;
Athirady Tamil News

மே18 இல் ‘புலிகள்’ ஏன் வந்தார்கள்? (கட்டுரை)

0

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பது சிங்கள மக்களை நிச்சயமாக கிலி கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால், ஏன் அதனை இந்த நேரத்தில் இந்தியா செய்தது என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி.

அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலேயே, இந்தப் புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுகிறது என்பதுதான் பொதுவான விமர்சனமாகும்.

மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்கக்கூடிய நிலைமை உருவாகியிருந்தது. இந்த நிலைமையானது, தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்துக்கும் அவர்கள் அனுபவித்த வலிகளுக்கும் ஒரு நிம்மதியான நிலையை ஏற்படுத்தும் என்பது உண்மை.

இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியானது, நாட்டின் அரசியல் உட்பட அனைத்து விடயங்களிலும் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாடு என்ற வகையில், இலங்கையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும்.

இந்தியா, ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் கொடுத்திருந்த தகவல், அத்தாக்குதல் நடைபெற்றிருந்தமையால் உண்மையானது. ஆனால், இந்தியத் தரப்பின் தகவல் பொய்யான சந்தர்ப்பம் ஒன்றை, கடந்த மே18 குறித்த தகவல் இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது, தமிழினப் படுகொலைக்கானதாகவே பார்க்கப்படுகிறது.

நாட்டின் சிறுபான்மை இனமான தமிழர்கள், குரூர யுத்தத்தை மூன்று தசாப்தங்களாக அனுபவித்து, 2009ஆம் ஆண்டில் போர் மௌனிக்கச் செய்யப்பட்டபோது பெரும் அழிவைச் சந்தித்தனர். இந்த அழிவை நினைவுகூருவதற்கான உரிமையை மறுக்க எண்ணுவதானது, ஓர் அப்பட்டமான மனித உரிமைகள் மீறலாகும்.

கடந்த நல்லாட்சி காலத்தில், தமிழர்கள் தங்களது நினைவுகளை மீட்டு அஞ்சலிப்பதற்கான உரிமை மறுப்பின்றி இருந்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு முதல் தடுக்கப்பட்டு வந்திருந்தது. இவ்வருடம் அதற்கான தடை ஏற்படுத்த முடியாத நிலைமை உருவானது தமிழ் மக்களிடம் ஆத்மாத்த நிம்மதியைக் கொண்டுவந்தது.

போரின் இறுதிக் கட்டத்தில் தொடர்ச்சியான செல் வீச்சுகள், வான் தாக்குதல்களின் காரணமாக பச்சிளம் பாலகர்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியோர் அடங்கலாக பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இது சிவிலியன்களின் இடங்களை இலக்கு வைத்த தாக்குதல்களாலேயே ஏற்பட்டது.

‘தாக்குதல் நடத்தப்படாது’ என அறிவிக்கப்பட்ட வலயத்துக்குள் இருந்த மக்கள் மீதும் இலங்கை அரசு இரசாயன குண்டுகளையும் கனரக ஆயுதங்களையும் பிரயோகித்த குற்றச்சாட்டு உள்ளது. இறுதி யுத்தத்தின் போது 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்காணோர் படுகாயமடைந்தனர்; உடல் உறுப்புகளை இழந்தனர்; உருச்சிதைவுக்கு உள்ளாகினர். பலர் இன்னும் உடல்களில் செல் துண்டுகளுடனும் சன்னங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

உணவும் மருத்துவ வழங்கலும் தடைபட்டதால், பசியும் பட்டினியும் வியாபித்திருந்தது. மக்களுக்கு உப்பில்லாக் கஞ்சிதான் வழங்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையிலேயே, மே18 நிகழ்வு வாரத்தின் போது ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் வேளையில், மக்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கொல்லப்பட்ட தமது உறவுகளின் உடலங்களை அப்படியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அதைவிடவும், போரின் இறுதியில், ஆயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டபோது, தமது பிள்ளைகள் உயிருடன் திரும்பிவருவார்கள் என்ற நம்பிக்கையில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட பலர், இன்னும் திரும்பி வராததுடன் அவர்கள் எங்குள்ளார்கள் என்பதும் தெரியாமலேயே 13 வருடங்கள் கடந்திருக்கின்றன.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டம், 2,000 நாள்களைக் கடந்துகொண்டிருக்கிறது. இன்னமும் இலங்கை மீதான மனித உரிமைகள், இன அழிப்புக் குற்றச்சாட்டுக்கான தண்டனை ஐக்கிய நாடுகளால் வழங்கப்பட்படவில்லை என்பது தமிழ் மக்களின் பெரும் குற்றச்சாட்டாகும்.

மூன்று தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழ் சமூகம் அனுபவித்த துன்பங்களையும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் ஓர் இனப்படுகொலையாக இன்னும் சர்வதேச சமூகத்தாலோ, அரசாங்கங்களாலோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மாறாக அது தொடர்பான முயற்சிகளையும், நினைவு அஞ்சலிகளையும் தடுத்து, அடக்கவே முயற்சிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டுவருகையில், சர்வதேச சமூகமானது, தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையை ஏற்று அங்கிகரிக்க வேண்டும். அதற்கான தண்டனையை வழங்கவேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கையில் தான், இந்தியத் தரப்பின் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பான எச்சரிக்கை வெளிவந்திருக்கிறது.

தமிழர் தரப்பானது, சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசிடமும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு வழங்க வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்; நீதி வழங்கப்பட வேண்டும். போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும். அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடன் விடுவிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை முடிவுறுத்தல் வேண்டும். அனைத்து வகையான காணி அபகரிப்புகளையும் உடன் நிறுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் மத, கலாசார தலங்களை ஆக்கிரமிப்பதை உடன் நிறுத்த வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று தங்களது உரிமைகள் சார்ந்ததும் இருப்பு சார்ந்ததுமான கோரிக்கைகளையே முன்வைக்கின்றனர்.

தமிழர்கள் அல்லல்பட்டது முள்ளிவாய்க்காலில் மாத்திரமல்ல என்பது, தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிந்திருந்தாலும் அது தொடர்பில் கைக்கொள்ளும் எந்த ஒரு விடயமும், தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதாக இல்லாமல், இலங்கை அரசின் நலனை முன்னிறுத்தியதாகக் காணப்படுவது தவறானது. இந்தத் தவறு ஏன் நடைபெறுகிறது என்பதே சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தூண்டுகின்றது.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் ஏற்பட்ட வலிகளை, அவர்கள் நினைவுகூருவது கூடக் குற்றம் என்று சொல்லும் கலாசாரம், எந்தவகையில் நீதியானது என்பதே தமிழ்த் தரப்பின் கேள்வியாகும்.

ஆனால், இந்தக் காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்பட்டமை, உண்மையில் ஒரு மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சிங்கள மக்களே நினைவுகூரலை நிகழ்த்த முன்வந்தமையும், தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்களில் அவர்களின் புரிந்துணர்வையும் சுட்டிக் காட்டிநிற்கின்றது.

மஹிந்த – கோட்டபாய அரசாங்கத்துக்கு எதிராக, இலங்கையில் ஏப்ரல் முதல் உருவான நெருக்கடியானது, இழந்துபோன தமது உறவுகளுக்காக தமிழர்கள் அஞ்சலி செய்வதில் உருவாகியிருந்த தடைகளைத் தவிர்த்திருக்கிறது. ஆனால், வெளியான புலிகளின் மீளுருவாக்கம் என்ற தகவல், வீண் முயற்சியாகிப்போனது என்பதே உண்மை.

இந்தத் தகவல் குறித்து வெளியான கண்டனங்களும் விமர்சனங்களும் அந்தப் பொய்ப்பிப்பிற்கான பதிலைக் கொண்டுவரவில்லை என்பதே இந்த இடத்தில் கவலையாகும்.

இந்த வகையில்தான் இந்தியாவின் ‘ த இந்து’ப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட விடயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்துவருகிறது. இச் செய்தியானது வெறுமனே தட்டிக்கழிக்கக் கூடியதாக இல்லாவிட்டாலும், பல்வேறு விதமாக இது குறித்து ஆராயப்பட்டாலும், அது இரண்டு புள்ளிகளை நோக்கியே இந்தச் சந்தர்ப்பத்தில் செல்லும்.

ஒன்று, தமிழ் மக்களின் மே18 முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலியை தடைசெய்வது.

மற்றையது, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டத்தைத் திசைமாற்றுவது. இருந்தாலும் இவை இரண்டுமே பொய்த்துப்போய்விட்டன.

அதே நேரத்தில், இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என்றும் புலிகளின் எழுச்சி குறித்தும் கடந்த வருடங்களில் பல தடவைகளில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் சிங்கள மக்களை ஏமாற்றும் வித்தைக்கும் முடிவு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது மாத்திரமே உண்மை.

இந்த இடத்தில், சிங்கள மக்களின் தொடர்ச்சியான தீவிரமான போராட்டம், வன்முறைப் போராட்டமாக மாறி, இப்போது தணிவு நிலையை எட்டியிருக்கிறது. இனியும் இது போன்ற வன்முறைகள் நடைபெறாமல் இருக்கவேண்டும். அவற்றைத் தடுப்பதற்கான தணிப்பதற்கான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைமை உருவாகியிருக்கின்ற வேளையில், இரங்கை அரசும் இந்தியாவும் சர்வதேசமும் தம்முடைய நிலைப்பாடு சார்ந்தும் மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய சந்தர்ப்பமாகவே இததைக் கொள்ளமுடியும்.

புலிகளின் மீளுருவாக்கம் சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு, சாத்தியமற்ற விடயங்கள் வீணே சாத்தியமானவைகளாகப் பார்க்கப்படுவதானது கற்பனைகளுக்கு வேண்டுமானால் கனகச்சிதமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.