;
Athirady Tamil News

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகன் சிக்கினார்… வீடு, அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடி பணம் பறிமுதல்!!

0

கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி உள்ளார். ஒப்பந்தம் வழங்க கமிஷன் வழங்க வேண்டும் என்று அந்த தனி நபரிடம் எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மதல் பேரம் பேசியுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டதையடுத்து, ரூ.81 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.40 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதாக பிரசாந்த் மதலிடம் அந்த தனி நபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிரசாந்த் மதலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், அங்கு கணக்கில் வராத ரூ.8 கோடி பணத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும், பிரசாந்த் மதலை கைது செய்ததுடன், எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்ச வழக்கில் சிக்கிய விவவாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்எல்ஏவை போலீசார் தேடுவதை அறிந்ததும், அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது குடும்பத்தினருக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தன் மீது குற்றச்சாட்டு இருப்பதால், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

\

You might also like

Leave A Reply

Your email address will not be published.