;
Athirady Tamil News

நூற்றாண்டை கடந்த மலையக அரசியலின் மாறாத தலைவிதி! (கட்டுரை)

0

மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்களின் அடையாளம் குறித்த தேடல் பல போராட்டங்களின் வடிவில் பல கட்டங்களை கடந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள்,இந்திய வம்சாவளித் தமிழர்,மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப் பேசப்பட்ட சொற்பதங்களில் அரச அங்கீகாரம் ‘இந்தியத் தமிழர்’ என்ற சொல்பதமே!

எந்தவொரு அடிப்டை உரிமைகளைகளையும் பெறாது நாளடி சுவற்றில் வாழும் இந்த லயத்து வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியோடு மலையக மக்கள் தமது வாழ்நாளை கடந்து வருகின்றனர்.

அன்று தொடக்கம் இன்று வரை அதாவது பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை அனைத்து அரச ஆவணங்களிலும் ‘இந்தியத்தமிழர்’ என்ற பெயர் தான் பிரகடனப்படுத்தப்பட்ட பெயராக உள்ளதுடன், இதில் இன்றுவரை எவ்வித மாற்றமின்றி தொடர்கின்றனர்.

மலையக அரசியல் பல தொழிங்சங்க குடும்பங்களையும் அவர்கள் சார்ந்தோரையும் வாழ வைத்து வரும் நிலையில் மலையக மக்களை வாழ வைப்பதற்கான அரசியலுக்கான பாதையை மக்களே தீர்மானிக்கும் கட்டத்தில் உள்ளனர்.

இந்த ‘மலையகமும் அரசியலும்’ என்ற தொடர் கதையில் மலையகம் தமது அடையாளத்துக்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதற்கு விரைவில் முடிவு காணாவிடின் மலையகத் தமிழினத்தின் தலைவிதி மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.

மலையகத்தில் படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதில்லை என்கின்ற மாயையை உருவாக்கி சகலருக்கும் தலைமை கொடுக்கின்றோம் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும் மலையகத்தில் ஆரம்பத்தில் இருந்தே அறிவார்ந்த அரசியலை முன்வைத்துச் செயற்பட்ட பல ஆளுமைகளை அடையாளம் காட்ட முடியும். மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை எனும் பொய்யான மாயையை உருவாக்கி அவ்வாறு வருபவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்கள் என்பதே மெய். இதற்கு மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் அவசியம்.

(1919 ஆம் ஆண்டிலிருந்து 1935 ஆம் ஆண்டு வரை மலையக அரசியலின் முதலாவது கட்டமாகும்)

அதாவது, 1920 களில் மலையகத்தில் அரசியல் செயற்பாட்டு தொடக்கத்தை வழங்கி சட்டசபையிலும் அரசவையிலும் அங்கம் வகித்த மலையக தேச பிதா கோ. நடேசய்யர் கற்றறிந்த ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமாவார்.

(1935 – 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது கால கட்டமாகும்)

1936 ஆம் ஆண்டு தொழில் மற்றும் வாணிப அமைச்சராக இருந்த கண்டி பன்விலையைச் சேர்ந்த மலையகத்தவரான பெரி.சுந்தரம் என்பவராவார். அவர் அந்த நாளிலேயே லண்டன் பரிஸ்ட்டர் எட் லோ எனும் பட்டம் பெற்றவர்.

(1947 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரை மூன்றாவது கால கட்டம்)

1947 ஆம் ஆண்டு பாராளுமன்றில் உறுப்பினராக இருந்த ஜி. ஆர். மோத்தா, டி. ராமானுஜம், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் கற்றறிந்த அறிவார்ந்த அரசியல் முன்வைப்புகளைச் செய்தவர்களே. அவர்களது விவாதங்களை ஹன்சார்ட் அறிக்கையிலே உள்ளடங்கியுள்ளது.

1960 களில் வி.கே. வெள்ளையன் போன்ற கல்வியாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக செயற்பட்டார்கள். தேர்தலிலும் அவர் போட்டியிட்டார் . இலங்கை திராவிட இயக்க முன்னோடி ஏ. இளஞ்செழியன், பாடசாலை அதிபரின் சட்டத்தரணி இர. சிவலிங்கம் போன்ற மலையகத்தலே காத்திரமான அரசியலை முன்வைத்தவர்களே.

(1977 தொடக்கம் 2009 வரையிலான காலகட்டம் நான்காவது காலகட்டம்)

1980 களில் வி.டி. தர்மலிங்கம், பி.ஏ.. காதர், மு. சிவலிங்கம், ஏ. லோறன்ஸ் போன்றவர்கள் அரசியலில் முனைப்புடன் செயற்பட்டவர்களாவர். 1990 களில் பி.பி.தேவராஜ் போன்றவர்கள் ராஜாங்க அமைச்சர்களாக இருந்தார்கள். அவர் லண்டனில் உயர் கல்வி கற்கப் போய் அரசியல் ஈர்ப்பால் அதனையே தொடர்ந்தவர்.

2010 ஆண்டு பாராளுமன்றத்திலும் கூட சட்டத்தரணி ராஜதுரை அங்கம் வகித்தார்.

இவ்வாறு எல்லா காலத்திலும் மலையகத்தில் கற்றிவாளர்களின் அரசியல் பிரசன்னம் இருந்து வந்துள்ள நிலையில், மலையகத்தில் அறிவார்ந்த அரசியலை முன்கொண்டு செல்லாமல் தமது அரசியல் அதிகார பலத்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக மலையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதில்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள் சகலருக்கும் தலைமை கொடுக்கும் அரசியல் தலைமைகள் என மரபுசார் அரசியலை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், தற்போது மலையக மக்கள் வரலாற்று ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறையை புறரீதியாகவும்,சாதி ரீதியான ஒடுக்குமுறை, உள்ளக வர்க்க ஒடுக்குமுறை என்பனவற்றினை அக ரீதியாகவும் முகம் கொடுக்கின்றனர்.

ஆகவே ஒரே சமயத்தில் இனவிடுதலையும்,வர்க்க விடுதலையும்,அரசியல் விடுதலைக்காகவும் உரிமைக்கோரி போராட வேண்டிய நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் இந்த மலையக மக்களின் கசப்பான வரலாற்றின் மறுப்பக்கமாக தற்போது துளிர்விட்டிருக்கும் மலையக புரட்சி அரசியலானது ,அரசியல் அனுபவமின்றி வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ள மலையக அரசியல்வாதிகளே தம்மக்களை பகடை காய்களான பயன்படுத்தி இலாப அரசியலை கச்சிதமாக நகர்த்தி வருகின்றனர்.

வெறுமனே தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதிகளால் இந்த மக்களின் நாளடி சுவற்றினை நிரப்பாமல் பொறுப்பு வாய்ந்த தலைமைகளாக மலையகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் சுய இலாபமற்ற அரசியலை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மலையக தலைமைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் ஒன்றை கோரி நிற்கும் மக்களுக்கு மலையக அரசியலின் மாற்றம் தேவை என்பதினை மலையக அரசியல் தலைமைகள் உணர வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.