;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதா? – உண்மை என்ன?!

0

பாகிஸ்தானின் கராச்சியில் 150 ஆண்டுகால பழமையான கோவில் என்று சொல்லப்படக்கூடிய இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு இரவு நேரம். இருபுறமும் பெரிய கட்டடங்கள் உள்ள சாலையின் நடுவே கனரக இயந்திரங்களால் தரையில் துளையிட்டுக்கொண்டிருந்தனர். இந்த வீடியோ பதிவை சமூகவளைதளத்தில் வெளியிட்ட சிலர், 150 வருட பழமையான கோவில் இடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கு பிறகுதான் அந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பரவத் தொடங்கியது. அரசு அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் காலையிலேயே அங்கு சென்றனர்.

அந்த சம்பவத்தில், எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என்பதும், எந்த இஸ்லாமிய அமைப்போ அல்லது இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களோ சம்பந்தப்படவில்லை என்பதும், அது இந்து சமூகங்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்னை என்பதும் கண்டறியப்பட்டது.

மாரி மாதா கோவில் கராச்சியின் மையப்பகுதியில் உள்ளது.

தன்னை சூர்யவன்ஷி ராஜ்புத் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் 45 வயதான ரேகா, தான் மாரி மாதா கோவிலின் நான்காம் தலைமுறை பாதுகாவலர் எனக் கூறுகிறார். 150 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை அவரது குடும்பத்தை சேர்ந்த மூத்தவர்கள் பராமரித்து வந்ததாகக் கூறுகிறார்.

இந்தக் கோயில் வளாகத்தில் ரேகா கட்டுமானப் பணிகளை தொடங்கியதும்தான் சர்ச்சை எழுந்தது. இந்தக் கோயில் தன்னுடைய சொத்து என்றும், பஞ்சாயத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

“150 முதல் 200 ஆண்டுகள் பழமையான கோயில் என்றால் அதை நடத்துபவர்கள் பேய்களாக இருக்கமாட்டார்கள், மனிதர்களாகத்தான் இருப்பார்கள். அங்கே உள்ள ரத்தக் கறைகள் என் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ரத்தக்கறை. அவர்கள் எந்த தமிழ் அறக்கட்டளையோ அல்லது பாங்கி குடும்பத்தையோ அல்லது வேறு எந்த குடும்பத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல.”

ரேகா தனக்குச் சொந்தமானது என்று கூறும் நிலத்தில் கட்டப்படும் கோவிலை எதிர்ப்பவர்கள் மீதான வெறுப்பை, ரேகாவின் பேச்சில் நீங்கள் தெளிவாக உணரலாம். அவர்கள் இந்துக்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினார். அவர்கள் கோவிலுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள்,” என்றார்.

“உண்மையில், அவர்கள் கோவிலைக் கைப்பற்றுவதன் மூலம் என் குடியிருப்பை ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் நான் ஒற்றைப் பெண் என்றும், இதை நான் என்ன செய்வேன் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

மாரி மாதா கோயில் கராச்சியில் உள்ள சிப்பாய் பஜார் பகுதியில் 500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

நான் அங்கு சென்றபோது, ரேகா கோவில் மற்றும் வளாகத்தின் எல்லைச் சுவருக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்து வெற்றிலையை மென்று கொண்டிருந்தார். கோவிலின் இரும்பு கேட்டை திறந்து உள்ளே காட்டினார். அங்கு ஒரு மூலையில் கட்டப்பட்ட ஒரு சிறிய அறையில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன, மற்றொரு அறையில் அவளுடைய பொருட்கள் ஒரு சோபாவுடன் வைக்கப்பட்டிருந்தன.

கோவில் ஒரு சிறிய அறையில் இருந்ததாக ரேகா என்னிடம் கூறினார், அதை பளிங்கு கற்கள் உள்ளிட்வை கொண்டு பெரிதாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் என்னை மறுபுறம் அழைத்துச் சென்றார் – அங்கு எல்லா பக்கங்களிலிருந்தும் மூடப்பட்டிருந்தது. ஒருபுறம் எல்லைச் சுவர், இரண்டு பக்கங்களில் உயரமான கட்டடங்கள் மற்றும் நான்காவது பக்கத்தில் ஒரு பெரிய பச்சை திரை துணி.

கோவிலுக்குள்ளும் அவருடைய நிலத்திற்குள்ளும் யாரும் நுழைய அனுமதியில்லை. அதை அவர் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

பச்சைத் திரையை விலக்கி உள்ளே அழைத்துச் சென்றார். அந்த நிலத்தில் ஆழமான குழி இருந்தது. கோவில் அறையின் அதே சுவர் குழியிலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருந்தது, அதை அவர் எனக்குக் காட்டினார்.

ஆறு முதல் ஏழு அறைகள் மற்றும் ஒரு கழிப்பறை இருந்தது என்று அவர் என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். “எட்டு குடும்பங்கள் 42 உறுப்பினர்களுடன் வாழ்ந்துள்ளனர். இது எங்கள் முன்னோர்களின் கோவில். நாங்கள் இங்கு எந்த மதராசியையும் பார்த்ததில்லை,” என்றார்.

ரேகாவை எதிர்ப்பவர்கள் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக குற்றம் சாட்டினர், அதை மறுத்த அவர், யாரிடமாவது ஆதாரம் இருந்தால் அதை என் முன் கொண்டு வாருங்கள் எனக் கூறினார்.

மாரி மாதா கோவில் கராச்சியின் மையப்பகுதியில் உள்ளது. சிப்பாய் பஜார் என்றழைக்கப்படும் மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கோவிலை சுற்றி மதராசி மற்றும் குஜராத்தி சமூகத்தினர் வாழ்கின்றனர். இச்சமுதாயத்தினர் கோவிலைத் தங்கள் சொத்து என்கிறார்கள். அந்த கோவில் ரேகாவின் முன்னோர்களிடம் பாதுகாப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது என்கின்றனர்.

“இந்த கோவில் மதராசி சமூகத்தினருக்கு சொந்தமானது, இது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் இது அவர்களுடையது என்று அர்த்தமல்ல, இதைப் பராமரிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது,” என்கிறார் சாரதா தேவி என்பவர்.

“கட்டடம் கட்டப்பட்டது, கோயில் சிறியதாக்கப்பட்டது. போலி ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பூஜைக்கு வருவோம். ஆனால் இப்போது பூட்டு போட்டுவிட்டனர்.”என்று சாரதா தேவி கூறினார்.

பிரகாஷ்குமார் கராச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக உள்ளார். அவரை கோவில் தெருவில் சந்தித்தேன். அவர் வார்டு பாய்க்கான சீருடை அணிந்திருந்தார். கோவில் இடிப்பு பணி நடந்ததை அறிந்தவுடன் நண்பர்களுடன் இங்கு வந்து ரேகாவிடம் கோவில் கேட்டை திறக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்ததாக கூறினார் அவர்.

கோவில் இடிப்பு பணி நடந்ததை அறிந்தவுடன் நண்பர்களுடன் இங்கு வந்து ரேகாவிடம் கோவில் கேட்டை திறக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்ததாக கூறினார் பிரகாஷ் குமார்

கோவில் இடிப்பு பணி நடந்ததை அறிந்தவுடன் நண்பர்களுடன் இங்கு வந்து ரேகாவிடம் கோவில் கேட்டை திறக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்ததாக கூறினார் பிரகாஷ் குமார்

“ஆறுக்கு எட்டு என்றளவில் கோயில் மாற்றப்பட்டுள்ளது. மாதா சௌகி இருக்கும் இடத்தில் கோவில் கட்டுவதற்காக நிலத்தை ஏழு கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார்” என்றார் அவர்.

மற்றொரு கோபமான இந்து, தனது முன்னோர்களால் கடவுளுக்கான (தேவி கா ஆஸ்தான்) உறைவிடம் கட்டப்பட்டதாக கூறினார்.

“யாரிடமும் கேட்காமல், கடவுளின் சிலை வாய்க்காலில் வைக்கப்பட்டுள்ளது. இது தெய்வ நிந்தனை குற்றமாகும். இதற்கு காரணமானவர்கள் பாகிஸ்தான் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார்.

கோயில் இடிப்பு பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிகைகளிலும் வெளியானது, இங்கு வந்த யூடியூபர்கள், இது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சதி என்று கூறினர்.

கராச்சியின் மேயர் முர்தாசா வஹாப்பும் இதை கவனத்தில் கொண்டு சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பில் நம்பிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

சிந்த் மனித உரிமைகள் ஆணையம் கட்டுமானப்பணிகளை நிறுத்தியது. ஆணையம் அந்த கோயில் யாருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடிக்க சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கராச்சி ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

சுக்தேவ் ஹேம்னானி

சிந்த் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சுக்தேவ் ஹேம்னானி பிபிசியிடம் கூறுகையில், “மதராசி இந்து பஞ்சாயத்தோ அல்லது கோவிலின் பாதுகாவலரான ரேகாவோ இதுவரை சொத்தின் உரிமையை நிலைநாட்ட ஆதாரமாக எதையும் வழங்கவில்லை.” என்றார்.

“இது தனியார் சொத்தா அல்லது பொதுச் சொத்தா என்பதைத் தீர்மானிக்க, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு சிறுபான்மை விவகாரச் செயலாளர் மற்றும் கராச்சி ஆணையர் ஆகியோருக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். அப்போதுதான் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.

கராச்சியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கோவில்களின் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரிவினைக்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட கோயில்கள் பின்னர் கட்டடங்களாக கட்டப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.