;
Athirady Tamil News

சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள ; 21 நிறைவேற்ற வேண்டும் – விஜயதாஸ!!

0

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும். அதனை சரிசெய்யவே 21 ஆம் திருத்தத்தை கொண்டு வருகின்றோம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.

அரசியல் அமைப்பின் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்கி 20 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மீண்டும் தீர்வு காணவே 21 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவருகின்றோம்.

இது குறித்து பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. சகல தரப்பினதும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொதுவான வரைபொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

21 ஆம் திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலமாக தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கருதுகின்றோம்.

இப்போது எம்மால் சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க முடியாத நிலையொன்று உருவாகியுள்ளது.

சர்வதேச நாடுகள் எம்மை நம்பத் தயாராக இல்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதாகவும், மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கருதி எம்முடனான உறவை முறித்துக்கொள்ளும் நிலையொன்று காணப்படுகின்றது.

ஆகவே அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றினை உருவாக்கினால் மட்டுமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் பெரும்பாலான விடயப்பரப்புகளில் சர்வசன வாக்கெடுப்பு அவசியம் இருக்காது என நான் கருதுகின்றேன். நீதிமன்றமும் அவ்வாறான அறிவிப்பை விடுக்கும் என எதிர்பார்க்க முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.