;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல்- ராகுல் காந்தி முன்னிலையில் மனுதாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்கா..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவை மேல்சபை செயலாளரும், ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியுமான பி.சி. மோடியிடம் அளித்தார். யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேல்சபை எதிர் கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, ஆ.ராசா, கலாநிதி வீரா சாமி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சியின் கே.டி.ராம ராஜன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனுதாக்கல் செய்துள்ள யஷ்வந்த் சின்கா நாளை (28-ந்தேதி) முதல் பல மாநிலங்களின் தலைநகரங்களுக்கு சென்று பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனாதிபதி மாளிகைக்கு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ போல் செயல்படுபவருக்கும் மேலாக ஒருவர் தேவைப்படுகிறார். தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது மத்திய அரசின் சர்வாதிகார கொள்கைகளை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாகும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எனது பொது வாழ்வில் நீண்ட அனுபவத்தின் படி தனிநபர் ஒருவரின் நிலையை உயர்த்துவது ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யாது. அரசின் கொள்கைகளை பொருத்தே ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டி என்பது எனது தனிப்பட்ட மோதல் அல்ல. நமது ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அபாயத்துக்கு உள்ளாகி இருக்கும் இன்றைய சூழலில் நாட்டை காக்க மக்கள் விழித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.