;
Athirady Tamil News

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: அதிகரிக்கும் குழந்தை பருவ உடல் பருமன்!!

0

குழந்தைகளிடம் உடல் பருமன் பாதிப்பு சமீபகாலமாக அபரிமிதமாக அதிகரித்து வருவதாகவும், இது சில சமயங்களில் வாழ்நாள் முழுவதற்கும் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலின் போது, உடல் பருமனின் தீவிர பாதிப்பை உலகமே உணர்ந்தது. ஆனால் தற்போது குழந்தை பருவத்தில் உடல் பருமன் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2020ம் ஆண்டு அறிக்கையின்படி, அமெரிக்காவில் 1.47 கோடி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் பருமனுடன் வாழ்கின்றனர். இதேபோல் மற்ற நாடுகளிலும் சிறு வயதில் கோடிக்கணக்கானவர்கள் உடல் பருமனால் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இத்தகைய உடல்பருமன், குழந்தைகளுக்கு அவர்களின் 12 வயதிற்குள்ளாகவே கடுமையான உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்கிறார் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழந்தைகளுக்கான இரைப்பை குடலியல் நிபுணர் கிறிஸ்டின் நுயென். குண்டான குழந்தைகள் அனைவருமே ஆரோக்கியமில்லாத குழந்தைகள் அல்ல என்று கூறும் மருத்துவர்கள், அதிகப்படியான கொழுப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். அதிகப்படியான உடல் பருமன் கல்லீரல் நோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், தூக்கத்தில் மூச்சுத்திணறல், எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகள், ஆரம்பகால மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும்.

இதில் பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கல்லீரல் கொழுப்பு நோய்க்கான மிகப்பெரிய ஆபத்து காரணி உடல் பருமன். கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2009ல் இருந்து 2018க்குள் இரட்டிப்பாகியுள்ளது. குழந்தைகளுக்கு வரும் போது இந்த நோய் வேகமாக வளர்ச்சி அடையலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகளுக்கான உட்சுரப்பியல் நிபுணரான டாக்டர் பேரி ரெய்னர் கூறுகையில், ‘‘மருத்துவ பணியை தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.

ஆனால் இப்போது அமெரிக்கா முழுவதும் டைப்-2 நோயாளிகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகளாக உள்ளனர். டைப்-2 நீரிழிவு வயது வந்தோருக்கான நோயாக கருதப்பட்டாலும், தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாகும்’’ என்றார். குழந்தை பருவத்தில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிக்கும் போது அது விரைவாக முன்னேறும் என்பதை சுட்டிக்காட்டும் ரெய்னர், நோய் கண்டறிந்த பிறகு 10 முதல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, நோயாளிகள் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பிரச்னைகள் மற்றும் பார்வை பாதிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், 15 ஆண்டுகளுக்குள், சராசரியாக அவர்களின் 27 வயதில், கிட்டத்தட்ட 70% நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

குழந்தை பருவத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பமாக இருக்கும்போது, 24% பேர் குறைமாதக் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். இதுமட்டுமின்றி, உடல் பருமன் மற்றும் அதிக உடல் பருமன் காரணமாக உண்டாகும் இருதய மாற்றங்கள் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம். 6 முதல் 7 வயதில் கூடுதல் எடை கொண்ட குழந்தைகளுக்கு, 11 முதல் 12 வயதிற்குள் அதிக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் தமனி விறைப்பு ஏற்படலாம். உடல் பருமன் இதயத்தின் கட்டமைப்பை மாற்றி, தசையை தடிமனாகவும் விரிவுபடுத்தவும் செய்கிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

* பெற்றோரின் கடமை
உணவியல் நிபுணரான வீனஸ் கலாமி கூறுகையில், ‘‘மனச்சோர்வு, ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் இருத்தல் மற்றும் சுற்றுப்புறங்கள் போன்ற குழந்தையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களும் அவர்களின் உடல் பருமனுக்கு காரணமாகின்றன. எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் புரிந்து செயல்பட வேண்டும். எப்போதுமே உணவுக் கட்டுப்பாடு பேச்சுக்களை தவிர்த்து, ஆரோக்கியத்தை பற்றி குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் எப்படி மனநிலை, கவனம் அல்லது குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தலாம் என்பதை பெரியவர்கள் விளக்க வேண்டும். உடல் எடை பற்றி பேசுவது, எடை இழப்பு குறித்து விமர்சிப்பது அல்லது பாராட்டுவது போன்றவை நெகடிவ்வான பாதிப்பை ஏற்படுத்தலாம். அதற்கு பதிலாக, குழந்தையின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்ல தேர்வுகளை உற்சாகப்படுத்துங்கள். ஒட்டுமொத்த குடும்பத்திலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துங்கள். இது அந்த குழந்தைக்கு ஒரு தண்டனையாக கருதப்படக்கூடாது’’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.