;
Athirady Tamil News

மூணாறு அருகே நிலச்சரிவில் கோவில், கடைகள் சேதம்- 450 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!!

0

கேரள மாநிலம் பெட்டிமுடியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 70 பேர் உயிரிழந்தனர். அந்த பாதிப்பு மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் அதே நாளில் இன்று மூணாறு அருகே உள்ள குண்டலா எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- கேரள மாநிலம் மூணாறு-வட்டவாடா பாதையில் உள்ளது குண்டலா எஸ்டேட். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் சுமார் 175 குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. நேற்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த வழியே சென்றவர்கள் இதனை கவனித்து விட்டனர். உடனடியாக அவர்கள் தொழிலாளர்களை உஷார்படுத்தினர். இதனை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை வேகமாக நடந்தது. அங்கிருந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால் சுமார் 450 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீட்கப்பட்டவர்களுக்காக புதுக்குடியில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பலரும் தங்க வைக்கப்பட்டனர். சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். நிலச்சரிவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டாலும் இடிபாடுகளில் சிக்கி அந்தப் பகுதியில் உள்ள 2 கடைகள் மற்றும் கோவில்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. மேலும் மூணாறு-வட்டவாடா வழித்தடமானது பெரிய பாறைகள் மற்றும் சேறுகளால் முற்றிலும் மூடப்பட்டது. இதனால் வட்டவடா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா கூறுகையில், இரவு வேளையில் பயணித்தவர்கள் நிலச்சரிவை பார்த்து எச்சரித்ததால், மீட்பு நடவடிக்கை உடனே நடந்தது. இதனால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னரே நிலைமையை மதிப்பிட முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.