;
Athirady Tamil News

எட்டி உதைத்த அதிகாரி: ஆணைக்குழு அதிரடி !!

0

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இச்சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ வீரரும் குறித்த பொதுமகனை தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை செப்டெம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் அமுல்படுத்தி அறிவிக்குமாறு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரும் ஆணைக்குழுவின் தலைவருமான ரோஹினி மாரசிங்க அறிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து ஆணைக்குழுவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

யக்கப்பிட்டிய எரிபொருள் நிலையத்தில் முறையாக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்டறியவும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர், பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு இராணுவ அதிகாரிகள் பொதுமகன் ஒருவரை பிடித்து இராணுவ லெப்டினன்ட் கேணல் பிரதி விராஜ் குமாரசிங்கவிடம் ஆஜர்படுத்திய போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.