;
Athirady Tamil News

திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்ட வாலிபர்கள்!!

0

தற்போதைய காலக்கட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்களின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கி உள்ளது. தங்களது வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும், சொந்த கார், வீடு என ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர். அதுபோல் கர்நாடகத்தில் மண்டியா, மைசூரு, கோலார் பகுதிகளில் வாலிபர்கள், பட்டதாரிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விவசாயம் செய்வதால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

சமீபத்தில் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் ஆதிசுஞ்சனகிரி மடம் சார்பில் ஒக்கலிக சமுதாய மாநாடு நடந்தது. இதில் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாலிபர்கள் மணப்பெண்ணை தேடி முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் சுமார் 800 பெண்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். இதனால் சுமார் 24 ஆயிரம் பேர் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இன்றைய பெண்கள், சம்பளம் அதிகம் வாங்கும் நபரை தனது வாழ்க்கை துணையாக தேடுவதாகவும், இதனால் தங்களுக்கு பெண் கிடைக்காமல் சிக்கல் நீடிப்பதாகவும் கூறினர். அதுமட்டுமல்லாமல் கோலாரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமியிடம், அக்கட்சியின் இளம் தொண்டர் ஒருவர், தனக்கு பெண் கிடைக்கவில்லை என்றும், தனக்கு நீங்கள் தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை கடிதம் வழங்கிய சம்பவமும் அரங்கேறியது.

இந்த நிலையில் 30 வயதை கடந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். தங்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என வேண்டி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர். இதற்கான முன்பதிவு தொடங்கியது.

இதில் மண்டியா மாவட்டம் மட்டுமின்றி சிவமொக்கா, கோலார், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திட்டமிட்டப்படி திருமணம் ஆகாத வாலிபர்கள் நேற்று மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பாரதிநகருக்கு வந்தனர். அவர்கள் நேற்று காலை பாதயாத்திரை தொடங்கினர். அவர்கள் நடைபாதையாக ஸ்ரீரங்கப்பட்டணா, எச்.டி.கோட்டை வழியாக மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு வழியாக ஹனூருக்கு சென்று மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா சாமி கோவிலுக்கு செல்கிறார்கள். நேற்று பாதயாத்திரை தொடங்கிய வாலிபர்கள், 105 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை நாளை (சனிக்கிழமை) சென்றடைகிறார்கள். அங்கு அவர்கள் திருமண வரன் வேண்டி மலை மாதேஸ்வர சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்த உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.