;
Athirady Tamil News

தமிழக அரசு விளையாட்டு சம்பந்தமான கோரிக்கை வைத்தால் உதவி செய்ய தயார்: அமைச்சர் ஆர்.கே.ரோஜா!!

0

திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் (எ) ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் விரதம் இருந்து கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி 9 வாரங்கள் வழிபடுவதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோரின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனை அறிந்த இயக்குனர் ஆர்கே செல்வமணியின் தங்கை மகள் சாருலதா அருண்குமார் தம்பதி குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் பிரார்த்தனை செய்திருந்தார். தற்போது சாருலதா 7 மாத நிறைமாத கர்ப்பிணி என்பதால் இந்த பிரார்த்தனையை நிறைவேற்ற அருள்மிகு பூங்காவனத்தம்மன் கோவிலில் சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நடிகையுமான ஆர்.கே.ரோஜா வருகை தந்தார்.

திருக்கோயில் நிர்வாகிகள் முனிரத்தினம் ஜீவா மற்றும் ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர். பின்னர் சிறப்பு தரிசனம் செய்தை தொடர்ந்து அவரது உறவினரின் சீமந்த நிகழ்வில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேர்முக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதை சகித்துக் கொள்ள முடியாத சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி வருகிறார். புத்தூர் அருகே வடமாலைபேட்டை சுங்கச்சாவடியில் நடைபெற்ற சம்பவம் வேதனையளிக்கிறது. அந்த சம்பவத்தில் இருதரப்பினரிடையே தவறு உள்ளது. அதை சரி செய்து சமுகமாக பேசி முடிக்கப்பட்டது. மேலும், அடிக்கடி நடைபெறும் சம்பவங்களை தடுக்கும் வகையில் சுங்கச்சாவடி அருகில் புதிதாக காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரி மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மேலும் ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம். தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்கள் பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கியுள்ளது.

அந்த உத்தரவு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும். தமிழ் வழிக்கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்தேன். அதை விரைவாக வழங்கி முதல்வர் சிறப்பாக செயல்பட்டார். தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன். இரண்டு பேரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் என்பதோடு ஒரே துறையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போதைய நிலையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக உள்ளேன். தமிழகத்திற்கு விளையாட்டு சம்பந்தமாக எந்தவித கோரிக்கை வைத்தாலும் நான் உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.