;
Athirady Tamil News

மறுசீரமைப்புக்கள் வேதனைக்குரியவை – நிதி இராஜாங்க அமைச்சர்

0

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் கடுமையானவையாகவும் வேதனைக்குரியவையாகவும் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மறுசீரமைப்புக்கள் வலி மிக்கவையாகக் காணப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சியடையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (ஜன 27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் , நாட்டின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது மிகக் கடினமானவையாகவே உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் வரி வருமானம் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டமையே நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.

தேசிய பொறிமுறையின் கீழ் தற்போது நிலவும் நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் கடந்த ஆண்டு நிலைமையை எவராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாகவே கடந்த ஆண்டில் சுமார் 6 மாதங்கள் மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

எனவே இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்காக இதனை வலியுடனான மீளெழலாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த மறுசீரமைப்புக்கள் வலி மிக்கவையாகக் காணப்பட்டாலும் , அதனை மேற்கொள்ளாமலிருப்பதானது , நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சியடைச் செய்யும்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களால் ஓரளவு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதே தவிர முழுமையான ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை. எரிபொருள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 12 மணித்தியாலங்களாகக் காணப்பட்ட மின் துண்டிப்பு இன்று 2 மணித்தியாலங்களாகக் குறைவடைந்துள்ளன.

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இன்று படிப்படியாக குறைவடைந்து வருகிறது. பணவீக்கமும் குறைவடைந்து வருகிறது. இவை அனைத்தும் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே சாத்தியமாகியுள்ளன. இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையிலுள்ளன.

இந்த நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு எமது தேசிய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்புக்கள் தேவைப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெறாவிட்டால், எமது நாட்டின் பொருளாதாரம் பாரதூரமாக வீழ்ச்சியடையும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.