;
Athirady Tamil News

2 பெண் டாக்டர்கள் திருமணம் செய்ய முடிவு – மோதிரம் மாற்றி மாலை அணிவித்து நிச்சயதார்த்தம்…!!!

0

மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பரோமிதா முகர்ஜி. இவரது தோழி சுரபிமித்ரா.

இவர்கள் இருவரும் டாக்டர்கள். ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள். அதனால் அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்களே அதுபோல அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.

லெஸ்பியன்களாக மாறிய அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்துள்ளனர். ஒன்றாக டாக்டராக மாறிய அவர்கள் நாக்பூரில் பணி புரிந்து வருகிறார்கள். ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். வாழ்க்கையின் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

நானும், மித்ராவும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதை ஒளிவுமறைவின்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதை சொல்வதில் எங்களுக்கு வெட்கம் இல்லை. எங்களுக்குள் நல்ல உறவு இருப்பதை கடந்த 2013-ம் ஆண்டே எனது தந்தையிடம் சொல்லி விட்டேன்.

மோதிரம் மாற்றி மாலை அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட டாக்டர்கள்

சமீபத்தில்தான் எனது தாயாரிடம் இதை தெரிவித்தேன். முதலில் எனது தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிறகு எனது தந்தை மூலம் அவருக்கு புரிய வைத்தேன். இப்போது அவர்கள் இருவரும் நான் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று எனது திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.

வாழ்நாள் முழுக்க நாங்கள் சேர்ந்து இருப்போம். இந்த ஆண்டுக்குள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். அல்லது அடுத்த ஆண்டு நிச்சயம் எங்கள் திருமணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் சுரபிமித்ரா கூறுகையில், “எனது குடும்பத்தில் நான் லெஸ்பியனாக இருப்பது தெரியும். எனவே எனது திருமணத்துக்கு அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நான் உளவியல் படித்தவள். மக்களின் மனநிலை எனக்கு தெரியும்.

நீண்ட யோசனைக்கு பிறகே நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். கடைசி வரை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

டாக்டர்கள் பரோமிதா முகர்ஜி, சுரபிமித்ரா இருவரும் உடனடியாக நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 29-ந்தேதி நாக்பூரில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். இதையொட்டி நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இருவரது வீட்டு உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு லெஸ்பியன் தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.