;
Athirady Tamil News

21ஆவது திருத்தம்: பேசா மடந்தைகளாக முஸ்லிம் எம்.பிக்கள்!! (கட்டுரை)

0

யாராவது காணாமல் போய்விட்டால், ‘இந்த நபரைக் காணவில்லை’ என்று விளம்பரம் பிரசுரிப்பது போல, ‘முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களை காணவில்லை’ என்றும் ‘முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களை சமூகம் தேடுகின்றது’ என்றும் விளம்பரங்கள் பிரசுரிக்க வேண்டியுள்ளது.

இந்த விளம்பரங்களில், அவர்களது ஆளடையாளங்களைக் குறிப்பிட வேண்டுமாயின், பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருப்பார்கள், வெள்ளை நிற ஆடை அல்லது கோட்சூட் போட்டிருப்பார்கள், நன்றாக வாய்ச்சவடால் விடுவார்கள், பொய்யை உண்மையைப் போல பேசுவதில் திறமையாளர்கள்… என்று குறிப்பிட முடியும்.

பொதுவாக, தொலைந்து போகின்றவர்களில் பல இரகமானவர்கள் இருக்கின்றார்கள். வழிதவறியதன் மூலம் தொலைந்து போகின்றவர்கள், சந்தர்ப்பம் பார்த்து நழுவிப் போகின்றவர்கள், உள்நோக்கத்துடன் ஓடிப் போகின்றவர்கள் என, வகைப்படுத்தப்படுத்த முடியும்.

முக்கியமான காலகட்டத்தில், செயற்பாட்டுத் தளத்தில் காணாமல் போய்விடுகின்ற முஸ்லிம் எம்.பிக்கள், இதில் எந்த இரகமானவர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும்; மக்களுக்கும் தெரியும்.

இலங்கை, தொடர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. சின்னச் சின்ன அரசியல் மாற்றங்கள், நெருக்கடிகளில் இருந்து மக்களை ஓரளவுக்கேனும் மீட்டெடுக்கும் என்றும் புதிய பிரதமர் ஒரு ‘மீட்பர்’ ஆக இருப்பார் என்றும் நம்பியிருந்த மக்கள், ‘சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்து விட்டோமா’ என்று எண்ணுமளவுக்கே யதார்த்தங்கள் உள்ளன.

தேசிய அரசியலில் மக்களை உண்மையாக நேசிக்கின்ற, மக்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கிய மஹதீர் மொஹமட்களோ அல்லது நாட்டின் நலனைப் பற்றி மட்டும் சிந்தித்த லீ குவான் யூகளோ இன்னும் அதிகாரத்துக்கு வரவில்லை.

ஆட்சியாளர்கள் உள்ளடங்கலாக பெருந்தேசிய தலைவர்கள் எல்லோரும், தமக்கான அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர். இதுபோலத்தான், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைவர்களும் அந்தக் கட்சிகளைச் சார்ந்த எம்.பிக்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பிக்களும், செயற்பாட்டுக் களத்தில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

இலங்கையில், ஏதோ ஒரு வகையில் இதுவும் ஒரு நிலைமாறுகாலம் என்றே கருதலாம். இது நிலைமாறு காலமா? கஷ்ட காலத்தின் நீட்சியா என்பதை ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுகைதான் தீர்மானிக்கப் போகின்றது.

21ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பெருந்தேசியக் கட்சிகளும் அதன் தலைவர்களும் இதனை தம்முடைய நிகழ்கால, எதிர்கால அரசியல் அதிகாரத்துக்கான ஓர் ஏற்பாடாகப் பார்க்கின்றனர். தமக்குச் சாதகமானதை, இத்திருத்தத்தின் ஊடாகக் கொண்டு வர மனக்கணக்கு போடுகின்றனர்.

சிறுகட்சிகள், இதில் எவ்விதமான தாக்கம் தமக்கு ஏற்படும் என்பது பற்றி ஆராய்கின்றன. அதேநேரம், சிறுபான்மைக் கட்சிகள், இந்த உத்தேச திருத்தத்தின் முன்மொழிவுகள் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு எவ்வாறான சாதக பாதகங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டியுள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் வழக்கம்போல, இத் திருத்தத்தை உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகளை இதற்குள் எவ்வாறு புகுத்தலாம்? தீர்வை நோக்கி நகர்வதற்கான முதற்படியாக 21ஆவது திருத்தத்தை பயன்படுத்தலாமா? என்ற எல்லைவரை சிந்திப்பதாகத் தெரிகின்றது.

ஒவ்வொரு நகர்விலும், தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதற்காக, த.தே. கூட்டமைப்பு போன்ற அரசியல் அணிகள் கலந்தாய்வு செய்வதும், அதற்காக குரல் கொடுப்பதும் முன்மாதிரியான விடயம்.

மேலோட்டமாகப் பார்க்கின்ற போது, 21ஆவது திருத்தம் என்பது நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையிடுதல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவே தோன்றுகின்றது.

ஆனால், அதனை இன்னும் விசாலமாக நோக்க வேண்டியுள்ளது. அதாவது, அரசியலமைப்பில் ஒவ்வொரு திருத்தத்துக்கும் ஒரு பிரதான நோக்கம் இருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேறு சில உப திருத்தங்களையும் அரசியலமைப்பில் கொண்டு வரலாம்.

எனவேதான், உத்தேச திருத்தமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பாதையில், இது எவ்வாறான செல்வாக்கை செலுத்தும் என்பது பற்றித் தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்கின்றனர்.

தமக்கு விரும்பிய ஏற்பாடுகளை இதில் உட்புகுத்துவது சாத்தியப்படாவிட்டால் கூட, உத்தேச திருத்தம் எவ்வகையிலேனும் தமிழ் மக்களின் உரிமைகளை, அவர்களின் எதிர்பார்ப்புகளை நசுக்கிவிடுவதற்கான ஒரு நகர்வாக அமைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளனர். இந்த அக்கறையும் கவனமும், முஸ்லிம் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏன் கொஞ்சம் கூட இல்லை என்பதைத்தான், இந்த பத்தி வினவுகின்றது.

பெரும்பான்மைக் கட்சிகளாலும் தமிழ்க் கட்சிகளாலும் மிக உன்னிப்பாக நோக்கப்படுகின்ற ஒரு முக்கிய திருத்தத்தை, முஸ்லிம் அரசியல் அணிகள் கண்டும் காணாதது போல் இருப்பதும், அதுபற்றிய தம்முடைய கருத்துகளை முன்வைக்காதிருப்பதும் மிக மோசமான ஒரு கையறு நிலையாகும்.

தேர்தல் காலத்தில் முஸ்லிம் தலைவர்கள், வேட்பாளர்கள், தாங்கள்தான் இந்தச் சமூகத்தின் காவலர்கள், மீட்பர்கள் என்பார்கள். உயிர் போனாலும் உரிமைக்காக குரல்கொடுப்போம் என்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்து, அவர்களுக்கு பதவி கிடைத்து விட்டால், இந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்து விடுகின்றன. கடந்த தேர்தல்களிலும் இதுதான் நடந்தது, அடுத்த தேர்தலிலும் இதுதான் நடக்கப் போகின்றது.

பாராளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதங்களை பெறுகின்ற முஸ்லிம் எம்.பிக்கள், அதற்குக் கைமாறாக மக்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. 20 பேர் பாராளுமன்றத்தில் இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையேனும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, காத்திரமாக உரையாற்றுவதை காணக் கிடைப்பதில்லை.

‘பேரம் பேசும் அரசியல்’ என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் பதவிக்காகவும் வேறு சிலவற்றுக்காகவும் சோரம் போயிருப்பதால், ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, எதிரணியில் இருந்தாலும் சரி ‘நாவிழந்து’ போயிருக்கின்றார்கள்.

அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கப்பால் அரசியல் நகர்வுகள் கொண்டு வரப்பட்டாலும் இதில் தமக்கு, தமது கட்சிக்கு என்ன இலாபம் என்று யோசிக்கின்றார்களே தவிர, இதனால் சமூகத்துக்கு என்ன நடக்கும் என்று சிந்தித்து செயற்படுவதில்லை. அப்படிப்பட்ட யாரையும் எம்.பி.க்களாக முஸ்லிம்கள் தெரிவு செய்யவில்லை.

சுருங்கக் கூறின், ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்துக்கும் எதிரணியில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிக்கும் முட்டுக் கொடுப்பதையே கடந்த 25 வருடங்களாக செய்து வருகின்றார்கள். இதனால் அவர்கள் உழைத்திருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் இன்னும் அந்த இடத்திலேயே நிற்கின்றது.

மிக முக்கியமான காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருத்தமாக, உத்தேச 21ஆவது திருத்தத்தை எல்லோரும் நோக்குகின்றனர். ஆனால், முஸ்லிம் எம்.பிக்கள் பேசாமடைந்தைகளாக இருக்கின்றனர்.

முன்னைய திருத்தங்களை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற விடயத்தில், சமூகத்திற்கு அறிவூட்டாமலும் தாங்கள் தெளிவுபெறாமலும் முட்டாள்தனமாகச் செயற்பட்டதைப் போல, 21ஆவது திருத்தம் தொடர்பிலும் செயற்படப் போகின்றார்களோ என்ற நியாயமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

“21ஆவது திருத்தத்தின் இறுதி வரைவு கிடைக்கப் பெறவில்லை. கிடைத்தவுடன் ஆராய்ந்து, எமது கருத்தை, நிலைப்பாட்டை முஸ்லிம் தரப்பினர் வெளிப்படுத்துவார்கள்” என்று அவர்கள் பக்கத்தில் இருந்து கூறப்படுவதாக தெரிகின்றது.

அது சரிதான்! ஆனால், உத்தேச திருத்தத்தில் எதுவெல்லாம் இருக்கும் என்ற விடயம், இப்போது பொது அரங்கில் பரவலாகப் பேசப்படுகின்றது. இதைவிட அதிகமான இரகசிய தகவல்களும் எம்.பிக்களுக்குக் கிடைத்திருக்கும்.

எனவே, 21ஆவது திருத்தத்தில் எதுவெல்லாம் உள்ளடங்கி இருக்கலாம், உள்ளடக்கக் கூடாது என்பதை, முஸ்லிம் எம்.பிக்கள் இப்போது சொல்ல முடியும். அதைவிட முக்கியமாக, இத்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு நன்மை தரக்கூடிய ஏதாவது ஒரு மிகச் சிறிய ஏற்பாட்டையாவது கொண்டுவர முடியும் என்றால், அதையும் கூட்டாக இணைந்து செய்ய வேண்டும்.

அவசரமாக 21ஆவது திருத்தத்தை கொண்டுவர முனைப்புக்காட்டப்படுகின்ற சூழலில், “கடைசி வரைபு கிடைத்தவுடனேயே கருத்துத் தெரிவிக்க ஆரம்பிப்போம். அதன் பின்னரே ஆராய்ந்து முடிவு எடுப்போம்” என்று முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் சொல்வதில் அர்த்தமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.