;
Athirady Tamil News

ஈராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

0

ஈராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்த சில நாள்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில், அரை தன்னாட்சி பெற்ற அந்நாட்டின் குர்தீஷ் மாகாணத்திலுள்ள, எண்ணெய் வயல்களின் மீது நேற்று (ஜூலை 16) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு, எந்தவொரு அமைப்பும் தற்போது வரை பெறுப்பேற்காத நிலையில், இராக்கின் மத்திய அரசுக்கும், குர்தீஷ் மாகாண அரசுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, குர்தீஷ் மாகாண பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கூறுகையில், ஸாகோ மாவட்டத்திலுள்ள எண்ணெய் வயலின் மீது 2 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், காலை முதல் அங்கு 3 வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றதால், அந்த எண்ணெய் வயல்களை நிர்வாகித்து வரும் நார்வே நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அதன் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இருப்பினும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அங்குள்ள கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் சேதாரங்களை மதிப்பீடு செய்து வருகின்றனர்.

முன்னதாக, தோஹுக் மாகாணத்தில், அமெரிக்க நிறுவனம் நிர்வாகித்து வந்த எண்ணெய் வயல்களின் மீது நேற்று முன்தினம் (ஜூலை 15) ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்கு தீ பரவி பலத்த சேதாரங்களை உண்டாக்கியது.

இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல்கள் அனைத்தும், ஈரானின் ஆதரவுப் பெற்று, இராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கிளர்ச்சிப்படைகள்தான் காரணம் என குர்தீஷ் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

குர்தீஷ் மாகாணத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் நடத்தப்படுவதாக, அம்மாகாணத்தின் இயற்கை வளத் துறை அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.