;
Athirady Tamil News

சிறை நட்பு, பிரபல தாதாவாக வேண்டுமென கொலை? – அத்தீக் அகமது கொலையில் புதிய தகவல்கள்!!

0

உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதியாகவும் பிரபல தாதாகவும் முதலிடத்தில் இருந்தவர் அத்தீக் அகமது. முன்னாள் எம்.பி.யான அத்தீக், 5 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். நிலமோசடி, ஆள்கடத்தல், கொலை என அத்தீக் மீது 44 ஆண்டுகளாக 103 வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெற்று வந்தன.

அவற்றில், அலகாபாத்தின் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் என்பவரை 2005-ல் சுட்டுக் கொன்ற வழக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்கில் அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் சமீபத்தில் உ.பி. நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், மற்ற வழக்குகள் தொடர்பாக அத்தீக் மற்றும் அஷ்ரப் ஆகியோரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து பிரயாக்ராஜின் சிறையில் இருந்து துமன்கன்ச் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு இருவரையும் போலீஸார் அழைத்து சென்றனர்.

பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக இருவரையும் பலத்த போலீஸ் காவலுடன் பிரயாக்ராஜ் காவ்லின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தில் இருந்து கைகளில் விலங்குகளுடன் அத்தீக்கும், அஷ்ரப்பும் இறங்கி மருத்துவமனையை நோக்கி சில அடிகள் நடந்தனர்.

அங்கு திரளாகக் காத்திருந்த பத்திரிகையாளர்கள் இருவரிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்தபடி வந்தபோது, திடீரென பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இருந்து சரமாரியாக துப்பாக்கிகள் வெடித்தன. இதில், அத்தீக் ரத்த வெள்ளத்தில் கீழேசாய்ந்தார். அடுத்து சகோதரர் அஷ்ரப்பும் குண்டுகள் துளைத்து தரையில் விழுந்தார். அத்தீக்கின் தலையில் பின்புறம் நின்றபடி, மிகவும் நெருக்கமாக துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. அதேபோல், அஷ்ரப்பையும் எதிரில் இருந்து மிக அருகில் இருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் போல் வந்த 3 பேர் கைத் துப்பாக்கிகளை கீழே வீசிவிட்டு, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கைகளை தூக்கி கோஷமிட்டனர்.

அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த சுமார் 40 போலீஸாரில் ஒருவர் கூட துப்பாக்கிச் சூட்டை தடுக்க முயற்சிக்கவில்லை. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பேரும் அங்கிருந்து தப்பியோடவும் முயற்சிக்கவில்லை. அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களது பெயர் லவ்லின் திவாரி, அருண் மவுரியா மற்றும் சோனு என்ற சன்னிசிங் என்று தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காவலர் மற்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனப் பத்திரிகையாளர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

சிறையில் நட்பு: துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பேரும் வெளியில் அதிகம் தெரியாதவர்கள். சிறிய குற்றங்களுக்காக கைதாகி ஒரே சிறையில் இருந்த போது நண்பர்களாகி உள்ளனர். அத்தீக்கை போல் பிரபல தாதாவாக வேண்டும் என்பதற்காக அத்தீக், அஷ்ரப் ஆகியோரை சுட்டுக் கொன்றதாக அவர்கள் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மூவரும் பத்திரிகையாளர்கள் போர்வையில் கைகளில் மைக் மற்றும் கேமராக்கள், பைகளுடன் வந்துள்ளனர்.

17 போலீஸார் பணியிடை நீக்கம்: இந்த சம்பவத்தில் பாதுகாப்பு குறைகள் இருந்ததாக 17 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவையும் முதல்வர் ஆதித்யநாத் அமைத்துள்ளார்.

ஹவாலா வழக்குகளிலும் அத்தீக் அகமது சிக்கி உள்ளார். அவரது மனைவி ஷாயிஸ்தா பர்வீன் மீதும் பல வழக்குகள் பதிவாகி உள்ளன. தலைமறைவான சாயிஸ்தா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தீக்,அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டதால், சாயிஸ்தா விரைவில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.