;
Athirady Tamil News

அமெரிக்க ராணுவ ரகசியங்கள் ரஷ்யாவின் கூட்டாளி வசமாக காரணமான ‘தட்டச்சு பிழை’!!

0

தட்டச்சு செய்யும் போது நேரிட்ட சிறிய பிழையால் அமெரிக்க ராணுவத்தின் பல லட்சம் இ-மெயில்கள் ரஷ்யாவின் கூட்டாளியான மாலிக்கு சென்றுள்ளன.

அமெரிக்க ராணுவத்தின் டொமைன் ‘.mil’ ஆகும். அதுவே, மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் இணையதள டொமைன் ‘.ml’ ஆகும்.

இதனை குறிப்பிடுவதில் நேரிட்ட சிறு பிழையே, ஆண்டுக்கணக்கான அமெரிக்க ராணுவத் தகவல்கள் மாலிக்குச் செல்ல காரணமாக இருந்துள்ளது.

அவற்றில் சில இமெயில்கள் பாஸ்வேர்ட், மருத்துவ ஆவணங்கள் போன்ற மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியவை.

இந்த பிரச்னையைக் களைய நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ராணுவ தலையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதனை முதன் முதலில் செய்தியாக்கிய ‘ஃபினான்சியல் டைம்ஸ்’ தகவல்படி, நெதர்லாந்தைச் சேர்ந்த இணைய தொழில்முனைவோரான ஜோஹன்னஸ் ஜூர்பியர், இந்த பிரச்னையை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளார்.

2013-ம் ஆண்டு முதல் மாலியின் டொமைனை மேலாண்மை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள அவர், கடந்த சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தவறான முகவரிக்கு அனுப்பப்பட்ட மெயில்களை கண்டுபிடித்துள்ளார்.

அவற்றில் எதுவும் வகைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், மருத்துவ தரவுகள், அமெரிக்க ராணுவ தளங்களின் வரைபடங்கள், நிதிச் செலவினங்கள், அதிகாரிகளின் அரசுமுறைப் பயணங்களுக்கான திட்ட ஆவணங்கள் மற்றும் சில தூதரக தகவல்களும் அடங்கியுள்ளன என்று அந்த பத்திரிகை செய்தி கூறுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளை உஷார்படுத்தும் நோக்கில் ஜோஹன்னஸ் ஜூர்பியர் இம்மாதம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். “மாலி அரசுடனான ஒப்பந்தம் விரைவில் முடியப் போகிறது. அதன் பொருள் என்னவென்றால், வேறு யாரும் இந்த ஒப்பந்தத்தை எடுத்தால் சவாலான சூழல் எழலாம். அமெரிக்காவின் எதிரிகளால் இந்த ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மாலியை ஆளும் ராணுவ அரசு இணையதள டொமைன் மேலாண்மை செய்யும் பொறுப்பை வரும் திங்கட்கிழமை எடுத்துக் கொள்கிறது.

இதுதொடர்பாக ஜோஹன்னஸ் ஜூர்பியரின் கருத்தை அறிய அவரை தொடர்பு கொண்டோம்.

“அமெரிக்க ராணுவ தகவல் தொடர்புகள் அனைத்துமே ‘வகைப்படுத்தப்பட்டவை’ மற்றும் ‘ரகசியம்’ என்று குறிப்பிடப்பட்டு, தனியான தகவல் தொடர்பு வழியே பரிமாறப்படும். ஆகவே, இது ஒன்றும் தவறுதலாக நடந்ததாக தெரியவில்லை” என்று அமெரிக்க ராணுவத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு சட்டத்துறையின் முன்னாள் மூத்த ஆலோசகரான வழக்கறிஞர் ஸ்டீவன் ஸ்ட்ரான்ஸ்கி, “அதிக தீங்கிழைக்கக் கூடிய தகவல்களாக இல்லாவிட்டாலும் எதிரிகளால் அவை தவறாக கையாளப்படலாம். குறிப்பாக, தனிப்பட்ட அதிகாரிகள் குறித்த தகவல்களை அவர்கள் தவறான நோக்கில் பயன்படுத்தலாம்.” என்று கூறியுள்ளார்.

“வெளிநாட்டு சக்தி ஒன்று நமது ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய தகவல்களை ஆவணப்படுத்த முடியும் என்பதையே இதுபோன்ற தகவல் தொடர்பு உணர்த்துகிறது. அவர்கள் இதனை சதி நோக்கிலோ அல்லது பணம் திரட்டும் நோக்கிலோ பயன்படுத்தக் கூடும். குறிப்பாக, பிற நாட்டு அரசுகளுக்கு இவை உபயோகமான தகவல்களே” என்பது அவரது கருத்து.

சிரகியூஸ் பல்கலைக்கழகத்தில் தரவுகள் சேமிப்புத்துறை பேராசிரியர் லீ மெக்நைட் பேசுகையில், “அமெரிக்க ராணுவத்தின் கவனத்திற்கு இந்த பிரச்னை கொண்டு வரப்பட்டிருப்பது அதிர்ஷ்டவசமானது. அத்துடன் அந்த குறிப்பிட்ட டொமைன் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இல்லாமல் மாலி அரசிடம் இருந்ததும் ஒரு வகையில் நல்ல விஷயம்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல் தொடர்பு அதிகாரியை பிபிசி தொடர்பு கொண்ட போது, பாதுகாப்புத்துறை இந்த பிரச்னையை மிகத் தீவிரமான ஒன்றாக எடுத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

‘.mil’ டொமைனுக்கு அனுப்ப வேண்டிய இமெயில்கள் தவறான முகவரிக்குச் சென்றுவிடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்புத்துறை எடுத்திருப்பதாகவும், ஒருவேளை தவறுதலாக அப்படி நடந்துவிட்டாலும் அவற்றை முடக்கவும், அந்த இமெயிலை அனுப்பும் நபர்களுக்கு தெரியப்படுத்தி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் முகவரியை சரிபார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.