;
Athirady Tamil News

ஐந்து தமிழ் தேசிய கட்சியின் ஒப்பத்துடன் ஐநாவிற்கு அறிக்கை!!

0

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையினால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்குமாறு ஐநாவிற்கு ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

ஐந்து தமிழ் தேசிய கட்சி தலைவர்களின் ஒப்பங்களுடன் ஐநாவிற்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐநா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், 2021 மார்ச் மாதம் ஐநா தீர்மானம் 46/1 நிறைவேற்றப்பட்டதில் இருந்துஇலங்கையில் தமிழர்களின் நிலை குறித்த மதிப்பீட்டையும் மற்றும் தமிழர்களுக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எங்கள் பரிந்துரைகளையும் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் கூட்டாக உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழர்களின் துன்பத்தைத் தணிக்கவும், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வழங்கவும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்பு மிகு தங்களிடம் நாங்கள் மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்:

1) ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலத்தால் (OHUNHRC) மார்ச் 2021 அறிக்கையின் பரிந்துரையின்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதன் முக்கியத்துவத்தையும் , வட கொரியாவை போல ஐ.நா. பாதுகாப்புச் சபையை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி.) பரிந்துரைக்க மீண்டும் வலியுறுத்துதல்

2) போர் தொடங்கிய காலத்தி்ல் இருந்து அரசாங்கம் தமிழர் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ பிரசன்னத்தை அதிவேகமாக அதிகரித்தது. 1983 க்கு முந்தைய அளவுக்கு தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல் வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதே இராணுவ மட்டத்தையே பேணுகின்றது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட திங்க்-டேங்க் ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கைப்படி, இராணுவ மற்றும் சிவிலியன் விகிதம் ஒன்றுக்கு ஆறு (ஒவ்வொரு ஆறு குடிமக்களுக்கும் ஒரு இராணுவம் உள்ளது), இது உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரம் (இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவம்) என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் உள்ள ஜோசப் முகாம் போன்று தமிழர் பகுதிகளில் உள்ள பல இராணுவப் பிரிவுகள் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியக் குற்றங்களை இழைத்துள்ளன, இதில் தமிழ் மக்கள் படுகொலைகள், பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிப்பு, கடத்தல்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, என ஐ.நாவாலும் பல சர்வதேச நிறுவனங்களாலும் நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3) சிங்கள – பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களில் இணைப்பதற்கு பிரதேச எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் மற்றும் தமிழ் பிரதேசங்களை சிங்கள பௌத்த பிரதேசங்களுடன் இணைத்தல் உட்பட தமிழ் பிரதேசங்களில் அரசாங்க அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்கள் என்பனவற்றை நிறுத்துதல்.

4) 1958,1977, 1983 மற்றும் 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிராக, அவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் அட்டூழியக் குற்றங்களைத் தடுப்பதற்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாகப் பரிசீலிக்குமாறு மாண்புமிகு தங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

5) ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலத்தால் முன்னர் பரிந்துரைக்கப் பட்டபடி, கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கும் உலகளாவிய நியாயாதிக்கம் என்ற கோட்பாட்டின் கீழ், இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை அவர்களது பிரதேசத்தில் கைது செய்து, அவர்கள் நாட்டின் பிரதேசத்தில் இக்குற்றங்கள் இழைக்கப் படவில்லை என்றாலும், விசாரணைக்கு உட்படுத்துமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தற்போது சிங்கப்பூரில் இருப்பதால் வேறு நாடுகளுக்கும் செல்லலாம் என்பதால் இந்த நடவடிக்கை இப்போது மிகவும் பொருத்தமானது. அவரது பதவி விலகல் நீதிக்கான புதிய சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் இனி ஜனாதிபதியாக இல்லாததால், அவர் அரச தலைவருக்கான பாதுகாப்பை இழக்கிறார். போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட போது, ஐ.நா.வின் உள்நாட்டு ஆய்வு அறிக்கையின்படி, போரை மேற்பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளராக திரு. கோத்தபாய ராஜபக்ஷ இருந்தார். மோதல் வலயத்திலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். மேலும், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐநாவிடம் ஒப்படைத்தது. ஏப்ரல் 2013 இல் இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறியுள்ளது.

6) கருத்துச் சுதந்திரம் பல ஆண்டுகளாகத் தமிழர் பகுதிகளில் கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது, தமிழர் பகுதிகளில் மிகப் பாரிய இராணுவப் பிரசன்னம் மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் இதற்கு வசதியாக உள்ளன. சுயாதீீன அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்துவதை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றமாக்கும் அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் கட்டுப்படுத்தல் சட்டங்களில் முக்கியமானது.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையினால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளில் மாண்புமிகு தங்களுக்கு சிரமங்கள் இருக்க முடியாது.

உங்களின் கனிவான கவனத்திற்கும், பரிசீலனைக்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த உண்மைகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் , தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , மற்றும் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந. சிறிகாந்தா ஆகியோரே அறிக்கையில் ஒப்பம் இட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.