;
Athirady Tamil News

முஸ்லிம்களுக்கு தூரநோக்குடனான அரசியலின் தேவை

0

மொஹமட் பாதுஷா

மக்களை மையமாகக் கொண்ட நீண்டகால திட்டமும் தூரநோக்கும் இல்லாத அரசியலின் விளைவுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவிப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி, யார் முன்வைப்பது? அவற்றிற்கு எவ்வாறு தீர்வைப் பெறுவது என்பதெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகியுள்ளன.

முன்னைய காலங்களில் எம்.பி.க்களாக இருந்தவர்கள் தமது பதவிக்காலம் முடிந்தவுடன், அரசியலை விட்டு தமது சொந்த வாழ்க்கைக்குள் ஒதுங்கிக் கொண்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும், பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்கான மூலோபாயங்கனை இன்றுவரை கடைப்பிடிக்கின்றனர்

முஸ்லிம் கட்சிகளிலும் சரி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற ஏனைய பெருந்தேசிக் கட்சிகளிலும் சரி புதிதாக தெரிவான முஸ்லிம் எம்.பி.க்களில் 95 சதவீதமானவர்களுக்கு சமூகத்திற்கு இருக்கின்ற நீண்டகால, குறுங்கால பிரச்சினைகள், அபிலாஷைகள், அவற்றின் ஆழஅகலங்கள் தெரியாது.

அவர்களில் அரைவாசிப் பேருக்கு வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள், இருக்கின்றன என்ற விடயம் கூட தெரியாது.

தனித்துவ அடையாள அரசியல் வழிவந்த முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளிடம் முறையான திட்டமொன்று இல்லாத காரணத்தினாலும் பெருந்தேசியக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பி.க்கள் அந்தக் கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்பதற்கு முன்னுரிமை கொடுத்ததாலும் இன்று முஸ்லிம்கள் ஒருவித கையறு நிலைக்கு வந்திருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கான அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த தேக்கம், பின்னடைவு, மேற்சொன்ன காரணங்களால் ஏற்பட்டதே தவிர, என்.பி.பி. அலையினால் ஏற்பட்டது எனக் கூற முடியாது. முஸ்லிம் அரசியலில் மக்கள் வெறுப்புற்றிருந்ததால் அந்த சந்தர்ப்பத்தை ‘திசைகாட்டி’ பயன்படுத்திக் கொண்டது என்பதுதான் யதார்த்தமாகும்.

ஒரு சமூகம் என்ற அடிப்படையில் ஆய்வுகள், கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நீண்டகால திட்டமிடல்கள் தேவை, அன்றாடங்காய்ச்சி தொழிலாளியைப் போல சமூக அரசியலைக் கொண்டு செல்ல முடியாது.

அப்படிச் செய்வது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதற்கான ஒத்திகையையே நிகழ்காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் பதச்சோறாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லலாம்.

முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகள், தளபதிகள் மற்றும் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் எம்.பிக்களிடம் முறையான குறுங்கால பணித்திட்டங்கள் இல்லை.
அதுபோலவே, அடுத்த வாரம் என்ன நடக்கப் போகின்றது?

இன்னும் 10 வருடங்களில் இலங்கையின் அரசியல் சூழல் எவ்வாறு இருக்கப் போகின்றது? அதனை நோக்கி ஒரு சமூகமாக முஸ்லிம்கள் எவ்வாறு நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்று எந்த தூரநோக்குடன் தயாரிக்கப்பட்ட நீண்டகால அரசியல் திட்டங்கள் அறவே கிடையாது.

நிரந்தரத் தொழிலற்ற நாளாந்த கூலித் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். அடுத்த மாதம் பிள்ளையின் வகுப்பிற்கு எப்படிக் கட்டணம் செலுத்தப் போகின்றோம் என்று அவர்களுக்கு எந்தவிதமான திட்டமிடல்களும் இருக்காது.

ஒரு நாளைக்கு மேசன் வேலைக்கு போவார்கள். மறுநாள் தச்சு வேலை செய்வார்கள். திருவிழா, பெருநாள் வந்து விட்டால் நடைபாதை கடை விரிப்பார்கள். அவர்களின் நோக்கம், இன்றைய பொழுதை தமது குடும்பம் பசியின்றி கழிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும்.

இது அவர்களை தரக் குறைவாக குறிப்பிடும் கருத்தல்ல இதுதான் நிதர்சனமாகும். எது எப்படியாயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் இதே பாணியிலான அரசியலை செய்து கொண்டு காலத்தை வீணடிப்பதை முஸ்லிம்கள் ஒரு சமூகமாக கண்டும் காணாமல் இருக்க முடியாது.

பெருந்தேசிய அரசியலில் சிங்கள மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பாரிய திட்டங்கள் தேவையில்லை. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சிங்கள மக்களின் நலனை புறககணித்துச் செல்லும் ஒரு ஆட்சியை எந்த அரசாங்கமும் ஒருக்காலும் மேற்கொள்ளாது.

ஆயினும், சிங்கள அரசியல்வாதிகளும் சரி, செயற்பாட்டு அரசியலுக்கு வெளியில் இருந்து அழுத்தக் குழுக்களைப் போல செயற்படுகின்ற தரப்பினரும் சரி, பௌத்த தேசியவாத சிந்தனையின் வழித்தடத்தில் ஆட்சியாளர்கள் பயணிக்கின்றார்களா என்பதை விழிப்புடன் தொடர்ந்து அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.

சிங்கள மக்களின் நலன்கள் எந்த தருணத்திலும் பாதிக்கப்படாத வகையில் தூரசிந்தனையுள்ள நகர்வுகளைச் செய்கின்றனர். அது சிறுபான்மையினருக்கு இனமேலாதி;க்கமாக தோன்றுவது வேறு விடயம். ஆனால் பெருந்தேசியத்தின் சிந்தனையோட்டத்ததில் அதற்கு நியாயங்கள் உள்ளன.

தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஆரட்சியை அமைப்பதற்கும், அதனை புறந்தள்ளி ஆட்சியாளர்கள் செயற்படுகின்ற போது அதற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இதற்கு பல சம்பவங்கள் உதாரணங்கனாக உள்ளன.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான அரசியல் நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது. ஆயுதப் போராட்டம் ஒரு கட்டத்தில் வழிமாறிப் போனது என்பதையும், நடைமுறைச் சாத்தியமற்ற கோஷங்களுக்காக தமிழ் மக்கள் இழப்புக்களைச் சந்தித்தார்கள் என்பதையும் தவிர்த்துப் பார்த்தால், தமிழ்த் தேசிய அரசியலில்; கொள்கைப் பிடிப்பையும் திட்டமிடலும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவே தெரிகின்றது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட தீர்வுத்திட்டம் பற்றிப் பேசுகின்றார்கள், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுகின்றார்கள். சமஷ்டி வேண்டுமென்றும் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். முதலமைச்சர் வேட்பாளர்கள் பற்றியெல்லாம் உரையாடல்களை ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால், இது விடயத்தில் முஸ்லிம்களின் அரசியல் இன்னும் கற்றுக்குட்டித் தனமாக வாளாவிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. இவை பற்றிய உரையாடல்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் நடத்தவும் இல்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு, இனப் பிரச்சினை தீர்வு பற்றி பிரதான முஸ்லிம் தலைவர்கள் இன்னும் வாயைத் திறக்கவும் இல்லை.

அபிவிருத்தி அரசியலுக்கு ஆசைப்பட்டு உரிமை அரசியலையும் இழந்து, இரண்டும்கெட்டான் நிலையில் முஸ்லிம் சமூகம் நிற்கின்றது.

புதிய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பின்னர் முஸ்லிம் கட்;சித் தலைவர்கள். எம்.பி.க்கள், அரசியல்வாதிகளை அழைத்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், குறைகளை கேட்டறியவில்லை. என்..பி.பி. ஊடாக மட்டும்தான் முஸ்லிம்களின் விடயங்கள் கையாளப்பட வேண்டும் என்ற பாணியில் செயற்படுகின்றது.

மறுபுறத்தில், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், தனித்துவ கட்சிகளின் எம்.பி.க்கள் இதுவரை ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை பேசுவதற்கு முயற்சி செய்ததாகவோ அதனை ஜனாதிபதி தரப்பு நிராகரித்ததாகவோ அவர்கள் அறிவிக்கவில்லை. அப்படியென்றால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது?

99 சதவீதமான அல்லது அதைவிட அதிகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது அல்லக்கைகள் மற்றும் தீவிர ஆதரவாளர்களும் அப்படித்தான் நம்ப வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால், நிஜம் அப்பேர்ப்பட்டதல்ல. சமூக அக்கறையின்மை, சுயநலத்தை முன்னிலைப்படுத்தும் போக்குகள் மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட விவகாரங்கள், அடிப்படைப் பிரச்சினைகள், அதன் பின்னணி, வரலாறு என பல விடயங்கள் இவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

பெருந்தேசிய அரசியலில் இடம்பெறும் நகர்வுகள் விடயத்தில் அநேகமானோர் கிணற்றுத் தவளையாகவே இருக்கின்றனர்.

இன்னும் 50 வருடங்களுககுப் பிறகு 20 வருடங்களுக்குப் பிறகு நாம் எப்படி இருக்கப் போகின்றோம், அதற்கு இப்போதிலிருந்தே எவ்வாறு நம்மை தயார்படுத்தி செயற்பட வேண்டும் என்று திட்டமிட்டு வாழ்கின்ற இனக் குழுமங்களும் மக்கள் பிரதிநிதிகளும் உலகில் உள்ளனர்.

ஆனால், இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தலைகீழாக உள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள தரப்பினரும் காரணமாவார்கள்.

இனியாவது இந்த நிலைமைகள் மாற வேண்டும். தூரநோக்குடன் திட்டமிடப்பட்ட அரசியலை முஸ்லிம் சமூகம் முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. அதைவிடுத்து, அன்றன்றைக்கான அன்றாடக்காய்ச்சி அரசியலையே தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தால், முஸ்லிம்களின் எதிர்கால அரசியல், சமூக, ஏன் பௌதீக ரீதியான இருப்புக்கூட கேள்விக்குறியாகலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.