;
Athirady Tamil News

கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!!

0

கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான பணி, பொது பணித்துறையினரால் சைதாப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனத்திற்கு இடையில் ஆலந்தூர் பிரதான சாலையில் நடந்து வருகிறது. இதனால், இன்று முதல் 16-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஆலந்தூர் பிரதான சாலை தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலையில் இருந்து கிண்டி திரு.வி.க. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆலந்தூர் பிரதான சாலை வழியாக ஆலந்தூர் ஆடுதொட்டி பாலம் கடந்து சைதாப்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்தில் இருந்து வலது புறம் திரும்பி அண்ணா சாலை வழியாக சைதாப்பேட்டையை சென்றடையலாம்.

அண்ணாசாலை கிண்டி மார்க்கத்திலிருந்து திரு.வி.க. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் செல்லும் வாகனங்கள் கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இடது புறமாக திரும்பி வாட்டர் டேங்க் சாலை ரவுண்டானா சென்று தாங்கள் செல்லும் இலக்கை அடையலாம். சைதாப்பேட்டை பஜார் ரோட்டிலிருந்து ஆலந்தூர் ஆடுதொட்டி பாலம் வழியாக கிண்டி திரு.வி.க. எஸ்டேட் செல்லும் வாகனங்கள் சைதாப்பேட்டை ஆலந்தூர் மெயின்ரோடு ஐந்துலைட் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி மசூதி தெரு வழியாக மாந்தோப்பு பள்ளி சந்திப்பு சென்று கோடம்பாக்கம் சாலை வழியாக கோவிந்தன் ரோடு – அசோக்நகர் 11-வது அவென்யூ, 100 அடி சாலை மற்றும் காசிபாலம் வழியாக சென்று சிப்பட் சந்திப்பில் இடது புறம் திரும்பி வாட்டர் டேங்க் சாலை வழியாக கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அடையலாம். சைதாப்பேட்டை பஜார் ரோட்டிலிருந்து கிண்டி செல்லும் வாகனங்கள் பஜார் ரோட்டிலிருந்து ஐந்து லைட் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி மசூதி தெரு வழியாக மாந்தோப்பு பள்ளி சந்திப்பு சென்று வலதுபுறமாக திரும்பி கிழக்கு ஜோண்ஸ் சாலை பவள வண்ணன் சுரங்கப்பாதையை அடைந்து அண்ணா சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து ஆலந்தூர் சாலை மற்றும் ஆலந்தூர் ஆடு தொட்டி பாலம் கடந்து பட்டாபிராம் செல்லும் 70 எப் மாநகர பேருந்து மற்றும் அசோக்நகர் வழியாக டிபன்ஸ் காலனி செல்லும் மினி மாநகர சிற்றுந்து எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இடது புறமாக திரும்பி வாட்டர் டேங்க் ரோடு ரவுண்டானா சென்று இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை சிப்பட் சந்திப்பு வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.