;
Athirady Tamil News

தமிழ்நாட்டில் இந்து மதத்தை போலவே கிறிஸ்தவ மதத்திலும் தொடரும் சாதிய தீண்டாமை!!

0

கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் பலவிதமான தீண்டாமை பிரச்னைகளை வெளிப்படுத்தியது.

குறிப்பாக, தலித் மக்கள் இறையூரில் உள்ள ஐயனார் கோவிலில் நுழைவதற்குத் தடை இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் கோயிலுக்குள் தலித் மக்கள் முதல்முறையாக நுழைந்தனர்.

இறையூரில் நடத்தப்பட்ட கோயில் நுழைவு சம்பவம், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் நுழைவதற்குத் தற்போதும் தடைகள் உள்ளனவா, இதற்கு முன்னர் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் வெற்றி பெற்றனவா என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

கோவில்களில் தீண்டாமை வந்த வரலாறு

இந்தியாவில் கோவில் நுழைவுப் போராட்டம் என்பது சுதந்திரப் போராட்ட காலத்தில் தொடங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. மன்னராட்சிக் காலத்தில் கோவில் கட்டுமானங்கள் அதிகம் ஊக்குவிக்கப்பட்டதால், கோவிலில் வழிபடும் உரிமைகளும் அப்போதே நிர்ணயம் செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மறைந்த மானுடவியல் ஆய்வாளரான தொ.பரமசிவன், “சோழர் கால கல்வெட்டுகளின் தரவுகளைக் கொண்டு பார்க்கையில், நில உடைமையின் விளைபொருட்களில் ஒன்றான சாதி இறுக்கங்களும் தீண்டாமையும், 10ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் வளர்ந்துவிட்டதாக” அவரது தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கோயில் நுழைவுப் போராட்டம்

அதனால், கோவில் நுழைவு போராட்டங்களின் வரலாறு நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும், கோவில்களில் தீண்டாமை என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது என்பது புலப்படுகிறது.

கோவில் நுழைவு போராட்டங்கள் தொடங்கியது எப்படி?

தமிழ்நாட்டில் நடைபெற்ற கோவில் நுழைவுப் போராட்டங்கள் குறித்து பல நூல்களிலும், 1920 முதல் வெளியான நாளேடு குறிப்புகளிலும் உள்ள தகவல்களைக் கொண்டு வரலாற்று சம்பவங்களை நாம் அறிந்துகொள்ளலலாம்.

நீதிக்கட்சியைச் சேர்ந்த ஜே.எஸ்.கண்ணப்பர், பிப்ரவரி 1927இல், தலித் மக்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நுழைய முயன்றபோது, தடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஓராண்டுக்கு வழக்கு நடந்து. அதில் கோவில் குருக்கள் இருவரும் தலா ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் கண்ணப்பருக்கு ரூ.100 இழப்பீடு தரவேண்டும் என்றும் தீர்ப்பு வந்தது.

அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1928இல் கண்ணப்பர் மற்றும் தலித் மக்கள் திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்தனர் என்று குடியரசு நாளிதழ்(மே 1928) கூறுகிறது.

அதேபோல, 1929இல் ஈரோடு மாவட்டத்தில் ஈஸ்வரன் கோவிலில் தலித் மக்கள் நுழைவதற்கான போராட்டம் நடைபெற்றது என்று குடியரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது( 21 ஏப்ரல் 1929).

அதேபோல 1932இல் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் எதிர்ப்புகளை மீறி தலித் மக்கள் சுயமரியாதை கட்சியினரின் ஆதரவுடன் சென்றதாகவும் திராவிடன் இதழ் கூறுகிறது.

1939ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, ஐந்து தலித் மற்றும் நாடார் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட, தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்றதாகவும் பல சர்ச்சைகளுக்குப் பின்னர் அனைத்து சாதியினரும் அனுமதிக்கப்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய சமூகவியல் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார்.

இதையடுத்து, பலகட்ட விவாதங்களுக்குப் பிறகு, 1939 ஜூலை11ம் தேதி சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,1947ல் தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்கிறார்.

இந்தியாவில் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு மகாத்மா காந்தி அதிக முக்கியத்துவம் அளித்தார் என்றும் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோர் அதில் தீவிர கவனம் செலுத்தினர் என்றும் கூறுகிறார் சிவசுப்பிரமணியன்.

”சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவில் நுழைவு போராட்டங்களைத் தொடங்கியவர் காந்தி. காந்தி, அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோர் மூலமாக கோவில்களில் வழிபடும் உரிமை அனைத்து சாதியினருக்கும் உள்ளது என்ற கருத்து சமூகத்தில் வலுத்தது. அதனால், தமிழ்நாட்டில் கோவில் நுழைவு போராட்டம் என்பது சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவுதான், இன்று தமிழ்நாட்டில், பல ஆயிரம் கோவில்களில் சாதிப் பாகுபாடுகள் இல்லை.

அதோடு, நாத்திகர்களாக அறியப்பட்ட திமுக ஆட்சிக்கு வந்தபோது அறநிலையத்துறை என தனித்துறைக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பதால், கோவில் நுழைவுப் பிரச்னைகள் இருந்த இடங்களில்கூட அவை படிப்படியாக நீங்கின.

தமிழ்நாட்டில் தற்போது கோவில் நுழைவுக்குத் தடை என்பது கிராமங்களில் உள்ள ஊர் கோயில்களில்தான் அதிகம் காணப்படுகின்றது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினர் இடையில்தான் இந்த பிரச்னை நீடிக்கிறது,” என்கிறார் சிவசுப்பிரமணியன்.
கிராமப்புற கோயில்களில் என்ன பிரச்னை?

திருவண்ணாமலை கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஈரோடு ஈஸ்வரன் கோவில் ஆகிய இடங்களில் தற்போது எந்தவிதமான பாகுபாடுகளும் இல்லை. ஆனால், சமீபத்தில் கிராமப்புற கோவில்களில்தான் பாகுபாடு நிலவுகிறது எனக் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஜனவரி 2023 முதல் வாரத்தில், கள்ளக்குறிச்சியில் உள்ள 200 ஆண்டுகால வரதராஜ பெருமாள் கோவிலில் தலித் மக்கள் பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் முதல்முறையாக நுழைந்து, வழிபாடு நடத்தியுள்ளனர். 2008இல் தலித் மக்கள் அரசிடம் புகார் அளித்தாலும், தற்போதுதான் அவர்களுக்குத் தீர்வு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

கோவில் நுழைவு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய பிரியா, ”எங்கள் தலைமுறையில் இந்த கோவிலுக்குள் முதன்முதலாக வந்த நபர் நான்தான். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வருவதற்கு இத்தனை ஆண்டுகள் எழுதப்படாத தடை இருந்தது. நாங்கள் கோவிலில் வழிபடும் உரிமை வேண்டும் என்று 2008இல் கேட்டபோது, அந்த ஆண்டு முதல் இந்த கோவிலின் தேரோட்டத்தில்கூட நாங்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

தேரோட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டார்கள். எங்களுக்கு இந்த புத்தாண்டு பெருமகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. தற்போது நாங்கள் கோவிலுக்குச் சென்று வருவதில் சிக்கல் இல்லை. இந்த மாற்றம் நீடிக்கும் என்று நம்புகிறோம்,” என்கிறார்.

பிரியாவை போல நூற்றுக்கணக்கான தலித் மக்கள் 2023இல் தான் முதல்முறையாக பெருமாள் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு செய்துள்ளனர். பல காலமாக, கோவிலின் வாசலில் மட்டுமே அவர்கள் வழிபாடு செய்ததாகக் கூறுகின்றனர்.

அடுத்ததாக, திண்டுக்கல் மாவட்டம் காவலப்பட்டி கிராமத்தில் மே 2022இல் நடந்த சம்பவத்தைப் பார்ப்போம். தலித் மக்கள் பல காலம் வழிபாடு செய்த உச்சிக்காளியம்மன் கோவிலில் திடீரென அவர்கள் நுழையக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் மறுக்கின்றனர்.

திண்டுக்கல் காவலப்பட்டியில் உச்சி காளியம்மன் கோவிலில் பட்டியல் பிரிவினர் தடுக்கப்படுவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

உச்சிகாளியம்மன் பழைய கோயில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடந்த பின்னர் தலித் மக்கள் நுழைவதை ஆதிக்க சாதியினர் தடுத்ததாக சிபிஐ கட்சியினர் புகார் அளித்தனர். பின்னர், காவல்துறையின் பாதுகாப்புடன் அவர்கள் கோயிலுக்குள் நுழைந்தனர்.

போராட்டத்திற்குப் பின்னர், உச்சிக்காளியம்மன் கோயிலுக்கு தற்போது இயல்பாக சென்றுவர முடிகிறதா என்று கேட்டோம். பிபிசி தமிழிடம் பேசிய காவலப்பட்டியைச் சேர்ந்த மணி ”இந்த கோயிலுக்கு முன்னர் அனைத்து சாதியினரும் வந்துள்ளோம் . ஆனால் கோயில் புனரமைப்பு செய்த பின்னர், தலித் மக்கள் இதற்கு பணம் தரவில்லை என்று கூறி, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் நாங்கள் பணம் தருவதற்கு தயாராக இருந்தபோதும், எங்களிடம் வசூல் செய்யவில்லை. மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். அதன்பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.
கோயில் நுழைவுப் போராட்டம்

மேலும், உச்சிக்காளியம்மன் கோயிலுக்கு இரண்டு தரப்பு மக்களும் சென்றுவர, இரண்டு சமூக மக்களுக்கும் பொதுவாக இரண்டு சாவிகள் தரப்பட்டுள்ளதாகவும் என்றும் இரண்டு தரப்புகளைச் சேர்ந்த பூசாரிகள் அங்கு பூசை செய்வதாகவும் மணி தெரிவித்தார்.

2021இல் கூட, இதேபோன்ற ஒரு கிராமப்புற கோயிலில் தலித் மக்கள் தடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விழுக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் தலித் மக்கள் நுழைவதற்கு ஆதிக்க சாதியினர் தடை விதித்தனர்.

கோயில் புனரமைப்புக்கு தலித்துகள் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கமுன்வந்தபோது மறுத்துவிட்டு, பின்னர் கோயில் குடமுழுக்கு விழாவில் அவரகள் பங்குபெறக்கூடாது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது என விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.

”பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தலித் மக்கள் நுழைவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. காலங்காலமாக வழிபாடு செய்த இடத்தில் புதுவிதமாக தீண்டாமை கடைபிடிக்கும் பழக்கம் விழுக்கம் கிராமத்தில் தொடங்கியது. உடனே அதில் தலையிட்டதால், இந்து அறநிலையத்துறையின் கீழ் அந்த கோயில் கொண்டுவரப்பட்டது, தற்போது அனைத்து சாதியினரும் வழிபடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் வழிபடும் உரிமை தரப்படவேண்டும். பிரச்னை உள்ள கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நல்ல தீர்வாக அமையும். அதற்கு விழுக்கம் செல்லியம்மன் கோயில் ஒரு எடுத்துக்காட்டு,” என்கிறார் ரவிக்குமார்.

தீண்டாமை தொடர்வது ஏன்? தீர்வு என்ன?

ஒரு காலத்தில் பிராமணர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்துக்களில் மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் தீண்டாமையைக் கடைபிடித்தனர். அந்த எச்சம் தற்போது, இடைநிலை சாதிகள் தலித் மக்களிடம் தீண்டாமையைக் கடைபிடிக்கும் நடைமுறையாக மாறிவிட்டது என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

கிராமப்புற கோயில்களில், அந்த கிராமத்தில் ஆதிக்க சாதியாக யார் இருக்கிறார்களோ அவர்கள் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதால்தான் தலித் மக்கள் அங்கு நுழைவதற்கு சாத்தியமில்லாமல் போகிறது என்ற கருத்தை முன்வைக்கிறார் அவர்.

”தமிழ்நாட்டில் பல கிரமங்களில் பட்டியல் இன மக்களின் நுழைவுக்குத் தடை இருப்பதை மறுக்கவில்லை. அந்த மாற்றம் என்பது உடனடியாக நடந்துவிடாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் காரணமாகத்தான் நாம் இன்று பல கோயில்களில் பாகுபாடு இன்றி வழிபடும் உரிமை கிடைத்துள்ளது. அதனால், இந்த மாற்றத்திற்கும் நூறு ஆண்டுகள் ஆகுமா என்றால், இல்லை. முதலில், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற பிரிவில் தீண்டாமை வெளிப்படையாகத் தெரிந்தது.

தற்போது, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியல் இன மக்கள் என்ற பிரிவுகளுக்கு இடையில் கோயில் நுழைவில் தீண்டாமை இருப்பதைப் பார்க்கிறோம். நம் கிராமங்களில் உள்ள சாதி படிநிலைகளில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பாகுபாடு நீங்கும், இதில் மனமாற்றம் என்பதுதான் தேவை,” என்கிறார் ராமு மணிவண்ணன்.

பேராசிரியர் ராமு மணிவண்ணன்

“தேவகோட்டையில் உள்ள கண்டதேவி கோயில் தேரோட்டம் உள்பட, பல இடங்களில் தலித் மக்களுக்கு வழிபடும் உரிமை, தேர் இழுக்கும் உரிமை என்பது போராட்டங்களின் வாயிலாகத்தான் பெறமுடிகிறது. சமூகமாற்றம் ஏற்பட நாம் எவ்வளவு தூரம் பயணிக்கவேண்டும் என்பதை இந்த சம்பவங்கள் உணர்ந்துகின்றன” என்கிறார்.

சில இடங்களில், கோயில் நுழைவுக்கான முன்னெடுப்புகள் வெற்றிபெற்ற பிறகு, தடை நீங்கியுள்ளதாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் கூறுகின்றன. ஒரு முறை கோயில் நுழைவு நடைபெற்ற அதே இடங்களில், நுழைவதற்கான தடை முன்பு இருந்த அதே தீவிரத்தோடு இல்லை என்றும் அவை நமக்கு உணர்த்துகின்றன.

”கோயில் நுழைவு போராட்டம் நடந்தவுடன் தலித் மக்கள் முழுமையான உரிமையை பெற்றுவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும், ஆனால் ஒரு முறை தடையை தர்கர்த்துவிட்டால், அது தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவு,” என்கிறார் ராமு மணிவண்ணன்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் பதில் என்ன?

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்கள் நுழைவுக்குத் தடை நீடிப்பது குறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டோம். கிராமங்களில் நிலவும் தீண்டாமை பிரச்னைகளுக்குத் தீர்வு பிறக்க அரசின் என்ன முயற்சிகள் எடுத்துவருகிறது என்று கேட்டோம்.

”மாநிலம் முழுவதும் பட்டியல் இன மக்கள் நுழைவதற்குத் தடை உள்ள கோயில்களின் பட்டியலை கேட்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில், சமூக நீதிக்கு எதிராக நீடிக்கும் கோயில் நுழைவு தடைகளை முற்றிலுமாகக் களைவதில் அக்கறையுடன் இருக்கிறோம்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோயிலில் தலித் மக்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கினோம். சேலத்திலும் நானே நேரடியாகத் தலையிட்டு தடையை விலக்கினேன். இதுபோல பிற மாவட்டங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே அதனை சரிப்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம்,”என்றார்.

கோயில் நுழைவுக்குத் தடை இருக்கும் கோயில்கள் பெரும்பாலும் கிராமங்களில் உள்ள ஊர் கோயில்களாக இருப்பது குறித்துப் பேசிய அவர், ”தீண்டாமை எங்கும் கடைபிடிக்கக்கூடாது, அது சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், கோயில் நுழைவுக்குத் தடை இருக்கும் இடங்களில் உடனே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட இரண்டு சமூக மக்களையும் ஒன்றிணைத்து அவர்களின் வழிபாட்டு உரிமைகளை நிலைநாட்ட முயல்கிறோம்.

இதுபோன்ற பிரச்னைகளில் இரண்டு சமூக மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதுதான் தீர்வாக இருக்கும். அதனால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கிறோம்,” என்றார்.
இந்து மதத்தைப் போல கிறிஸ்துவ மதத்திலும் தீண்டாமை

இந்து மதத்தைத் தாண்டி, இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்துவ மதத்திற்குச் சென்றவர்கள் தற்போது சாதிப் பாகுபாட்டை பின்பற்றுகிறார்கள் என்கிறார் எழுத்தாளர் சிவசுப்பிரமணியன். இவர் எழுதிய கிறிஸ்துவமும் தமிழ் சூழலும் புத்தகத்தில் தீண்டாமை வடிவங்கள் பற்றிய பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.

‘’தூத்துக்குடிக்கு உட்பட்ட ஒரு தேவாலயத்தில், தலித் சாதியில் இருந்து மதம் மாறியவர்களை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு புறமாகவும், தலித் மக்கள் ஒரு புறமாகவும் தேவாலயத்தில் நிற்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிரியார் நிற்கும் மேடையில் இருந்து பார்த்தால் அனைவரும் தெரிவார்கள், ஆனால் இரண்டு பிரிவு மக்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, இரண்டு பிரிவுக்கும் இடையில் ஒரு தடுப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

சிவசுப்பிரமணியன்

தமிழ்நாடு, புதுவை எல்லையில் உள்ள எரவூர் கிராமத்தில் நடந்த தீண்டாமை மிகவும் வேதனையானது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்துவ மதத்தில் பாதிரியார் ஆவதற்கான படிப்புகளை முடித்துக்கொண்டு, ஒரு தேவாலயத்தில் பணியாற்றிய நேரத்தில், அவரது தாயார் இறந்துபோனார்.

அவர் தலித் என்பதால், தேவாலயத்தின் வெளிவாசலில் வைத்துத்தான் இறுதி பூசை நடைபெற்றது. ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்ததால், இறந்தவரின் உடல் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பூசை செய்யப்படும், அதை நடத்திய பாதிரியாருக்கு உரிமை மறுக்கப்பட்டது,” என்கிறார் அவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் துக்கமணி அடிக்கும் பழக்கம் இருக்கிறது. மணி அடிப்பதில்கூட தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது என்கிறார் சிவசுப்பிரமணியன்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் மற்றும் தலித் கிறிஸ்துவர்கள் என இரண்டு தரப்பினர் உள்ளனர். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் இறந்துவிட்டால், மணியின் கயிற்றை இழுத்து அடிப்பார்கள், அதுவே ஒரு தலித் இறந்துவிட்டால், மணியில் உள்ள கயிற்றைத் தொடமாட்டார்கள், நேரடியாக மணியின் நாக்கை கையால் அடிப்பார்கள்.

இந்த தீண்டாமை சர்ச்சையானதற்குப் பின்னர் சமீபத்தில்தான் கைவிடப்பட்டது என்று குறிப்பிடுகிறார். சாதி, மதம் எனப் பிரிந்து நிற்பவர்கள், வழிபாட்டு இடங்களில் தீண்டாமையைக் கடைபிடித்துகொண்டே எப்படி உண்மையான பக்தியைச் செலுத்துவார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது என்று முடிக்கிறார் சிவசுப்பிரமணியன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.