;
Athirady Tamil News

தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை – எம்.ஏ.சுமந்திரன்!!

0

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள்.
தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.

அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக அரசு கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள் இன்றைக்கு அந்த கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக அதை இல்லாத ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக் கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

மக்களுக்கு இந்த தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசை தாசன் போட்டியிட்டு இருந்தார். சூசை தாசன் என்பவர் 77 ஆம் ஆண்டு போட்டியிட்டு பெரு வெற்றியீட்டியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் 2010 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தோல்வி அடைந்திருந்தார்.அந்த தோல்விக்கான காரணத்தை 2012 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்ற போது அவரே சொல்லியிருந்தார்.

அவர் பேசுகின்ற போது சொன்னார் நான் தோற்றமைக்கு காரணம் கேட்கின்றார்கள். நான் தோற்றதற்கு காரணம் நான் தூள் கடத்துவதில்லை, நான் ஆள் கடத்துவதில்லை, நான் கொலை செய்வதில்லை அதனால் தான் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றேன் என்று சொன்னார்.

ஆனால் இன்றைக்கு தமிழரசு கட்சி மக்கள் முன்பாக ஒரு தூய்மையானதாக வந்து நிற்கின்றது. தூள் கடத்துபவர்கள் எங்கள் மத்தியில் இல்லை நீங்கள் தாராளமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிக்கலாம்.

இந்த தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம், சாராயம் விநியோகிக்க வேண்டாம் அப்படி செய்கின்ற பலர் இருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் இப்போது எங்களுடைய கட்சி இல்லை.

இப்போது வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் மக்களுக்கு சாராயம் விநியோகிக்க வேண்டாம் தூய்மையான சாத்வீக வழியிலான ஒரு போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுக்கினறது

நெடுங்காலமாக இலங்கை தமிழரசு கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சம்பந்தன் யார் நான் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.

1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார்.

எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.