;
Athirady Tamil News

இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி- பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது!!

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட உள்ளது.

இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிரதமர் நேதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சீர்திருத்தம் ஜனநாயகத்தை சிதைக்கும் என அரசின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக நேதன்யாகு வெளியிட்ட வீடியோவில் எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி உள்ளார். துணை பிரதமர் லெவின்தான் இந்த நீதித்துறை மாற்றத்தின் மூளையாக இருக்கிறார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பான தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று இரவு இஸ்ரேல் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தி ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமுக்குள் அணிவகுத்து சென்று பாராளுமன்றத்திற்கு அருகில் முகாமிட்டனர். பாராளுமன்றம் சென்று தீர்மனம் மீது வாக்களிக்க ஏதுவாக சரியான நேரத்தில் பிரதமர் நேதன்யாகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. நோயாளியின் இதயம் பலவீனமாகி மிக மெதுவாகத் துடிக்கும்போது மயக்கம் ஏற்படும்.

இதுபோன்ற சமயங்களில் இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதயத்திற்கு மின் துடிப்புகளை அனுப்புவதன் மூலம், இந்த சாதனம் ஒரு நபரின் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்கும். பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்ட நோயாளிகள், சில நாட்களுக்குள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறைக்காக மருத்துவமனையில் குறைந்தது ஒருநாள் தங்கியிருக்க வேண்டும். பேஸ்மேக்கரின் செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்து உறுதி செய்தபின் வீடு திரும்பலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.