;
Athirady Tamil News

பிறவிக்கண் குறைபாடுகள்!! (மருத்துவம்)

0

மரபணு சேர்க்கை முதல் பிரசவ நேரம் வரை நடக்கும் பல தாக்குதல்களில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையின் கண்கள் பாதிக்கப்படலாம். கருவில் இருக்கும்போது 3 வாரங்கள் முதல் 9 வாரங்கள் வரை கண்கள் வளர்ச்சி அடையும் காலம். அந்தக் காலகட்டத்தில் உட்கொள்ளும் மருந்துகள், தாக்கும் நோய்கள் இவற்றால் லென்ஸின் வளர்ச்சியில் அல்லது கண்களின் விழித்திரை, கருவிழி இவற்றில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் சில குழந்தைகள் பிறப்பிலேயே கண்பார்வைத் திறனின்றி பிறக்கின்றன.

பிறப்பின் போது பார்வையின்மை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானது லென்சை பாதிக்கும் பிறவிக் கண்புரை.கண்ணில் உள்ளிருக்கும் சிறிய கண்ணாடி போன்ற பகுதியான லென்ஸ், கருவில் துவங்கி மனித ஆயுள் முழுவதும் வளரக்கூடிய தன்மையுடையது. இந்த லென்ஸ் தன் கண்ணாடி போன்ற தன்மையை(Transparency) இழந்து ஒளிபுகாததாக மாறினால் அதுவே கண்புரை எனப்படும். பிறவிக் கண்புரைகளில் மூன்றில் ஒரு பங்கு பரம்பரையாக நிகழ்வது. சொந்தத்தில் திருமணம் செய்வோரின் சிசுக்களில் இந்த பிரச்சனையை அதிகம் காணலாம்.

இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தடுப்பதற்காகத்தான் நெருங்கிய உறவுக்குள் சம்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். கருவுற்றிருக்கும் தாய்க்கு சத்துக் குறைபாடுகள் ஏற்படுவது இன்னொரு முக்கிய காரணம். தாய்க்கு ஏற்படும் கிருமித்தொற்று, தாய் உட்கொள்ளும் ஸ்டீராய்டு, தாலிடோமைடு போன்ற மருந்துகள், கருவுற்றிருக்கும் தாய் கதிர்வீச்சுக்கு ஆளாவது இவற்றாலும் பிறவி கண்புரை ஏற்படலாம். கிருமித்தொற்றுகளில் முதன்மையானது ருபெல்லா எனும் வைரஸ் தொற்று. கர்ப்ப காலத்தில் ருபெல்லா பாதித்த தாய்மார்களில் 50 சதவிகிதம் பேருக்குக் கண் புரையுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

ருபெல்லா என்பது சாதாரண சளி காய்ச்சல் போன்று தோன்றி 3 நாட்களில் தானாகவே கடந்து விட்டிருக்கும். தாய் அதனை சாதாரண சளி என்று நினைத்து கடந்திருப்பார். கருத்தரித்திருக்கையில் முக்கியமான உறுப்புகள் வளரும் காலமான 4 முதல் 8 வாரங்களுக்குள் ருபெல்லா தாக்கினால் இதயக் குறைபாடுகள், காது கேட்கும் திறன் குறைபாடு, இவற்றுடன் பிறவி கண்புரை மூன்றும் இணைந்து சிசுவை பாதிக்கும். மரபணு மற்றும் தாய் சார்ந்த காரணிகள் தவிர குழந்தையின் உடல் நிலையில் உள்ள காரணிகளும் பிறவிக் கண்புரையில் முக்கியமானவை.

நஞ்சுப்பையின் சில பாதிப்புகளால் பிராண வாயு குறைவாக கிடைத்தல், பிறப்பின் போது நிகழும் சிறு காயங்கள், தவிர உடலின் வேறு பல முக்கிய குறைபாடுகளுடன் இணைந்தும் கண்புரை காணப்படலாம்.குழந்தையின் முதல் வயதிற்குள் ஏற்படும் சத்துக் குறைபாடுகள், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் (Metabolic disorders) இவற்றாலும் லென்சில் புரை ஏற்படலாம். இதனை வளர்பருவத்துப் புரை என்கிறோம். பிறவிக் கண்புரைக்கு இத்தனை காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் பிறவியில் கண்புரை பாதித்த சிசுக்களில் 50 சதவிகிதம் பேருக்குக் காரணங்கள் ஏதும் கண்டறிய முடிவதில்லை.

கண்புரை என்பது ஒரு கண்ணை மட்டுமின்றி இரண்டு கண்களையும் சேர்த்து பாதிக்கலாம். காரணிகளைத் தெரிந்து கொண்ட பின் முடிந்த அளவு பிறவிக் குறைபாடுகளைத் தவிர்க்க முயல வேண்டும். அப்படி மீறிக் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை மிகவும் அவசியம். கண்ணில் அல்லது உடலில் வேறு எதுவும் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். கண்புரை பாதித்த குழந்தைகளுக்கு கண்ணின் அளவு சிறுத்து இருத்தல், கண் அழுத்த நோய், விழித்திரைக் குறைபாடு போன்ற பிற கண் நோய்களும் சேர்ந்து இருக்கலாம்.

ரத்தத்தில் சர்க்கரை, கால்சியம், டார்ச் ப்ரொஃபைல் எனப்படும் சில கிருமிகளுக்கான பரிசோதனை இவற்றையும் செய்வார்கள். சிறுநீர் பரிசோதனை மூலம் சில வளர்சிதை மாற்றங்களைக் கண்டறியலாம். பரிசோதனைக்குப் பின் முடிந்த அளவு விரைவில், அதிகபட்சமாக குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்குள் கண்புரை பாதித்த லென்ஸை நீக்கிவிட வேண்டும். பெரியவர்களுக்கு செய்வதுபோல குழந்தைகளில் பெரும்பாலும் செயற்கை லென்ஸ் உடனடியாக பொருத்தப்படுவதில்லை. சிறிது காலம் கண்ணாடி அணிந்து பின் உரிய சூழ்நிலை ஏற்படும்போது மற்றும் ஒரு அறுவை சிகிச்சையின் போது லென்ஸ் பொருத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன். பிறந்து ஒரு மணி நேரமே ஆன சிசு ஒன்றினை மகப்பேறு மருத்துவர் என்னிடம் அனுப்பி வைத்திருந்தார். இரு கண்களிலும் வெள்ளையாகத் தெரிகிறது என்று பதறியபடியே நான்கைந்து உறவினர்கள் வந்தனர். சோதித்துப் பார்த்ததில் குழந்தைக்கு கண்புரை இருப்பது உறுதியானது. குழந்தையின் பெற்றோர் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தவர்கள் என்பதையும் வந்திருந்தவர்கள் மூலமாக அறிந்தேன். படங்களுடன் அவர்களுக்கு நிலைமையை விளக்கி உடனடியாக செய்ய வேண்டிய பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சை பற்றி எடுத்துக் கூறினேன்.

ஐந்து பேரிடமிருந்தும் ஐந்து விதமான எதிர்வினைகள். அவ அம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாளே… ஆபரேஷன் எல்லாம் வேண்டாமே… பச்சை பிள்ளைக்கு போய் இத்தனை டெஸ்ட் பண்ணணுமா… ஏற்கனவே ஒரு கஷ்டத்தை கடவுள் கொடுத்துட்டார்.. இன்னமும் பிள்ளையை கஷ்டப்படுத்தவா… நமக்கு விதிச்சது அவ்வளவுதான்னு விட வேண்டியதுதான். நாங்க கூட சொந்தத்துலதான் கல்யாணம் பண்ணிகிட்டோம். எங்க பிள்ளைகளுக்கு எல்லாம் இப்படி ஆகலையே… இப்படி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள்.

அவர்கள் தரப்பில் இருந்து பார்த்தால் இவை அனைத்தும் நியாயமான வாதங்கள்தான். குழந்தையின் நலனையும் எதிர்காலத்தையும் உத்தேசித்து விரைந்து களத்தில் இறங்க வேண்டும். சரி செய்யத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் மூளையின் பார்வைக்கான பகுதி பாதிக்கப்படும். கண் மூலமாக உணரப்படும் ஒரு படிமம் சென்று பதிவாகும்போதுதான் இந்த பகுதி தூண்டப்படும். கண்புரையின் காரணமாக இந்தத் தூண்டுதல் நடைபெறவில்லை என்றால் நிரந்தர பாதிப்பு ஏற்படும். என்ன சிகிச்சை அளித்தாலும் முழு பார்வை கிடைக்காது.அல்பினிசம் என்ற பிறவி மரபு வழி நோயில் உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் இருக்கும். கண்களில் உள்ள நிறமி செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதிலும் கண் பார்வை பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கும். குழந்தை கருவில் இருக்கையிலேயே கண் அழுத்தம் அதிகரித்து அதனால் கருவிழி முழுவதும் ஒளி உட்புகா நிலை ஏற்படக்கூடும். பிறக்கும் போது வெண்மையான கருவிழியோடு குழந்தை பிறக்கும்.

உடனடியாக சிகிச்சையைத் துவங்கினால் ஓரளவு பார்வையை மீட்டெடுக்க முடியும். பிறவிக் கண் நோய்களில் 80 சதவீதம் முற்றிலும் தடுக்கக் கூடியவை. தடுக்க முடியாத 20 சதவீத நோய்களையும் விரைந்து செயலாற்றினால் பார்வை ஓரளவுக்கேனும் கிடைக்கச் செய்யலாம். குழந்தைக்கு இதய நோய், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினால் அதை உடனடியாக ஏற்றுக் கொள்வர் பெற்றோர். ஆனால், கண்ணுக்கு அறுவைசிகிச்சை என்றால் கொஞ்சம் தாமதிக்கும் மனப்போக்கு நிலவி வருகிறது. சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை விட மிகவும் எளிதானவை குழந்தைகளுக்கான கண் சிகிச்சைகள். ஆரம்பகட்ட அச்சத்தையும் தொடர்ச்சியாக பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டியதன் நடைமுறை சிக்கல்களையும் பொறுத்துக்கொண்டால் சிசுக்களைப் பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றலாம்.

பிறவிக் கண் நோய்களில் 80 சதவீதம் முற்றிலும் தடுக்கக் கூடியவையே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.