;
Athirady Tamil News

ரணில் பிரதமரானதால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? (கட்டுரை)

0

ஒருபுறம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் பிரதமர் பதவிக்காக பலரும் கனவு கண்டுகொண்டிருக்க, இந்தக் கதைக்குள் சத்தமில்லாமல் திடீரென நுழைந்த ரணில் விக்கிரமசிங்க மிகச் சூட்சுமமான முறையில் பிரதமராகியுள்ளார்.

ஜனாதிபதியும் ஏனைய ராஜபக்‌ஷர்களும் ஒப்பீட்டளவில் தமக்கு பாதுகாப்பான ஒருவரை பிரதமராக நியமித்ததன் மூலம் ஆறுதலடைந்துள்ளனர். ஆனால், மக்களது எதிர்பார்ப்புக்கள், இறுதி இலக்குகள் நிறைவேறி, நிரந்தர ஆறுதல் கிடைக்குமா என்பதில் சந்தேகங்கள் இப்போதே மேலெழத் தொடங்கிவிட்டன.

கோட்டாபாய உள்ளிட்ட அனைத்து ராஜபக்‌ஷர்களையும் பதவி விலகுமாறு கோரி மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மிக வெற்றிகரமான முறையில் வேறு ஒரு மையப் புள்ளியை நோக்கி திசை திருப்பப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதவி விலகாதிருக்க, பிரதமர் மாறினால், பசிலும் சமலும் நாமலும் பதவி துறந்தால் போதுமானது என்ற தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டுள்ளது.
எல்லா தவறான தீர்மானங்களுக்கும் காரணகர்த்தா என ஜனாதிபதி கருதப்படுகின்றார். அதானாலேயே ‘கோட்டா கோ கம’ என்ற கோசம் உதயமானது. ஆனால், ‘நான் விலகமாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டு கோட்டா இன்னும் பதவியில் இருக்கின்றார்.

மக்கள் எதிர்ப்பலை பிரதமராகவிருந்த மஹிந்த மீது திருப்பி விடப்பட்டதால், அவர் பதவியிழந்து செல்ல வேண்டியேற்பட்டது, மக்கள் தரப்பிலிருந்து மஹிந்த மீது ஒப்பீட்டளவில் பெரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிராத போதும், அவர் கடைசித் தருணத்தில் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்.

மிக நாகரிகமான முறையில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களை குழப்புவதற்கு கொழும்புக்கு காடையர்களை அழைத்து வந்ததன் மூலம் பொதுஜனப் பெரமுன தரப்பு, தங்களது ஜனநாயக விரோதப் போக்கினை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, மக்கள் போராட்டங்கள் தொடர்பில் அவர்களுக்கு இருந்த அறிவிலித்தனத்தையும் வெளிச்சம்போட்டு காட்டியது.

ஏற்கெனவே, மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக எத்தனித்தார். யுத்தத்தை வென்ற ‘ஹீரோ’ பட்டம் ‘சீரோ’ ஆகிப்போவதற்கு இடையில் விட்டு விலகிச் செல்வோம் என்று அவர் நினைத்திருப்பார். இருப்பினும் மக்கள் எதிர்ப்புக்கு பயந்து அதைச் செய்ய அவர் விரும்பவில்லை.

‘கோட்டாவைத்தானே போகச் சொல்கின்றார்கள் நாம் ஏன் விலக வேண்டும்’ என்றும் அவர் நினைத்திருக்கலாம். ஆனால், கீழே இருந்தவர்கள் அவர் பதவி விலக விடவில்லை. இவர் போனால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று கூட்டுக் களவாணிகளும் சிறிய கள்வர்களும் நினைத்திருப்பார்கள் என்று அனுமானிக்க முடிகின்றது. எப்படியோ வெள்ளம் தலைக்கு மேலால் போய்விட்டதால், மஹிந்த வேறு வழியின்றி ராஜினாமாச் செய்தார்.

இதன்மூலம் அவர் மூன்று விடயங்களைச் செய்தார். முதலாவது ஜனாதிபதி கோட்டபாயவின் நிகழ்கால அரசியலை பாதுகாத்தார். நாமல் ராஜபக்‌ஷவின் எதிர்கால அரசியலை பாதுகாக்க முற்பட்டார். அத்துடன், தனக்கு மீதமுள்ள கொஞ்சநஞ்ச கௌரவத்தையாவது தக்க வைத்துக் கொள்ள முனைந்தார்.

பிரதமர் இராஜினாமாச் செய்த பிறகு, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை. பிரதமரை வெளியேறச் சொல்லி வலியுறுத்திய தரப்பினர் எல்லோரிடமும் அடுத்த பிரதமர் யார் ? வேலைத்திட்டம் என்ன? என்ற விடயங்கள் எல்லாம் கையில் இருந்திருக்க வேண்டும்.

முதலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராகலாம் என்ற கணிப்புகள் அதிகமிருந்தது. அனுர குமார திசாநாயக்க வழக்கம்போல சமூக வலைத்தள கருத்துக் கணிப்புக்களில் முன்னணியில் இருந்தார். இதற்கப்பால் கரு ஜயசூரிய, டளஸ், தினேஸ் போன்ற வேறுபலரின் பெயர்களும் அடிபட்டன.

ஆனால், ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்து ஒரே விடயத்தையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். ‘பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி வழங்கத் தயார்’ என்பதே அந்த தாரக மந்திரமாகும்.

மறுபுறத்தில், ‘ஜனாதிபதி பதவி விலகினாலேயே தாம் பொறுப்பேற்க தயார்’ என்று சாத்தியமற்ற ஒரு கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் அதற்கு நியாயங்கள் உள்ளன என்பது வேறுவிடயம்.

இந்த இழுபறிநிலை, உண்மையில் ராஜபக்‌ஷவினருக்கு சாதகமாகப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ராஜபக்‌ஷவினர் தமது எதிர்காலம் பற்றி அச்சப்படுவதாக தெரிகின்றது. அதனாலேயே அவர்கள் யாப்புத் திருத்தங்கள் பற்றிக்கூட சிந்தித்தார்கள் எனலாம்.

எனவே, தமக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஒருவரை அவர்கள் விரும்பினார்கள். அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க முதன்மைத் தெரிவாக இருந்தார். ரணிலை நியமிப்பது என்று முடிவெடுத்த பிறகு, அதனை நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டபாய அவசரப்பட்டார். காலம் பிந்தினால் அது சாத்திமற்றுப் போகலாம் என அவர் நினைத்திருக்கக் கூடும். பலரும் எதிர்த்ததையோ ஜனாதிபதி கண்டுகொள்ளவில்லை.

இந்தப் பின்னணியில், பெரும்பான்மையை நிரூபிப்பவருக்குத்தான் பிரதமர் பதவி என்று முன்னர் கூறிவந்த ஜனாதிபதி. ஒரேயொரு எம்.பி.யை, கொண்ட ஐ.தே.கட்சியின் தலைவரான (தேசியப்பட்டியல் எம்.பி.) ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

கடைசிக் கட்டத்தி;ல் சஜித் பிரேமதாசவின் ஆளுமை மீது பல சந்தேகங்கள் எழுந்தன. அவர் இந்த சுமையை தூக்கும் வல்லமை கொண்டவரில்லை எண்ணுமளவுக்கு போக்குகள் அமைந்திருந்தன. அந்த வகையில், ரணில் ஒரு நல்ல தெரிவாக பார்க்கப்படலாம்.

அவர் வந்த பிறகு டொலரின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில பொருளாதார குறிகாட்டிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ரணில் அல்லாமல் யார் புதிய பிரதமராக பதவியேற்றிருந்தாலும், இந்த சிறுமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதே யதார்த்தமாகும்.

அந்த வகையில், மக்களின் அவசர எதிர்ப்பாகவுள்ள பொருளாதார மீட்சிக்கு ரணில் அடித்தளமிடுவார் என நம்பலாம். அவரால் நாட்டின் பொருளாதாரம் சிறப்படையும் வாய்ப்புள்ளது. சர்வதேச தொடர்பும், பொருளாதார விவகாரங்களை சாதூரியமாக கையாளும் ஆளுமையும் சஜித்தை விட அவருக்கு உள்ளது.

ஆனால், மக்களின் இறுதி எதிர்பார்ப்பு இதுவல்ல! ‘அரகலய’ ஆர்ப்பாட்டக்காரர்களோ அல்லது இயங்குநிலையில் உள்ள மக்களோ ரணிலை பிரதமராக கொண்டு வருவதற்காக இந்த எழுச்சியை தொடங்கவில்லை. ஏன் சஜித் கூட அவர்களது தெரிவாக இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ராஜபக்‌ஷவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதுடன், நாட்டையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் கபடமற்ற புதிய ஆட்சியாளர்கள் உருவாக வேண்டும். அதன் ஊடாக இலங்கையில் ஆட்சி முறை மாற்றம் ஒன்றுக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதே இறுதி நோக்கமாக இருந்தது.

ஆனால், ரணிலை மீண்டும் அப்பதவிக்கு கொண்டு வந்ததன் மூலம் மக்களின் அந்த எதிர்பார்ப்பு தந்திரமான முறையில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய பிரதமரால் பொருளாதாரம் கொஞ்சமேனும் மீட்சி பெறும் என்று எதிர்பார்த்தாலும், அரசியல் ரீதியாகவோ ஆளுகை முறைமையிலோ மக்கள் பெரிய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது. அத்துடன், ராஜபக்‌ஷவினர் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை கனவில் கூட நினைக்கத் தேவையில்லை.

புதிய பிரதமரின் வருகை ராஜபக்‌ஷ குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு வரப்பிரசாதம் எனலாம். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷ தரப்பை ரணிலும், ரணில் (மற்றும் மைத்திரி) தரப்பை ராஜபக்‌ஷ குடும்பமும் பரஸ்பரம் பாதுகாக்கும் விதத்தில் திரைமறைவில் செயற்பட்டதை நாம் மறந்து விடவில்லை.

இம்முறை ரணில் விக்கிரமசிங்க அவ்விதம் செயற்படுவதற்கான புறச் சூழல்கள் இல்லை. அதனையும் தாண்டி, பல தரப்பினரும் அனுமானிப்பதைப் போல வழக்கம்போலவே இம்முறையும் அவர் செயற்படுவார் என்றால், எல்லா வகையிலும் மக்களை விட ராஜபக்‌ஷவினருக்கே அது இலாபமாக அமையும்.

இந்நிலையில், தமது சாம்ராஜ்யத்தை சரித்தமைக்காக கோட்டா, பசிலை நோக்கி மஹிந்த எதிர்வினையாற்றுவார் என்றும் பரவலாக ஒரு கதை உலாவுகின்றது.
இதற்கிடையில், இப்போதே அரசியல் குழப்பங்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன. பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே பிரதமரை நியமித்தமையால், இப்போது அதனைச் செய்வது பெரும்பாடாகியுள்ளது.

மொட்டுக் கட்சியின் ‘மறைமுகமான பிரதமர்’ போலவே புதிய பிரதமர் செயற்படுவார் என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. புதிய அமைச்சர்கள், பிரதம கொறடா, அவைத் தலைவர் நியமனங்களும் அதனை மெய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளன.

இந்நிலையில், அவர் ராஜபக்‌ஷ குடும்பத்தின் விசுவாசியாக செயற்படுவார் என்பதும், வழக்கம்போல இரகசிய காய் நகர்த்தல்களை மேற்கொள்வார் என்பதும், அத்துடன் அவரது மேற்குலக மர்ம உறவும், அவரை அரசியல் கட்சிகள் ஆழமாக நம்புவதற்கு தடங்கலாக உள்ளன.

இதேவேளை, சிறுபான்மையினர் விடயத்தில் ராஜபக்‌ஷவினருக்கும் ரணிலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஒருவர் வெளிப்பாடையாக செய்பவர். மற்றவர் மறைமுகமாக செய்பவர் என்பதுதான் வேறுபாடு.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இதற்கு நிறையவே கடந்தகால பட்டறிவுகள் உள்ளன. எனவே சிறுபான்மைக் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. ஆனால் ஆதரிக்கமாட்டாது என்று சொல்ல முடியாது. தாம் விரும்பிய பிரதமர் என்ற வகையில் மொட்டுக் கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ளது. வேறு கட்சிகள் இந்த அரசாங்கத்தில் பங்குபற்றவில்லை என்றால், மொட்டு ஆட்சியின் ‘இரண்டாம் பாகமாகவே’ இது அமையும்.

இந்தப் பின்புலத்தில், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், ராஜபக்‌ஷவினரின் அல்லது வெளிநாட்டுச் சக்திகளின் ஏவலுக்கு செவிசாய்ப்பவாரக செயற்படுவாராயின், ‘அரகலய் இண்டாம் பாகமும்’ காலத்தால் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.