;
Athirady Tamil News

ஓப்பன்ஹெய்மர் யார்? அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதமும் பகவத்கீதையும் படித்தது ஏன்?

0

அது 16 ஜூலை 1945 அன்றைய அதிகாலை நேரம். ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உலகை புரட்டிப் போடும் ஒரு கணத்திற்காக பாதுகாப்பான பதுங்கு குழி ஒன்றுக்குள் காத்திருந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் (6 மைல்) தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தின் வெளிர் மணலில் “டிரினிட்டி” என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

ஓப்பன்ஹெய்மர் மிகுந்த களைப்புடன் இருந்ததைப் போல் தோன்றியது. அவர் எப்போதும் மெலிந்தவராகத்தான் இருந்தார். ஆனால் அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய “மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட்” இன் அறிவியல் பிரிவான “புராஜெக்ட் ஒய்” இன் இயக்குநராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அவரது எடை வெறும் 52 கிலோவாக குறைந்துவிட்டது.

5 அடி 10 அங்குலம் (178 செமீ) உயரமுடைய அவரை அந்த எடை மிகவும் மெல்லிய தேகம் கொண்டவராக மாற்றியது. அணுகுண்டு சோதனை நடந்த நாளில் முந்தைய இரவில் அவர் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கினார். கவலை மற்றும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் இருமல் பாதிப்பால் அவருக்கு பெரிதாக தூக்கம் வரவில்லை.

1945 ஆம் ஆண்டின் அந்த நாள், ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல முக்கிய தருணங்களில் ஒன்றாகும். இது வரலாற்றாசிரியர்களான கை பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே ஷெர்வின் ஆகியோரின் 2005 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான அமெரிக்கன் ப்ரோமிதியஸில் விவரிக்கப்பட்டுள்ளது. ஓப்பன்ஹெய்மரின் அந்த நாள் தான் ஜூலை 21 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான புதிய திரைப்படத்திற்கான அடிப்படையாக அமைந்தது.

கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதாநாயகனாக சிலியன் மர்ஃபி நடித்துள்ளார்.
அணுகுண்டு வெடித்தபின் மனதில் தோன்றிய பகவத் கீதை வரி

அணுகுண்டு சோதனைக்கான கடைசி நிமிடங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போது, பேர்ட் மற்றும் ஷெர்வின் கூறியபடி, ஓப்பன்ஹெய்மரின் மனநிலை மிகவும் பதற்றமாக இருந்தது. “டாக்டர் ஓப்பன்ஹெய்மர், அந்த கடைசி வினாடிகளில் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார்.

அணுகுண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, ​​சூரியனை மிஞ்சும் ஒளி ஏற்பட்டது. 21 கிலோ டன் சக்தி கொண்ட டிஎன்டியின் விசையுடன், அதுவரை உலகில் காணப்படாத மிகப்பெரிய குண்டுவெடிப்பாக அது இருந்தது. இது 160 கிமீ (100 மைல்) தொலைவில் கூட அதிர்ச்சி அலையை உருவாக்கியது. மாபெரும் கர்ஜனையைப் போல் இருந்த குண்டுவெடிப்பின் சத்தம், அந்த நிலப்பரப்பையை அதிரச் செய்ததுடன், அதிலிருந்து எழுந்த புகை காளான் மேகம் போல் வானத்தில் உயர்ந்துகொண்டே சென்றது. அப்போது தான் ஓப்பன்ஹெய்மரின் மனம் சற்று அமைதியடைந்தது.

சில நிமிடங்களுக்குப் பின், ஓப்பன்ஹெய்மரின் நண்பரும் சக ஊழியருமான இசிடோர் ரபி தூரத்திலிருந்து அவரைப் பார்த்தார். அவருடைய நடையையும், அவர் காரில் இருந்து இறங்கிய காட்சியையும் மறக்கவே முடியாது என ஓப்பன்ஹெய்மர் குறித்து அவர் தெரிவித்தார்.

1960 களில் நடத்தப்பட்ட நேர்காணல்களில் , ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டு வெடித்த போது அவரது மனதில் தோன்றிய ஒரு விஷயத்தைப் பற்றி அடிக்கடி தெரிவித்தார். இந்து மத நூலான பகவத் கீதையில் இருக்கும் ஒரு வரி தான் அது: “இப்போது நான் உலகங்களை அழிக்கும் காலனாகிவிட்டேன்.” பகவத் கீதையில் அர்ச்சுனனுடன் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணர், “நான் தான் காலன். உலகங்களை அழிக்கும் காலதேவன்,” என்று சொல்லியிருந்ததை ஒட்டி ஓப்பன்ஹெய்மரின் மனதில் அந்த வரி தோன்றியது.

அதற்கடுத்த நாட்களில் அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். “அடுத்த இரண்டு வாரங்களுக்கு ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மிகவும் அமைதியாகவும், குழப்பத்துடனும் காணப்பட்டார். ஏனென்றால் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்,” என அவரது நண்பர்களில் ஒருவர் தெரிவித்தார். அப்போது ஒருநாள், காலையில் தொடங்கி மாலை வரை ஜப்பானியர்கள் குறித்து புலம்பிக்கொண்டே இருந்தார். பாவம் அந்த ஏழைமக்கள். பாவம் அந்த ஏழை மக்கள் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். அதன் பின் மீண்டும் சில நாட்கள் கழித்து அவர் திரும்பவும் பதற்றமடைந்தார். ஏதோ ஒன்ளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பதை வழக்கமாக்கினார். ஏதோ ஒரு துல்லியத்தை எதிர்பார்த்தார்.

அவரது ராணுவ சகாக்களுடன் நடத்திய ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, அவர் அந்த ஜப்பான் மக்களை மறந்தேவிட்டார். வரலாற்றாசிரியர்கள் பேர்ட் மற்றும் ஷெர்வின் கூற்றின்படி, வெடிகுண்டு வீச்சுக்கான சரியான சூழ்நிலைகள் குறித்து மிக முக்கியமாகச் சிந்திக்கத் தொடங்கினார்: “மழை அல்லது பனிப் பொழிவு இருக்கும் போது அந்த குண்டை அங்கே போட்டுவிடக்கூடாது. இதே போல் வெகு உயரத்திலும் அந்த குண்டுவெடித்துவிடக் கூடாது. அந்த குண்டு அதிக உயரத்துக்குச் செல்லவும் கூடாது. அப்படிச் சென்றால் தாக்கப்படும் இடத்தில் அதிக சேதங்களை அது ஏற்படுத்தாதது.” ட்ரினிட்டி குண்டுவெடிப்பு சோதனைக்குப் பின் ஒரு மாதத்திற்குள் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் மக்கள் நெருக்கம் மிக்க பகுதியில் அணுகுண்டு வீச்சு நடந்ததாக அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்ட போது, அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் உறைந்தனர்.

அந்த அணுகுண்டை நிதர்சனமான உண்மையாக்க உழைத்த அனைவரையும் விட, மான்ஹாட்டன் திட்டத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் அறிவாற்றல் மிக்க இதயமாக ஓப்பன்ஹெய்மர் இருந்தார். போருக்குப் பின் அவருடன் பணியாற்றிய ஜெரெமி பெர்ன்ஸ்டீன், வேறு யாராலும் அதைச் சாதித்திருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தார். 2004ம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியது போல், லாஸ் அலமோஸ் குண்டுவெடிப்பு சோதனைத் திட்டத்தின் இயக்குனராக ஓப்பன்ஹெய்மர் இல்லாமல் இருந்திருந்தால், இரண்டாம் உலகப் போர் ஒரு அணுகுண்டு தாக்குதலைக் காணாமலேயே முடிவடைந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓப்பன்ஹெய்மர் தனது உழைப்பின் பலனைக் கண்டபோது, அதற்கான எதிர்வினைகள், அவற்றை அவர் கடந்து சென்ற வேகத்தைக் குறிப்பிடாமல், திகைப்பூட்டுவதாகத் தோன்றலாம். நரம்பு பலவீனம், துல்லியமான லட்சியம், பெருந்தன்மை ஆகியவற்றின் கலவையை ஒரு தனி நபருக்குள் சமன்படுத்துவது மிகவும் கடினம்.

பேர்ட் மற்றும் ஷெர்வின் ஆகியோர் ஓப்பன்ஹெய்மரை ஒரு “புரியாத புதிர்” என்று அழைக்கிறார்கள். “ஒரு சிறந்த தலைவரின் கவர்ச்சியான குணங்களை வெளிப்படுத்திய ஒரு தத்துவார்த்த இயற்பியலாளர்.” ஒரு விஞ்ஞானி, ஆனால் மற்றொரு நண்பர் ஒருமுறை அவரை “கற்பனையை அதன் உச்சத்திலேயே கையாளும் நபர்” என்று விவரித்தார் .

பேர்ட் மற்றும் ஷெர்வின் ஆகியோரின் கருத்தின் படி, ஓப்பன்ஹெய்மரிடம் உள்ள முரண்பாடுகள் – நண்பர்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் யாரும் அவரை விளக்க முடியாமல் தவிக்கும் குணங்கள் – அவரது ஆரம்ப காலத்திலிருந்தே இருந்ததாகத் தெரிகிறது. 1904 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்த ஓப்பன்ஹெய்மர், ஜவுளி வர்த்தகத்தின் மூலம் பணக்காரர்களாக இருந்த முதல் தலைமுறை ஜெர்மன் யூத குடியேறியவர்களின் குழந்தையாகப் பிறந்தார். மூன்று பணிப்பெண்கள், ஒரு ஓட்டுநர் மற்றும் சுவர்களில் ஐரோப்பிய கலைகளுடன் அவர்களுடைய குடும்ப வீடு, வெஸ்ட் அப்பர் சைட் பகுதியில் இருந்தது.

இது போல் ஆடம்பரமான வளர்ப்பு இருந்தபோதிலும், ஓப்பன்ஹெய்மர் குழந்தைப் பருவ நண்பர்களால் கெட்டுப்போகாதவராகவும், தாராள மனப்பான்மை கொண்டவராகவும் நினைவுகூரப்பட்டார். பள்ளியில் அவருடன் படித்த ஒரு நண்பரான, ஜேன் டிடிஷெய்ம், அவரை “அசாதாரணமாக எளிதில் முகம் சிவக்கக்கூடியவர்”, என்றும், “மிகவும் பலவீனமானவர், இளஞ்சிவப்பு சிறக் கன்னமுள்ளவர், மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்…” என்றும், ஆனால் “மிகவும் புத்திசாலித்தனமானவர்” என்றும் நினைவு கூர்ந்தார். “எல்லோரும் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் மற்றும் உயர்ந்தவர் என்பதை மிக விரைவாக ஒப்புக்கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

ஒன்பது வயதிற்குள், அவர் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளில் தத்துவத்தைப் படித்தார், மேலும் கனிமவியலில் ஆர்வமாக இருந்தார் – அவரின் கண்டுபிடிப்புக்கள் குறித்து, சென்ட்ரல் பூங்காவில் அலைந்து திரிந்து நியூயார்க் மினரலாஜிக்கல் கிளப்பிற்கு கடிதங்கள் எழுதினார். அவரது கடிதங்கள் மிகவும் பயனுள்ளவையாக கருதப்பட்டன. நியூயார்க் மினரலாஜிக்கள் கிளப் அவரை வயது வந்தவர் என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவரது கடிதங்கள் குறித்து விளக்குமாறு அழைத்தது. இந்த அறிவார்ந்த இயல்பு ஓப்பன்ஹெய்மரின் இளம் வயதில் அவர் தனிமையில் இருப்பதை ஊக்குவித்தது என பேர்ட் மற்றும் ஷெர்வின் தெரிவிக்கின்றனர். “அவர் பொதுவாக எதைச் செய்தாலும், அல்லது நினைத்தாலும் அதில் அதீத ஆர்வம் காட்டினார்,” என்று ஒரு நண்பர் நினைவு கூர்ந்தார். அவர் பாலின எதிர்பார்ப்புகளுக்கு இணங்க ஆர்வமில்லாமல் இருந்தார் – விளையாட்டுகளில் ஆர்வம் காட்டவில்லை அல்லது அவரது உறவினர் ஒருவர் கூறியது போல், “அவரது வயதுக்கு ஏற்றாற்போன்ற பழக்கவழக்கங்கள் இல்லாதவராக இருந்தார்.” மேலும்,”மற்ற தோழர்களைப் போல அவர் இல்லை என்பதற்காக அடிக்கடி கிண்டல் மற்றும் கேலிக்கு ஆளானார்.” ஆனால் அவரது புத்திசாலித் தனத்தை பெற்றோர்கள் முழுமையாக நம்பினார்கள்.

“ஒரு விரும்பத்தகாத ஈகோவை வளர்த்துக்கொள்வதன் மூலம் என் பெற்றோரின் நம்பிக்கையை நான் திருப்பிச் செலுத்தினேன்,” என்று ஓப்பன்ஹெய்மர் பின்னொரு நாளில் தெரிவித்தார். “என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பிய சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை நான் அவமதித்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” “இது நிச்சயமாக வேடிக்கையான ஒன்றல்ல,” என்று அவர் ஒருமுறை மற்றொரு நண்பரிடம் கூறினார்,

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படிப்பதற்காக அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது, ​​ஓபன்ஹெய்மரின் மன ரீதியான பலவீனம் அம்பலமானது. அவரது மற்றவர்களிடம் காண்பித்து வந்த கர்வம் என்ற மெல்லிய முகமூடி அவருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆலிஸ் கிம்பல் ஸ்மித் மற்றும் சார்லஸ் வீனர் ஆகியோரால் தொகுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியான கடிதத் தொகுப்பு ஒன்றில், 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார்: “நான் உழைத்து எண்ணற்ற ஆய்வறிக்கைகள், குறிப்புகள், கவிதைகள், கதைகள் மற்றும் குப்பைகளை எழுதுகிறேன். நான் மூன்று வெவ்வேறு ஆய்வகங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் தேநீர் பரிமாறிக்கொண்டே தொலைந்து போன சில ஆன்மாக்களுடன் கற்றறிந்தவரைப் போல் பேசுகிறேன். வார இறுதியில் கிரேக்கத்தைப் படிக்கவும், சிரிப்பு மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து சிறிதளவாவது விடுபடவும் நான் இங்கிருந்த செல்கிறேன். அப்போதே நான் இறந்துபோயிருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.”

ஸ்மித் மற்றும் வீனரால் தொகுக்கப்பட்ட அடுத்தடுத்த கடிதங்கள், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் அவரது முதுகலை படிப்பின் மூலம் பிரச்சினைகள் தொடர்ந்தன என்பதை வெளிப்படுத்துகின்றன. ஓப்பன்ஹெய்மரின் பலவீனங்களில் ஒன்றான ‘ஆய்வகத்தில் சில வேலைகளை மேற்கொள்ள’ அவரது ஆசிரியர் வலியுறுத்தினார். “எனக்கு மிகவும் மோசமான நேரமாக உள்ளது,” என்று அவர் 1925 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “ஆய்வக வேலை ஒரு பயங்கரமான சலிப்பை ஏற்படுத்துகிறது, மேலும் அங்கு நான் எதையும் கற்றுக்கொள்கிறேன் என்று உணர முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருக்கிறேன்.”

அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஓபன்ஹெய்மரின் தீவிரம் அவரை வேண்டுமென்றே தனது ஆசிரியரின் மேசையில் ஆய்வக ரசாயனங்கள் கலந்த ஒரு ஆப்பிளை விட்டுச் செல்லும் அளவுக்குக் கொண்டுசென்றது. அப்போது அவர் பொறாமை மற்றும் இயலாமை போன்ற உணர்வுகளால் உந்தப்பட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் பின்னர் ஊகித்தனர். ஆசிரியர் அந்த ஆப்பிளை சாப்பிடவில்லை. ஆனால் கேம்பிரிட்ஜில் ஓப்பன்ஹெய்மரின் கல்விக்கு அது ஆபத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே அங்கு கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார். மனநல மருத்துவர் மனநோயைக் கண்டறிந்தார். ஆனால் சிகிச்சையினால் எந்தப் பயனும் ஏற்படாது என அவர் தெரிவித்துவிட்டார்.
மனநல பாதிப்பில் இருந்து மீட்க உதவிய இலக்கியங்கள்

அந்தக் காலகட்டத்தை நினைவுகூர்ந்து, ஓப்பன்ஹெய்மர் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறையில் தற்கொலை செய்துகொள்ளத் தீவிரமாகச் சிந்தித்ததாகத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு, பாரிஸுக்கு பயணம் மேற்கொண்டபோது, ​​​​அவரது நெருங்கிய நண்பரான பிரான்சிஸ் பெர்குசன், அவர் தனது காதலியிடம் காதலைத் தெரிவித்ததாக கூறியபோது, சம்பந்தமே இல்லாமல் ஓப்பன்ஹெய்மர் அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளார்.

மனநல மருத்துவ சிகிச்சை மூலம் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், அவரை மீட்க இலக்கிய படைப்புகள் உதவின. பேர்ட் மற்றும் ஷெர்வினின் கூற்றுப்படி, அவர் கோர்சிகாவில் ஒரு விடுமுறையில் இருந்தபோது மார்செல் ப்ரூஸ்டின் புத்தகம் ஒன்றைப் படித்தார். அதன் மூலம் அவரது மனநிலையின் சில மாற்றங்களைக் கண்டார். அது அவருக்கு ஒரு மன உறுதியை அளித்தது.

அந்தப் புத்தகத்தில் இருந்த பல பத்திகளை அவர் மனப்பாடம் செய்யுமளவுக்கு அது இருந்தது. இது போன்ற சில அனுபவங்களைத் தொடர்ந்து, அவர் வாழ்க்கை முழுவதும் ஆன்மீக புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை உருவாக்கிக்கொண்டார். பின்னர் அவர் பல தத்துவங்களைப் பேசுவதைப் போல் சில நேரங்களில் பேசியிருக்கிறார். அவர் கூறிய சில கருத்துக்கள் தீர்க்கதரிசனம் போல் தோன்றியதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அவர் பின்னர் நினைவு கூர்ந்தபடி, “மிகவும் கனிவான மற்றும் அதிக சகிப்புத்தன்மை கொண்டவராக” உணர்ந்து, இலகுவான மனநிலையில் இங்கிலாந்துக்குத் திரும்பினார். 1926 இன் முற்பகுதியில், அவர் ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநரை சந்தித்தார், அவர் ஒரு கோட்பாட்டாளராக ஓபன்ஹெமரின் திறமைகளை விரைவில் நம்பினார், அவரை அங்கு படிக்கவும் அழைத்தார்.

ஸ்மித் மற்றும் வீனரின் கூற்றுப்படி, அவர் 1926 ஆம் ஆண்டை “இயற்பியலுக்கு வந்த” ஆண்டாக விவரித்தார். இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு. அவர் பிஎச்டி மற்றும் முதுகலை உதவித்தொகையை அடுத்த ஆண்டில் பெற்றார். அவர் கோட்பாட்டு இயற்பியலின் வளர்ச்சியை அதிகரிக்க ஆரவமாக இருந்த சமூகத்தின் ஒரு பகுதியாக ஆனார், வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக மாறும் விஞ்ஞானிகளைச் சந்தித்தார். பலர் இறுதியில் லாஸ் அலமோஸில் ஓப்பன்ஹெய்மருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

அமெரிக்காவுக்குத் திரும்பிய ஓப்பன்ஹெய்மர், கலிபோர்னியாவில் தனது இயற்பியல் பணிகளைத் தொடர ஹார்வர்டில் சில மாதங்கள் கழித்தார். இந்தக் காலகட்டத்திலிருந்து அவர் எழுதிய கடிதங்களின் தொனி ஒரு நிலையான, தாராள மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. அவர் தனது இளைய சகோதரருக்கு காதல் மற்றும் கலைகளில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பற்றி எழுதினார்.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அவர் பரிசோதனையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். காஸ்மிக் கதிர்கள் மற்றும் அணுசக்தி சிதைவு பற்றிய அவர்களின் முடிவுகளை விளக்கினார். பின்னர் ஒருமுறை,”இது என்ன என்பதை புரிந்து கொண்ட ஒரே ஒருவன் நான் தான்,” என அவர் கண்டுபிடித்தார்.

இறுதியில் அவர் உருவாக்கிய துறை, அவர் விரும்பியவாறு வளரத் தொடங்கியது. அப்போது, அவர் தான் விரும்பும் கோட்பாடு குறித்து பேசவேண்டிய தேவை என குறிப்பிட்டுபேசுகையில், “முதலில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு விளக்கி, பின்னர் கேட்கும் எவருக்கும் விளக்கவேண்டும். கற்றுக்கொண்டது, தீர்க்கப்படாத சிக்கல்கள் என்ன என அனைத்தையும் விளக்கவேண்டும்.” என்றார்.

அவர் முதலில் தன்னை ஒரு “கண்டிப்பான” ஆசிரியர் என்று கூறினார். ஆனால் இப்படி இருப்பதன் மூலம் அவர், ப்ராஜெக்ட் Y இல் பணியாற்றிய காலத்தில் அவருக்கான மதிப்பை மெருகேற்றினார்.

1930 களின் முற்பகுதியில், அவர் ஏராளமான புத்தகங்களைப் படித்து தனது அறிவுத் தேடலை வலுப்படுத்தினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் இந்து வேதங்களைத் தேடிப் படித்தார். மொழிபெயர்க்கப்படாத பகவத் கீதையைப் படிப்பதற்காகவே சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார் – பின்னர் அவர் புகழ்பெற்ற ‘”இப்போது நான் உலகங்களை அழிக்கும் காலன் ஆகிவிட்டேன்” என்ற பதத்தைப் பயன்படுத்தினார். அவரது ஆர்வம் வெறும் அறிவுசார்ந்ததல்ல.

அவரது 20களில் ப்ரூஸ்ட் என்பவருடன் இணைந்து தொடங்கிய, சுயமாக பரிந்துரைக்கப்பட்ட பிபிலியோதெரபியின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிகிறது. பகவத் கீதை, ஒரு பிரபுத்துவ குடும்பத்தின் இரு கரங்களுக்கு இடையிலான போரை மையமாகக் கொண்ட கதை.

இந்தக் கதை, ஓப்பன்ஹெய்மருக்கு ஒரு தத்துவ அடித்தளத்தை அளித்தது.ப்ராஜெக்ட் Y இல் அவர் எதிர்கொண்ட தார்மீக தெளிவின்மைக்கு அது நேரடியாகப் பொருந்தும். இது கடமை, விதி மற்றும் விளைவுகளிலிருந்து விலகுதல் பற்றிய கருத்துக்களை வலியுறுத்தியது. விளைவுகளின் பயத்தை செயலற்ற தன்மைக்கு நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தியது. 1932 இல் இருந்து தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில், ஓப்பன்ஹெய்மர் கீதையை குறிப்பாக குறிப்பிட்டு, அத்தகைய தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு சூழ்நிலையாக போரை குறிப்பிடுகிறார்:

“ஒழுக்கத்தின் மூலம் நாம் அமைதியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும் மேலும் பாதகமான சூழ்நிலைகளில் நமது மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவற்றைப் பாதுகாக்க ஒழுக்கத்தின் மூலம் கற்றுக்கொள்கிறோம் என்று நான் நம்புகிறேன். எனவே ஒழுக்கத்தைத் தூண்டும் அனைத்து விஷயங்களும் படிப்பு, மனிதர்கள் மற்றும் பொதுநலவாயத்திற்கான நமது கடமைகள், போர்- இவை அனைத்திலிருந்தும் நாம் நம்மை பிரித்தெடுக்கவேண்டும். இதன் மூலம் மட்டுமே நாம் அமைதியை உணரமுடியும்.”

1930களின் நடுப்பகுதியில், ஓப்பன்ஹெய்மர், ஜீன் டாட்லாக் என்ற ஒரு மனநல மருத்துவரைக் காதலித்தார். பேர்ட் மற்றும் ஷெர்வினின் கூற்றின்படி, டாட்லாக்கின் சிக்கலான தன்மை ஓப்பன்ஹெய்மருக்கு சமமாக இருந்தது. அவர் பரவலாக ஒரு சமூக மனசாட்சியால் உந்தப்பட்டார். அவர் “பெருமையால் தொடப்பட்டவர்” என்று சிறுவயது தோழியால் வர்ணிக்கப்பட்டார். ஓபன்ஹெய்மர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை டாட்லாக்கிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

ஆனால் அவர் அவரை நிராகரித்தார். தீவிர அரசியலுக்கும், ஜான் டன்னின் கவிதைகளுக்கும் ஓப்பன்ஹெய்மரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். 1940 இல் உயிரியலாளர் கேத்தரின் “கிட்டி” ஹாரிசனை ஓப்பன்ஹெய்மர் திருமணம் செய்த பிறகு இருவரும் அவ்வப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கிட்டி, ப்ராஜெக்ட் Y இல் ஓப்பன்ஹெய்மருடன் சேரவிருந்தார். அங்கு அவர் கதிர்வீச்சின் ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஃபிளபோடோமிஸ்ட்டாக பணியாற்றினார்.

1939 ஆம் ஆண்டில், அரசியல்வாதிகளை விட இயற்பியலாளர்கள் அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தனர். மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கடிதம்தான் இந்த விஷயத்தை அமெரிக்க அரசின் மூத்த தலைவர்களின் கவனத்திற்கு முதலில் கொண்டு வந்தது. ஆனால், அதற்கான எதிர்வினை மிகவும் மெதுவாக இருந்தது, இருப்பினும் விஞ்ஞான சமூகத்தினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர். இறுதியில் இந்த விஷயத்தில் அதிபர் ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும் என வற்புறுத்தப்பட்டார்.

அதன் பின் அணு ஆயுதங்களுக்கான சாத்தியக்கூறுகளை இன்னும் தீவிரமாக ஆராய நியமிக்கப்பட்ட பல விஞ்ஞானிகளில், நாட்டின் தலைசிறந்த இயற்பியலாளர்களில் ஒருவரான, ஓப்பன்ஹெய்மரும் இடம்பெற்றார்.

செப்டம்பர் 1942 வாக்கில், அது போன்ற ஒரு வெடிகுண்டு சாத்தியம் என கண்டறியப்பட்டு, அந்த குண்டைத் தயாரிப்பதற்கான உறுதியான திட்டங்கள் வடிவம் பெறத் தொடங்கின. ஓப்பன்ஹெய்மர் குழுவிற்கு நன்றி என எல்லோரும் கூறினர், வெடிகுண்டு சாத்தியம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதன் வளர்ச்சிக்கான உறுதியான திட்டங்கள் வடிவம் பெறத் தொடங்கின.

பேர்ட் மற்றும் ஷெர்வினின் கூற்றின்படி, இந்த முயற்சிக்கு ஒரு தலைவராக அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வந்ததைக் கேள்விப்பட்டவுடன், ஓப்பன்ஹெய்மர், அதற்காகத் தன்னை தயார்படுத்தத் தொடங்கினார். “ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தொடர்பையும் நான் துண்டிக்கிறேன்,” என்று அந்த நேரத்தில் ஒரு நண்பரிடம் கூறினார்.

“நான் அவ்வாறு செய்யாவிட்டால், என்னைப் பயன்படுத்துவது அரசுக்குப் பெரும் சிரமமாக இருக்கும். தேசத்திற்காக என்னை பயன்படுத்திக்கொள்வதில் வேறு எதுவும் தலையிட நான் விரும்பவில்லை.”

ஐன்ஸ்டீன் பின்னர் ஒருமுறை கூறினார்: “ஓப்பன்ஹெய்மரின் பிரச்னை என்னவென்றால், அவர் தன்னை நேசிக்காத ஒன்றை – அமெரிக்க அரசை- நேசிப்பதே.”

அவரை அமெரிக்க அரசுப் பணியில் சேர்த்துக்கொண்டதில் அவரது தேசபக்தியும், நாட்டிற்காக அவர் செய்ய விரும்பிய செயல்களும் முக்கியப் பங்கு வகித்தன. மான்ஹாட்டன் பொறியாளர் மாவட்டத்தின் ராணுவத் தலைவரான ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ், அணுகுண்டுத் திட்டத்திற்கான அறிவியல் இயக்குநரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் இருந்தவர். 2002 ஆம் ஆண்டின் வாழ்க்கை வரலாற்றின் படி, க்ரோவ்ஸ் ஓப்பன்ஹெய்மரை அறிவியல் துறையின் தலைவராக முன்மொழிந்தபோது, ​​அவர் எதிர்ப்பைச் சந்தித்தார்.

ஓப்பன்ஹெய்மரின் “தீவிர தாராளவாத பின்னணி” கவலைக்குரியதாக இருந்தது. ஆனால் அவரது திறமை மற்றும் அறிவியலில் இருக்கும் அறிவைக் குறிப்பிட்டதுடன், க்ரோவ்ஸ் அவரது “வாழ்க்கை லட்சியத்தையும்” சுட்டிக்காட்டினார். மான்ஹாட்டன் திட்டத்தின் பாதுகாப்புத் தலைவரும் இதைக் கவனித்தார்: “அவர் விசுவாசமானவர் என்பது மட்டுமல்லாமல், அவர் தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் எதையும் தலையிட விடமாட்டார் என்றும் அதனால் அறிவியல் வரலாற்றில் அவரது பெயர் இடம்பெறும் என்றும் நான் உறுதியாக நம்பினேன்.”

1988 ஆம் ஆண்டில் அணுகுண்டு தயாரிப்பது பற்றி வெளியான ஒரு புத்தகத்தில், ஓப்பன்ஹெய்மரின் நண்பர் இசிடோர் ரபி, இது “மிகவும் சாத்தியமற்ற ஒன்று” என்று நினைத்ததாக மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால் பின்னர் இது “ஜெனரல் க்ரோவ்ஸின் அதிபுத்திசாலித்தனமான நடவடிக்கை” என்று ஒப்புக்கொண்டார்.

ராபர்ட் ஓபன்ஹைமர் மற்றும் ஜெனரல் லெஸ்லி க்ரோவ்ஸ் டிரினிட்டி சோதனை தளத்தில் எஃகு கோபுரத்தின் எச்சங்களை ஆய்வு செய்கிறார்கள்
என் கைகளில் ரத்தம் இருப்பதாக உணர்கிறேன்

லாஸ் அலமோஸில், ஓப்பன்ஹெய்மர் தனது முரண்பாடான, இடைநிலை நம்பிக்கைகளை எல்லா இடத்திலும் பயன்படுத்தினார். 1979 ஆம் ஆண்டு ‘வாட் லிட்டில் ஐ ரிமெம்பர்’ என்ற தனது சுயசரிதையில், ஆஸ்திரியாவில் பிறந்த இயற்பியலாளர் ஓட்டோ ஃபிரிஷ் இப்படிக் கூறியிருக்கிறார்: ஓப்பன்ஹெய்மர், அவருக்குத் தேவையான விஞ்ஞானிகளை மட்டும் சேர்த்துக்கொள்ளவில்லை. “ஒரு ஓவியர், ஒரு தத்துவஞானி மற்றும் சில சாத்தியமில்லாத பாத்திரங்களையும் சேர்த்துக்கொண்டார். ஒரு நாகரிக சமூகம் இவர்கள் அனைவரும் இல்லாமல் இருந்தால் அது முழுமையாக இருக்காது என ஓப்பன்ஹெய்மர் நினைத்திருந்தார்.”

போருக்குப் பிறகு, ஓப்பன்ஹெய்மரின் அணுகுமுறை முழுமையாக மாறியது. அணு ஆயுதங்களை “ஆக்கிரமிப்பு, பயங்கரம் போன்றவற்றை” உருவாக்கும் போர்க் கருவிகள் என்றும், ஆயுதம் தயாரிக்கும் தொழிலை “பிசாசின் வேலை” என்றும் அவர் விமர்சித்தார். அக்டோபர் 1945 இல் நடந்த ஒரு கூட்டத்தில், அவர் அதிபர் ட்ரூமனிடம் கூறினார்: “என் கைகளில் ரத்தம் இருப்பதாக நான் உணர்கிறேன்.” அவருக்குப் பதில் அளித்த அதிபர், “அந்த ரத்தம் என் கைகளில் இருக்கிறது. அதைப்பற்றி நான்தான் கவலைப்படவேண்டும்,” என்றார்.

இந்த பரிமாற்றம், ஓப்பன்ஹெய்மருக்கு மிகவும் பிடித்த பிரியமான பகவத் கீதையில், இளவரசர் அர்ச்சுனனுக்கும் கடவுளான கிருஷ்ணருக்கும் இடையே விவரிக்கப்பட்ட ஒரு மாபெரும் சூழ்நிலையை உணர்த்தியது. அர்ச்சுனன் சண்டையிட மறுக்கிறான். ஏனென்றால் அவன் தன் சகாக்களின் கொலைக்கு காரணமானவனாக இருக்கக்கூடாது என்று விரும்புகிறான். ஆனால் கிருஷ்ணர் அந்த மனச்சுமையை நீக்குகிறார்: “இந்த மனிதர்கள் அனைவரையும் கொல்பவன் நான் தான். கொலை செய்யும் கருவியாக மட்டுமே நீ இருக்கிறாய் அர்ச்சுனா. எனவே, வெற்றி, புகழ், ராஜரீக மகிழ்ச்சி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்து,” என்று அர்ச்சுனனிடம் கிருஷ்ணர் கூறுகிறார்.
ஓப்பன்ஹெய்மர் மீது விசாரணை நடத்திய அமெரிக்கா

அணுகுண்டு தயாரிக்கும் பணிகள் மெதுவாக முன்னேற்றமடைந்துவந்த போது, ​​ஓப்பன்ஹெய்மர் தனது சொந்த மற்றும் சக ஊழியர்களின் நெறிமுறைத் தயக்கங்களைத் தணிக்க இதேபோன்ற வாதத்தைப் பயன்படுத்தினார். விஞ்ஞானிகளாக, ஆயுதம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய முடிவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல என்று அவர் அவர்களிடம் கூறினார் – ரத்தம் இருந்தால் அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கும்.

இருப்பினும், தனது பணிகள் அனைத்தும் முடிந்ததும், இந்த நிலையில் ஓப்பன்ஹெய்மரின் நம்பிக்கை மெதுவாகக் குறைந்தது போல் தெரிகிறது. வரலாற்றாசிரியர்கள் பேர்ட் மற்றும் ஷெர்வின் தொடர்புபடுத்துவது போல, போருக்குப் பிந்தைய காலத்தில் அணுசக்தி ஆணையத்தில் அவரது பாத்திரத்தில், அவர் மேலும் ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக வாதிட்டார். இதில் மிகவும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு தயாரிப்பதற்காக அவர் தொடங்கிய பணிகளை தொடர்வதையும் கடுமையாக எதிர்த்தார்.

இந்த முயற்சிகளின் விளைவாக 1954 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு ஓப்பன்ஹெய்மர் மீது ஒரு விசாரணை நடத்தியது. அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. இது அரசின் கொள்கை தொடர்பான பணிகளில் அவர் ஈடுபடுவதை முழுமையாகத் தடை செய்தது. இதையடுத்து, கல்வித் துறை சார்ந்த சமூகம் அவரைப் பாதுகாக்க முன்வந்தது.

1955 இல் ‘தி நியூ ரிபப்ளிக்’ பத்திரிகைக்கு எழுதிய போது, தத்துவஞானி பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் , “அவர் தவறு செய்துள்ளார் என்பதை மறுக்கமுடியாது. அதில் ஆபத்து இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் விசுவாசமின்மை அல்லது துரோகமாகக் கருதக்கூடிய எந்தத் தவற்றையும் அவர் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. விஞ்ஞானிகள் சோகத்தில் சிக்கிக் குழப்பமானார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாது,” என்கிறார்.

1963 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு அவருக்கு அரசியல் மறுவாழ்வுக்கான ஒரு அடையாளமாக என்ரிகோ ஃபெர்மி விருதை வழங்கியது. ஆனால் அவர் இறந்து 55 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் அமெரிக்க அரசு 1954 இல் அவருக்கு எதிராக மேற்கொண்ட சில நடவடிக்கைகளை ரத்து செய்தது. மேலும், ஓப்பன்ஹெய்மரின் அமெரிக்கா மீதான விசுவாசத்தை உறுதி செய்தது.

ஓபன்ஹெய்மரின் வாழ்க்கையின் கடைசி பத்தாண்டுகள் முழுவதும், அணுகுண்டின் தொழில்நுட்ப சாதனை மற்றும் அதன் விளைவுகளினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி ஆகிய இரண்டையும் சமமாகப் பாவித்து வந்தார். மேலும், அந்த அணுகுண்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறிவந்தார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி 20 ஆண்டுகளை நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் நிறுவனத்தில் , ஐன்ஸ்டீன் மற்றும் பிற இயற்பியலாளர்களுடன் இணைந்து மேம்பட்ட ஆய்வுக்கான இயக்குநராகக் கழித்தார்.

ஓப்பன்ஹெய்மரின் பிரச்னை என்னவென்றால், அவர் தன்னை நேசிக்காத ஒன்றை – அமெரிக்க அரசை- நேசிப்பதே என்று ஐன்ஸ்டீன் கூறியிருந்தார்

லாஸ் அலமோஸைப் போலவே, அவர் இடைநிலைப் பணிகளை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பைக் காட்டினார். மேலும் அறிவியலுக்கு அதன் சொந்த தாக்கங்களை நன்கு புரிந்துகொள்வதற்கு மனிதநேயம் தேவை என்ற நம்பிக்கையை தனது உரைகளில் வலியுறுத்தினார். பேர்ட் மற்றும் ஷெர்வின் ஆகியோரின் கூற்றின் படி, இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர் கிளாசிக் கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் உளவியலாளர்கள் உட்பட பிற துறைசார்ந்தவர்களை நியமித்தார்.

அதிபர் ட்ரூமனின் வார்த்தைகளில், “பழைய யோசனைகளின் கட்டமைப்பில் கருத்தில் கொள்ள முடியாத ஒரு புதிய சக்தி மிகவும் புரட்சிகரமானது” என அவர் பின்னர் அணு ஆற்றலை அதன் காலத்தின் அறிவுசார் கருவிகளை விஞ்சிய ஒரு பிரச்சனையாக கருதினார்.

1965 இல் அவர் ஆற்றிய உரையில், பின்னர் 1984 ஆம் ஆண்டு வெளியான தொகுப்பில், “நம் காலத்தின் சில பெரிய மனிதர்களிடமிருந்து அவர்கள் திடுக்கிடக்கூடிய ஒன்றைக் காணும் போது, அவர்கள் பயந்ததால், அது சிறப்பானது என்று அவர்களுக்குத் தெரியும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார். அமைதியற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் தருணங்களைப் பற்றி பேசிய போது, ​​கவிஞர் ஜான் டன்னை மேற்கோள் காட்ட அவர் விரும்பினார்: “எல்லாம் துண்டுகளாக இருக்கின்றன. அதனால் அனைத்து ஒத்திசைவுகளும் போய்விட்டன.”

இந்த பயங்கரமான சூழ்நிலைகளின் மத்தியில் கூட, ஓப்பன்ஹெய்மர் தனது இளமைப்பருவத்தில் இருந்த “கண்ணீர் கறை படிந்த முகத்தோற்றதை” உயிர்ப்புடன் வைத்திருந்தார். “டிரினிட்டி” சோதனையின் பெயர், ஜான் டன்னின் கவிதையான ‘Batter my heart, three-person’d God’ என்பதிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது ‘நான் என்னைப் புதுமையாக்க, எழுந்து நின்று, என்னைத் தூக்கி எறிந்து, உங்கள் படையை உடைக்கவும், ஊதவும், எரிக்கவும்’ என அந்தக் கவிதை தொடர்கிறது.

ஜான் டன்னை அவருக்கு அறிமுகப்படுத்திய மற்றும் அவருடன் தொடர்ந்து காதலில் இருந்ததாக சிலரால் கருதப்பட்ட ஜீன் டாட்லாக், அணுகுண்டு சோதனைக்கு முந்தைய ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அணுகுண்டு திட்டம் எல்லா இடங்களிலும் ஓப்பன்ஹெய்மரின் கற்பனையாலும், அவரது காதல் மற்றும் சோக உணர்வாலும் குறிப்பிடப்பட்டது.

ஜெனரல் க்ரோவ்ஸ் ப்ராஜெக்ட் Y இல் வேலைக்காக ஓப்பன்ஹெய்மரை நேர்காணல் செய்தபோது அடையாளம் கண்டது அவரது ஒருவேளை ஆசையினால் இருந்திருக்கலாம். அல்லது ஒருவேளை அதை ஏற்றுக்கொள்ளும் அவரது திறமையாக இருக்கலாம். அணுகுண்டு தயாரித்தது ஒரு ஆராய்ச்சியின் விளைவாக இருந்தபோதிலும், அது ஓப்பன்ஹெய்மரின் திறன் காரணமாகவும், அதைச் செய்யக்கூடிய ஒரு நபராக தன்னை கற்பனை செய்யும் விருப்பத்தின் காரணமாகவும் ஏற்பட்ட விளைவாகும்.

ஓப்பன்ஹெய்மர் இளமைப் பருவத்திலிருந்தே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்நாளின் பிற்பகுதியில் காசநோயால் பாதிக்கப்பட்டார். 1967 இல் தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, தமது 62 வயதில் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எளிமையான ஒரு அரிய தருணத்தில், அவர் அறிவியல் என்பது புலமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றார். மேலும், கவிதையைப் போல் அல்லாமல், “அறிவியல் என்பது மீண்டும் அதே தவறைச் செய்யாமல் இருக்கக் கற்றுக் கொள்ளும் தொழில்,” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.