;
Athirady Tamil News

நாட்டின் முன்னணி மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்!!

0

தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அப்போது முதல்-மந்திரி சந்திரசேகர்ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தெலுங்கானா மாநிலத்தின் அசாதாரண வெற்றிக்கு மக்களின் ஆசியே காரணம்.

முதல்-மந்திரின் திறமையான நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளின் கடின உழைப்பும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பும் மாநிலத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்று வருகின்றன. இன்று, மாநிலம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது மட்டுமின்றி, நலன் மற்றும் வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் கடந்த 2014-15-ல் ரூ.1,24,104 ஆக இருந்தது. இது 2022-23-ல் ரூ.3,17,115 ஆக அதிகரித்துள்ளது. 2014-15-ல் மாநிலம் உருவானபோது, தெலுங்கானாவில் 20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே பாசன வசதி இருந்தது. இது தற்போது 73,33,000 ஏக்கராக அதிகரித்துள்ளது.

ரிது பந்து திட்டத்தின் கீழ் 65 லட்சம் விவசாயிகளுக்கு முதலீட்டு உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம் கோடியை வழங்கிய ஒரே மாநிலம் தெலுங்கானா ஆகும். மாநிலம் உருவானபோது 7,778 மெகாவாட் ஆக இருந்த மாநில மின் உற்பத்தி திறன், 18,453 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 8½ ஆண்டுகளில் 2,21,774 பணியிட நியமனங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தெலுங்கானாவில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வருமாறும், பட்ஜெட் ஆவணத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கடந்த 30-ந்தேதி அரசு சார்பில் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தொடரில் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.