;
Athirady Tamil News

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் தொடரும்- – மத்திய உள்துறை மந்திரி உறுதி..!!

0

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த அமித்ஷா வாரிசு அரசியல், சாதி வெறி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய பெரும் பாவங்களே, பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்களுக்கு காரணம் என்று கூறினார். குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டதாகவும், இது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அமித்ஷா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது என்றும், கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவரை அவரகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று அமித்ஷா கூறினார். காங்கிரசுக்கு மோடி குறித்த பயம் (ஃபோபியா) உள்ளதாகவும், தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் உள்துறை மந்திரி குறிப்பிட்டார். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்துறை மந்திரி அழைப்பு விடுத்ததாகவும், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது மோடி அமைதியாக இருந்ததாகவும், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் வன்முறையை பரப்பியதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.