்க செய்து வரும் முயற்சிகள் அவருக்கு தெரிந்து இருக்காது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.