;
Athirady Tamil News

சீனா எமது உயிர்த் தோழன்: பிரதமர் மஹிந்த !!

0

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இரப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைத்தனர்.

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கக்கூடியதுடன், தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 6.00 மணிவரை அங்கு தங்கியிருக்கலாம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி’ இதன் ஒரு அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சீன தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ யினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் நாமல் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட ‘இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி’க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பரிசளித்தார்.

கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விளையாட்டுத்திறன் இணைக்கப்பட்டமை இருநாட்டு பிரதிநிதிகளதும் பாராட்டிற்கு உட்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.