;
Athirady Tamil News

செந்தில் பாலாஜி விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் எழுதிய 5 பக்க கடிதம்!!

0

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் கவர்னர் ஆர்.என்.ரவி அந்த உத்தரவை வாபஸ் பெற்றார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய போது அதற்கான காரணங்களை தெரிவித்து 5 பக்க கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளார்.

இந்த 5 பக்க கடிதம் பற்றிய தகவல்கள் இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 5 பக்கத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்தேன்.

எனது ஆலோசனையை நியாயமான முறையில் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக கடந்த 1-ந்தேதி கோபப்படுகிற, நிதானம் இல்லாத வார்த்தைகளை கொண்ட ஒரு கடிதம் மூலம் பதில் அளித்தீர்கள். அதில் நீங்கள் எனது ஆலோசனையை உரிய முறையில் பரிசீலிக்காமல் நிதானம் இல்லாத மொழிகளைப் பயன்படுத்தி எனது அரசியல் அமைப்பு வரம்புகளை நான் மீறுவதாக குற்றம் சாட்டினீர்கள். உங்கள் பதில் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 15-ந்தேதி செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்குமாறு பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருந்தீர்கள். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்றும் தெரிவித்தீர்கள்.

செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பதையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நீதிமன்றக் காவலில் இருந்தார் என்பதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மாற்றுவதற்கான உங்கள் பரிந்துரைகளுக்கு வழிவகுத்த முக்கியமான உண்மைகள் மற்றும் காரணங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதால், முழு உண்மைகளை கேட்டு அன்றே (15.6.2023) கடிதம் எழுதினேன்.

இருப்பினும், நீங்கள் கேட்ட விவரங்களை தர மறுத்து, 15.6.2023 தேதியிட்ட கடிதத்தை 16.6.2023 அன்று எனக்கு தகாத வார்த்தைகளால் அனுப்பியதோடு, உங்கள் முந்தைய 15.6.2023 கடிதத்தின் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் திருப்பி அனுப்பியுள்ளீர்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை மற்ற இரண்டு அமைச்சர்களுக்கு மறுஒதுக்கீடு செய்வது தொடர்பான உங்கள் பரிந்துரையை ஏற்றுக்கொண்டேன். எனினும், நியாயமான நலன் கருதி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு உடன்படவில்லை. எனினும், எனக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க மறுத்து, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று அரசாணை வெளியிட்டீர்கள். செந்தில் பாலாஜியின் நடத்தையைப் பிரதிபலித்து சுப்ரீம் கோர்ட்டு பல கருத்துக்களை கூறியுள்ளது.

20.6.2016 அன்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட குற்ற வழக்கில் உள்ள உள்ள குற்றச்சாட்டுகள், அவர் வேறொரு ஆட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை அரசியல் பழிவாங்கல் என்று கூற முடியாது. புதிய ஆட்சியில் அவர் மீண்டும் அமைச்சராகவில்லை என்றால் 2021 ஜூலையில் புகார்தாரர்கள் சமரசம் செய்திருப்பார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நேர்மையான விசாரணைக்கு செந்தில் பாலாஜி இடையூறு விளைவிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கூறிய பிறகும், நீங்கள் அவரை அமைச்சராக வைத்திருந்தீர்கள். இது சி.பி.ஐ., வருமானவரித்துறையை கூட மிரட்டி தடுக்கும்.

அவருக்கு மேலும் தைரியம் கொடுத்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் 28.5.2023 அன்று செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய வீடுகள் மற்றும் நபர்கள் மீது சோதனை நடத்திய போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சோதனையை நடத்தவிடாமல் தடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தி, ஆவணங்களை பறித்து சென்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பையும் உதவியையும் நாட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமடைந்தது, ஏனெனில் உள்ளூர் போலீசார் போதுமான அளவில் ஒத்துழைக்கவில்லை. எனது அறிவுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை பிரதிபலிக்கிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால், சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்பட்டு, நீதியின் போக்கை சீர்குலைத்து விடுமோ என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது. இத்தகைய நிலை இறுதியில் மாநிலத்தில் அரசியலமைப்பு எந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163 மற்றும் 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்க எனக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.