;
Athirady Tamil News

உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் புதிய காலணிகள் உற்பத்தி ஆலை- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

0

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தைவான் நாட்டைச் சேர்ந்த பவுசென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. பவுசென் குழுமத்தைச் சேர்ந்த ஹை கிளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2,302 கோடி முதலீடு மற்றும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்கவுள்ளது. இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு அரசிற்கும் ஹை கிளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டம் அமைக்கப்படுவதன் மூலமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே, காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, பவுசென் குழுமத்தின் துணைத் தலைவர்கள் ஜார்ஜ் லியு மற்றும் அல்வின் ஹூ, திட்ட அலுவலக இயக்குநர் லின்ச் லின் மற்றும் உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.