;
Athirady Tamil News

ரஷ்யா – உக்ரைன் போரால் சுற்றுச்சூழல் பாதிப்பு: ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற கிரெட்டா துன்பெர்க்!!

0

ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்துக்கு அவர் ஆய்வுக் குழுவினருடன் நேற்று சென்றார். போரினால் அரவமின்றி பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மீது உலக நாடுகளின் கவனத்தைத் திருப்பும் முயற்சியாக இந்தப் பயணத்தை அந்த ஆய்வுக்குழு மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 16 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், போரினால் சுற்றுச்சூழல் எந்த வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. குறிப்பாக, ஜூலை 6-ஆம் தேதி சேதமடைந்த கக்கோவ்கா அணை, அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்கிறது கிரெட்டா இடம்பெற்றுள்ள இக்குழு.

இது குறித்து கிரெட்டா அளித்தப் பேட்டியில், “அணை உடைப்பு சம்பவத்தை உக்ரைன் போர்க் குற்றமாக விசாரிக்கிறது. ஆனால், இதனை சுற்றுச்சூழல் மீதான கிரிமினல் தாக்குதலாகவே விசாரிக்க வேண்டும். இது ஈக்கோசைட் (“ecocide”). இது குறித்து நாம் உரக்கப் பேச வேண்டும். ஈக்கோசைட் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அணை தகர்ப்பு: உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. கிரிமியன் தீபகற்ப பகுதி, ஜபோரிச்ஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது.

சோவியத் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை ரஷ்யப் படைகள் தகர்த்ததாக உக்ரைனும், உக்ரைன் படைகள் தாக்கியதாக ரஷ்யாவும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இந்த அணையிலிருந்து நீர் வெளியேறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை இந்தக் குழு தீவிரமாக ஆய்வு செய்யவுள்ளது. அணை உடைப்பால் 24 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு: இந்தக் குழுவானது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தது. அப்போது போரினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அணை உடைப்பால் 1.25 பில்லியன் யூரோ அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வுக் குழு கணித்துள்ளது.

இந்த ஆலோசனை குறித்து உக்ரைன் நாட்டின் வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரே கோஸ்டின் கூறுகையில், “போரில் சத்தமில்லாமல் பலியாகும் அம்சமாக சுற்றுச்சூழல் இருந்துவிடக்கூடாது. உயர் மட்ட செயற்குழுவின் முதல் கூட்டத்தின், அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய போரால் உக்ரைனின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கம் குறித்து விளக்கினார். இந்த உலகிலேயே உக்ரைன் தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக பாவித்த சர்வதேச பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.