;
Athirady Tamil News

மம்தா பானர்ஜியா இப்படி? ஆச்சரியமா இருக்கே… பிரதமர் குறித்து சட்டசபையில் நம்பிக்கை பேச்சு..!!

0

மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘பல தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தொழிலதிபர்கள் பயத்தில் ஓடுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி இதைச் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்காது என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. சிபிஐ தங்கள் அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கிறது.

இந்த விஷயத்தில் சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் பாரபட்சமான செயல்பாடுகளுக்கு எதிரானது” என்றார். அதேசமயம் சிபிஐ சோதனைகள் குறித்து மம்தா பேசும்போது, ‘உங்கள் தலைவரின் வீட்டில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன?’ என பல ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவேந்து அதிகாரியை குறித்து பேசினார். விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.