;
Athirady Tamil News

கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்!!

0

மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதற்கான யோசனைகளை இவ்வருட இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “பழையன கழிதலும் புதிய புகுதலும் என்பதற்கிணங்க, கடற்றொழில் அமைச்சின் பணிகளை ஏற்று பணியாற்றி வருகிறேன்.

எரிபொருள் விலையேற்றம், உலகளாவிய கொவிட் பெருந்தொற்று என்பவற்றால் மீனவர்களின் கடற்றொழிலில் தொய்வுகள் ஏற்பட்டிருந்தன.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முன்னேற்பாடுகளுடன் அமைச்சின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடல் உணவுகளின் விலையேற்றம் குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன.

நாட்டில் ஏற்கனவே இருந்த நிலைமையினால் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள், எரிபொருள் விலையேற்றம், இறக்குமதி கட்டுப்பாடு, போதிய முகாமைத்துவம் இன்மை உள்ளிட்டவையே கடல் உணவு விலையேற்றத்திற்கு காரணமாகும்.

எனினும், வரும் காலங்களில் இவற்றை சீர்செய்து, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, முன்நோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் கடல் வளங்கள் அழிவடைவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் அடுத்த புதுடெல்லி பயணத்தின் போது இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி ஏற்படும் என்று நம்புகின்றேன்.

வட மாகாணத்தைப் பொருத்த வரையில் நீர் வேளாண்மையை பரவலாக முன்னெடுத்து வருகிறோம்.

குறிப்பாக கடல் அட்டை வளர்த்தல், கடல் பாசி, இறால் பண்ணை, நண்டு பண்ணை என பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.

வட மாகாணத்தில் சுமார் 5000 ஏக்கரில் இந்த நீர்வளத் திட்டங்களை முன்னெடுக்கும் இலக்கு இருந்தாலும் இதுவரை 1500 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டங்களை விஸ்தரித்துள்ளோம்.

இதில் ஈடுபட பல முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள், அல்லது முதலீடு இல்லாதவர்களுக்கும் அரசாங்கததின் உதவியோடு அந்த முதலீடுகளை செய்துவருகிறோம்.

புதிய முதலீட்டாளர்கள் தங்களின் கோரிக்கைகளை உதவி அரசாங்க அதிபரடம் முன்வைக்க முடியும்.

அவர் இந்தக் கோரிக்கைகளை இந்தத் தொழில்துறையுடன் தொடர்புபட்ட கடற்றொழில் திணைக்களம், நெக்டா நிறுவனம், கடலோர பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு கையளித்த பின்பு, இந்த நான்கு தரப்பினரினதும் கூட்டு செயற்பாட்டின் ஊடாக ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு, முதலீட்டாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதனை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனைத் தவிர, மீன்பிடித்தொழில் துறை தொடர்பான பழைய சட்டங்களைத் திருத்தி, தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் சட்டங்களில் திருத்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த வருட இறுதிக்குள் இதற்கான திருத்தங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை ஊடாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.