;
Athirady Tamil News

ஆஞ்சநேயர் கோவிலில் சத்தியம் செய்ய பயந்து மாடியில் நகைகளை வீசி சென்ற திருடர்கள்!!

0

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புங்கனூர் அடுத்த ராஜா நாலா பண்ட கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊருக்கே காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார். இந்த கோவிலில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்கள் வீடு திரும்பியவுடன் கடவுள் உரிய தண்டனை கொடுப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதே போல் ஏராளமானோர் பொய் சத்தியம் செய்து வீட்டிற்கு சென்றவுடன் இறந்தும், விபத்தில் படுகாயமடைந்து கை கால்களை இழந்தும் பல வழிகளில் இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. இதனால், கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி புங்கனூர் அடுத்த மேலு பைலு கிராமத்தை சேர்ந்த நாகய்யா என்பவரின் மகனான வெங்கடர மணா வீட்டில் இருந்த தங்க செயின், மோதிரம் மற்றும் நெக்லஸ் ஆகிய நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடரமணா கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டினர்.

அதில், வீட்டில் ஒருவர் வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சத்தியம் செய்ய வர வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், கிராமத்தில் உள்ள அனைவரும் வரும் 9-ந்தேதி சத்தியம் செய்ய வர வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில், தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பல் வீர ஆஞ்ச நேயர் கோவிலில் பொய் சத்தியம் செய்தால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கருதியுள்ளனர். நேற்று முன்தினம் வெங்கட ரமணா வீட்டின் மேல்மாடியில் திருட்டு நகைகளை வீசி விட்டு சென்றனர். நகைகள் அனைத்தும் மாடியில் இருப்பதை கண்ட வெங்கடரமணாவின் குடும்பத்தினர் ஊர் பெரியோர்களிடம் நடந்ததை கூறினர். கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.