;
Athirady Tamil News

அரசியல் கட்சிகளின் பணமோசடி; வருமான வரி துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை..!!

0

இந்திய தேர்தல் ஆணையம், போலியான முறையில் நன்கொடை பெறுவது மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பணமோசடியில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்படி வருவாய் துறைக்கு கடிதம் வழியே கேட்டு கொண்டது. இதன்படி, நாடு முழுவதும் ஏறக்குறைய ஆறேழு மாநிலங்களில் வருமான வரி துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி, பல்வேறு நகரங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. சட்டவிதிகளுக்கு உட்படாமல், நன்கொடைகளை பெறுவது உள்ளிட்ட தீவிர நிதி முறைகேட்டில் இந்த அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருமான வரி துறை அறிக்கை ஒன்றின்படி, 2018-19-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 199 அரசியல் கட்சிகள் ரூ.445 கோடி மதிப்பிற்கு வரி விலக்கு பெற்றுள்ளன. இதுவே, 2019-20-ம் ஆண்டில் இதுபோன்ற 219 அரசியல் கட்சிகள், வருமான வரி துறையிடம் இருந்து ரூ.608 கோடி வரி விலக்கு பெற்றுள்ளன.

இவற்றில் 66 கட்சிகள் மட்டுமே ரூ.385 கோடி வரை வரி விலக்கு பெற்றுள்ளன. சட்டவிதிகளின்படி, இந்த அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நிதி பெற்றதற்கான அறிக்கைகளை, ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு இதனை செய்ய வேண்டிய கட்சிகள், அப்படி செய்யவில்லை. இவற்றில் ஒரு சில கட்சிகள் தலா ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலும் வரி விலக்கு பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து, கருப்பு பணம் பயன்பாட்டில் இருந்து விடுபடும் வகையில் மற்றும் முறையான தேர்தலை நடத்தும் வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ் குமார், சட்டவிதிகளின் கட்டமைப்புக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு, மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை தனியாக பிரித்து தயாரிக்கப்பட்ட பட்டியல் தொகுப்பினை அனுப்பி வைத்துள்ளார். இதுபோன்று போலியான முறையில் நன்கொடை பெறுவது மற்றும் வரி மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டு, விதிகளை மீறியதற்காக 87 அரசியல் கட்சிகளை அதற்கான பட்டியலில் இருந்தே கடந்த மே மாதத்தில் நீக்கி, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.