;
Athirady Tamil News

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பணிப்புரை!!

0

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும் நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு தீர்க்கமாக ஆராயப்பட்டது.

அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில் காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.