;
Athirady Tamil News

தமிழரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தனர்!! (படங்கள்)

0

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார்.

இதன்போது,10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் 46 பேருள்ள நிலையில் அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்தவர்களுமாக உள்ளனர்.

இதில் தீர்ப்புகளுக்காக தவணையிடப்பட்டவர்களும் உள்ள நிலையில் தீர்ப்பு வழங்காது வழக்கை ஒத்தி வைக்கும் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வழக்குகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் அவர்களை புனர்வாழ்வு ஊடாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குறித்த சந்திப்பில் மெய்நிகர் வழியாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பக்கபலமாக செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரேரிக்கப்பட்டதான அசோகா டீ சில்வா ஆணைக்குழு அறிக்கையை பார்த்தேன். குறித்த அறிக்கை தமிழ் அரசியல் கைதிகளை முற்று முழுதாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்படவில்லை. ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளேன்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் போது அது சிறப்பாக இருக்கும்.அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு அவர்களின் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதியை கோருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் விரைவாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்புவதாகவும் அதன் பிரதியை தங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் ஏற்கனவே தமிழரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திருப்திகரமான நடவடிக்கைகள் ஏதும் இடம்பெறவில்லை.

கடந்த மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆளுநர் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய போது அவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். அதன் பிரகாரம் சிறைகளில் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் நேரில் சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நம்பிக்கை அளித்துச் சென்றார்.

அதன்பின் குறுகிய காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நான்குக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆகவே வடமாகாண ஆளுநர் அரசியல் கைதிகளின் விடயத்தில் கரிசனை கொண்டு செயல்படுகின்ற நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.